எனக்குப் பிடித்த சிறுகதைகள்
(இலங்கையும், புலம்பெயர் நாடுகளும்) புலப்பெயர்வு, இடப்பெயர்வு, போரினதும் அது முடிந்த அழிவுகளின் மத்தியிலுமென பல்வேறுபட்ட கனத்த சூழ்நிலைமைகளிலிருந்து பெரிதாக நம்மிடையே இலக்கியம் பிறக்கவில்லையென பொதுவான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. இலக்கியப் பரப்பளவில் ஓரளவு இது உண்மையேயானாலும், ஆழமான பல சிறுகதைகளும், கவிதைகளும், எழுத்துகளும் இக் கடினங்களைப் பிளந்து பிறந்திருக்கின்றன என்பதை பெருமையாகச் சொல்லமுடியும். என் வாசிப்பில் அவ்வப்போது நான் எதிர்ப்பட்ட இவ்வகையான சிறுகதைகளை முதல்கட்ட முயற்சியாக எனது வலைப்பூவில் பதிவேற்ற எண்ணியதின் விளைவே ‘எனக்குப் பிடித்த சிறுகதைகள் (இலங்கையும் புலம்பெயர் நாடுகளும்)’ என்ற இந்தப் பகுதி. தோசை வட்டமாக இருப்பதே இசைவும் இணக்கமும் கொண்டது போலவே சிறுகதைக்கும் அதன் வடிவம் முக்கியம். அதை மட்டுமே முதன்மைப்படுத்தி எனது தேர்வுகள் இருக்காதபோதும், படைப்பாளியோ பதிப்பகமோ செய்த வகைமைப்பாட்டினை ஒதுக்கி என் தேர்வு அமைவதை நான் இங்கே குறிப்பிடவேண்டும். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்ற சிறகதையின் புராதன வரையறைவுகளில் பெரிய உடன்பாடு எனக்கில்லை. அதுபோல் அவை முற்றுமுழுதாக ஒதுக்கப்படவேண்ட...