கலித்தொகைப் பாடல்கள் 32

 

ரசனைக் காட்சிகள்: 32

ஒரு பெருங் கருங் கூத்து!

 

ஏடி, நேற்றிரவு ஒரு பெரும் வேடிக்கை

சம்பவித்தது.

எங்களூரில் வழக்கமாக

நடப்பதுதானென்றாலும்,

நேற்று நடந்ததோ

ஒரு பெருங் கருங்கூத்து.

 

மனிதரெல்லாரும் மடிந்துவிட்டதுபோல்

இந்த உலகம் இருளிலும் அமைதியிலும்

இருந்துகொண்டிருக்கிறது.

அழகிய போர்வையொன்றால்

என்னை மூடிக்கொண்டு

என் காதலன் சொன்ன குறியிடத்தில்

அவனுக்காக

நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

 

அப்போது,

முண்டிதமான தலையும்,

போர்த்த மேனியும்,

நோயில் அழுகி அழுகி

குறைபட்ட அங்கங்களோடுமாய்,

ஊரில் இருக்கிறானே

ஒரு முடமான பார்ப்பனக் கிழவன்,

அவனிடம் எச்சரிக்கையாயிருக்கும்படி

நீகூடச் சொல்லியிருந்தாயே,

அவன் வந்தெதிர்ப்பட்டான்.

 

என்னை அதில் கண்டு

குழைந்தான்;

பணிந்தான்;

‘நேரமற்ற இந்த நேரத்தில்

யார் இவ்விடம் நிற்பது?’ என்றான்.

வைக்கோலைக் கண்ட மாடுபோல

விலகிப்போகாமல் அதிலேயே நின்றுகொண்டு,

‘பெண்ணே, வெற்றிலை போடுகிறாயா, இந்தா’வென

வெற்றிலைப் பையை எடுத்து

என்புறம் நீட்டினான்.

 

நான் ஒன்றும் பேசாது நின்றுகொண்டிருக்க,

‘சின்னப் பெண்ணே,

இன்று நீ வசமாக மாட்டிக்கொண்டாய்.

நீயும் நானும் பிசாசுகளாக்கும்.

என்னை ஏற்காமல் வருத்துவையானால்

இவ்வூரிலே நீ எந்தப் பலியும் பெறாதவாறு

நானே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வேன்’ என

வாய்க்கு வந்ததெல்லாம்

சொல்லிக்கொண்டு நின்றான்.

 

அந்த நேரம் பார்த்து

கீழே குனிந்து ஒரு பிடி மண்ணெடுத்து

அவன்மேல் விசிறினேன்.

அவன் அலறிக்கொண்டு நின்று

புலம்பத் தொடங்கினான்.

 

புலிக்கு விரித்த வலையில்

ஒரு குள்ளநரி அகப்பட்டதுபோல் ஆயிற்று.

என் காதலனைக் கண்டபாடும் இல்லை,

இவ்வாறு துன்பம் செய்வதையே

வாடிக்கையாய்க் கொண்ட

அந்தக் கிழட்டுப் பார்ப்பானின் கூத்தால்

கலங்கவும் ஆயிற்று.

 

 

(இது தோழிக்கு தலைவி கூறிய பாடலாகும். தலைவனை வந்து வரைவு கொள்ளும்படி செய்ய தலைவியும், தோழியும் சேர்ந்து செய்த நாடகமிது. இது குறிக்கும் வரிகள் பாடலில் இல்லை. ஆனாலும், இது யார் யாருக்குக் கூறிய பாடல், எச் சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதையெல்லாம் உரைகாரர் புரிந்துகொள்வதற்கான தரவுகள் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உண்டு.)

 

திருந்திழாய், கேளாய்! நம்மூர்க்கெல்லாம் சாலும்

பெருநகை! அல்கல் நிகழ்ந்தது ஒருநிலையே.

மன்பதை யெல்லாம் மடிந்த இருங்கங்குல்,

அந்துகில் போர்வை அணிபெறத் தைஇ, நம்

இன்சாயல் மார்பன் குறிநின்றேன் யானாகத்

தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,

காரக் குறைந்து கறைப்பட்டு வந்து, நம்

சேரியிந் போகா முதுமட பார்ப்பானைத்

தோழி, நீ போற்றுதியென்றி, அவன் ஆங்கே.

 

பாராக், குறழாப், பணியாப், பொழுதன்றி

யாரிவண் நின்றீர்? எனக்கூறிப் பையென

வைகாண் முதுபகட்டின் பக்கத்தின் போகாது,

தையால், தம்பலம் தின்றியோ? என்று தன்

க்கழித்துக் கொண்டீ எனத் தரலும், யாதொன்றும்

வாய்வாளேன் நிற்பக்,  கடிதகன்று கைமாறிக்

கைப்படுக்கப்பட்டாய் சிறுமி, நீ மற்று யான்

ஏனைப் பிசாசு, அருள் என்னை நலிதரின்

இவ்வூர்ப் பலிநீ பெறாது கொள்வேன்

எனப்பலவும் தாங்காது, வாய்பாடி நிற்ப,

முதுபார்ப்பான் அஞ்சினனாதல் அறிந்து யான் எஞ்சாது

ஒரு கை மணல்கொண்டு மேல்தூவக் கண்டே

கடிதரற்றிப் பூசல் தொடங்கினன் ஆங்கே

ஒடுங்கா வயத்தின் கொடுங்கேழ்க் கடுங்கண்

இரும்புலி அகாண்மார் நிறுத்த வலையுள் ஓர்

ஏதில் குறுநரி பட்டற்றால், காதலன்

காட்சி அழுங்க, நம் ஊர்க்கெலாஅம்

ஆகுலமாகி வினைந்ததை என்றும் தன்

வாழ்க்கை அதுவாகக் கொண்ட முதுபார்ப்பான்

வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து.

 

(குறிஞ்சிக் கலி: 35)

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)