புகையில் விழுந்த விருப்பம்
இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு, இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு ஆகிய இரண்டு அலைவரிசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஐம்பதுகளின் இறுதியில் இயங்கியதென ஞாபகம். தேசிய ஒலிபரப்பு காலை எட்டு மணிக்கு முடிய வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து பத்து மணிவரை தொடர்ந்தது. மாலையில் மூன்று மணிக்கு வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பித்து ஆறு மணிக்கு முடிய மேலே இரவு பத்தரை மணிவரை தேசிய ஒலிபரப்புத் தொடரும். தேசிய ஒலிபரப்பில் செய்திகளும், வர்த்தக ஒலிபரப்பில் நீங்கள் கேட்டவையிலிருந்து, இசையும் கதையும், திரைப் படங்களின் ஒலிச்சித்திரம் போன்ற நிகழ்ச்சிகள் அனேகமாக எல்லார்க்கும் பிடித்தமான நிகழ்ச்சிகளாக இருந்தன. நான் கேட்டது வர்த்தக ஒலிபரப்பு. ரசித்தது சினிமாப் பாடல்கள். அந்த வயதில் எனது ரசனை வேறுவாக இருக்கவில்லை. வசதியாக பெரி றேடியோ பற்றியில் இயங்கிய வானொலி ஊரிலிருந்த மூன்று வீடுகளுள் எங்களதும் ஒன்று. பள்ளி நாட்களில் தாமதமானாலும் நான் வீடு வந்த நேரத்திலிருந்து ஆறுமணிவரை உச்சத் தொனியில் றேடியோ அலறுகிற ஒரு வீடாகவும் இருந்தது எங்களது. அக்காலத்தில் ஒலிபரப்பாகிய சினிமாப் பாடல்களைக்கூட என்னால் இன்றும் ஞாபகம்கொள்ள முடிகிறது. வ...