கலித்தொகைப் பாடல்கள் 22

 

ரசனைக் குறிப்புகள் 22

இரவில் வராதே ; பகலில் வா!

 

‘தாக்கிய வரிப் புலியை வென்ற யானையானது

மலையோரத்தில் வலியோடு தூங்குகையில்

நனவிலே செய்த அப் புலிப் போர்

அப்போதும் மனத்தில் இருந்ததால்

அதைக் கனவிலும் கண்டு

அது திடுக்கிட்டு எழுந்தது.

 

‘எதிரே பூத்திருந்த வேங்கை மரத்தை

நிஜப் புலியென நினைத்து

அதை முருக்கி அழித்துச் சினம் தணிந்தது.

பின் அம் மரத்தை காணும்பொழுதில்

நிமிர்ந்து காண நாணித்

தலைகவிழும் நாடனே’

என விளித்து தோழி சொல்கிறாள்:

 

மலர்போன்ற விழிகொண்ட இவள்மேல்

நீ இவ்வளவு காதல் கொண்டுள்ளாய் என்பது

அறிகையில் இனிமையான விஷயம்தான்.

ஆனால்

இடியென்றும் மழையென்றும் பாராமல்

மின்னலையே ஒளியாகக் கொள்ளும்படியான

கடுவழியில்

நீ வருவது துயர் தருவதாகும்.

 

இவளை இன்புறச் செய்யும் நீ

இவள்மாட்டு இவ்வளவு அன்பு கொண்டுள்ளாய் என்பது

அறிகையில் இனிமையான விஷயம்தான்.

ஆனால்

மேகங்கள் தவழும் மலை அடுக்கத்தில்

வாசனை தவழும் மார்போடு

அணங்குகள் நடமாடும் வழியில்

நீ வருவது துயர் தருவதாகும்.

 

இருள்போல் கருங்கூந்தல் கொண்ட இவளிடம்

நீ இவ்வளவு கருணை கொண்டுள்ளாய் என்பது

அறிகையில் இனிமையான விஷயம்தான்.

ஆனால்

ஒளிமிகு வேல் வலக்கை கொண்டு

தனியாக வரும் எண்ணமுமின்றி

யானை நடமாடும் வழி கடந்து

நீ வருவது

துயர் தருவதாகும்.

 

அதனால்

இவளது அகன்ற மென் முலைகளைத் தழுவ

நீ இரவில்தான் வரவேண்டும் என்பதில்லை.

மலர்கள் கொட்டும் மரங்கள் நிறைந்த

அவ்விடத்துக்கு நீ பகலிலும் வரலாம்.

 

(குறிஞ்சிக் கலி: 13)

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்