கலித்தொகைப் பாடல்கள்... 16

 

 

ரசனைக் குறிப்புகள்

16

வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே!

 

பலராமனது தோளிலுள்ள மாலைபோல்

வெண்கடம்ப மரத்திலுள்ள மயில்

அழகாக ஆடிக்கொண்டிருக்கிறது.

நரம்பு முறுக்கிக் கட்டப்பட்ட யாழ்போல்

தேனுண்ணும் வண்டுகளும் தும்பிகளும்

ஆர்த்துக்கொண்டிருக்கின்றன.

தோட்டத்தில் பூத்த மலர்களில்

தேர்ந்து தேனுண்ண

சுரும்புகளை

‘வா… வா!’வென பூங்கொம்பர்கள்

அழைக்கின்றன.

குயில்களும்

ஆங்காங்கிருந்து கூவுகின்றன.

எங்கும் ‘ம்’மென்ற இசையொலிப்பு.

இவ்வாறாக

காமன் விழாக் கொண்டாடும் வேளையுள்ள

இளவேனில் வந்தது.

ஆனால் காதலர் வரவில்லையேடி!

 

சிறிது சிறிதாக என் நுதல் முழுவதும் பசந்தது.

சிறிது சிறிதாக என் தோள்களும் மெலிந்தன.

சாரல் வீசும் காலமெனக் கண்டு

என் கண்களும் வெய்ய நீர் உகுத்தன.

மலை கடந்து சென்றவர் வரவை

எதிர்பார்த்தேங்கிய என் நெஞ்சு

முலைகளிடை தீயாய்க்

கனன்றெழுகிறது.

 

காதலையே மறந்தாரா?

ஒரு தூதனுப்பவும் நினைக்கவில்லையே!

இவ்வாறான அடுக்கடுக்கான சோகங்களால்

அவர் வரும்வரையாவது

நான் உயிருடன் இருப்பது

கூடுமா?

எதுதான் நடக்கப் போகிறதோ?

என்று

கேட்கிறாயே தலைவி,

நானென்ன சொல்வேன்?

ஆண்கள் அவ்வண்ணம்

செல்கிற செல்கிற இடங்களிலே

தங்க நேர்வது இயல்புதான்.

ஆனால்

அவருக்கு முன்பாக

அவர் குறித்துச் சென்ற நாள் வந்து

உன் அழகை

அழித்துவிடப்போகிறதே என்பதுதான்

என் நெஞ்சில்

வேள்வித் தீபோல்

கனலெழ வைக்கிறது.

 

கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராஅத்து

நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,

வடிநரம்பு இசைப்பபோல் வண்டொடு சுரும்பார்ப்பத்

தொடுமகள் முரற்சிபோல் தும்பிவந்து இமிர்தர,

இயன்எழீஇயவைபோல எவ்வாயும் ‘இம்’மெனக்

கயனணி பொதும்பருள் கடிமலர்த் தேனூத

மலராய்ந்து வயின் வயின் விளிப்பபோன் மரனூழ்ப்ப,

இருங்குயில் ஆலப் பெருந்துறை கவின்பெறக்

குழவிவேனில் விழவு எதிர்கொள்ளும்

சீரார் செவ்வியும் வந்தன்று,

வாரார் தோழி நம் காதலோரே!

 

பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல்,

சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்;

நனியறல் பொழுதென வெய்ய

பனியறல் வாரும் என் கண்;

மலையிடைப் போயினர் வரன்நசைஇ நோயொடு

முலையிடைக் கனலும் என் நெஞ்சு;

காதலிற் பிரிந்தார் கொல்லோ? வறிதோர்

தூதொடு மறந்தார் கொல்லோ? நோதகக்

காதலர்க் காண்பாம் கொல்லோ?

துறந்தவர் ஆண்டாண்டு உறைகுவர் கொல்லோ? யாவது,

நீளிடைப் படுதலும் ஒல்லும், யாழநின்

வாளிடைப் படுத்த வயங்கீர் ஓதி!

நாளணி சிதைத்தலும் உண்டு என நயவந்து

கேள்வி அந்தணர் கடவும்

வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே!

 

(பாலைக் கலி: 36)

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்