சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்
தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' பற்றி... - வ.ந.கிரிதரன் -
'சாம்பரில் திரண்ட சொற்கள்' எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல். 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை . அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..
இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் - நடனசுந்தரமும் அவர் மனைவி சிவயோகமலரும்தாம். நடனசுந்தரம் சிறந்த ஓவியர். சிவயோகமலர் சிறந்த பாடகி. இருவரும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் திருமணப் பந்தத்தில் பிணைக்கப்படுகின்றார்கள். வாழ்கின்றார்கள். குழந்தைகள் பெற்று, அவர்கள் வாழ்க்கை நகர்கின்றது. இருவருமே அவர்களது சுய விருப்பங்களை, ஆர்வங்களைத் தொடர முடியாத வகையில் வாழ்க்கை நகர்கிறது. இறுதி வரையில் அவர்களால் தம் விருப்புக்குரிய துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இவ்விதம் முதுமையில் அவர்களது வாழ்க்கை கனடாவில் தொடர்கிறது. தமிழர் ஒருவரின் வீட்டின் 'பேஸ்மண்டி'ல் வாடகைக்குக் குடிபெயர்கின்றார்கள். முதுமையில் உடல் உபாதைகளுக்கும், மனச்சிதைவுக்கும் உள்ளாகிய மனைவியைப் பராமரிக்கும் பொறுப்பில் நடனசுந்தரத்தின் இருப்பு இருக்கிறது. கதையின் ஆரம்பம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. கடந்த காலச் சம்பவங்களை நாவல் விபரித்துச் செல்வதே நாவலாகப் பரிணமிக்கின்றது.
சிவயோகமலர் அடிக்கடி சித்தப்பிரமை பிடித்தவராக நடந்து கொள்கின்றார். எதற்காக அவர் அவ்விதம் நடந்து கொள்கின்றார்? அதற்கான விடை நாவலின் இறுதியில் வருகின்றது. ஆனால் அது நேரடியாக வெளிப்படுத்தவில்லை. மறைமுகமாக , வாசகர்களின் ஊகத்துக்குரியதொன்றாக அது இருந்து விடுகின்றது. அந்த ஊகம் வாசகர்களின் சிந்தனை, வாசிக்கும் தன்மை, வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
இவ்விதமாகத் தன் வாழ்க்கையை நடனசுந்தரத்துடன் பிணைத்துக்கொண்ட சிவயோகமலரின் வாழ்க்கையை, நடனசுந்தரத்தின் வாழ்க்கையை நிதானமாக விபரித்துச் செல்கிறது நாவல். நாவலின் சில பாத்திரங்கள் உயிர்த்துடிப்புடன் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக பவளம் ஆச்சி பாத்திரம். பவளம் ஆச்சி நடனசுந்தரத்தின் வாழ்வில் முக்கியமான ஆளுமை. அவரது பால்யப்பருவத்தில் அவர் பவளம் ஆச்சியின் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். பவளம் ஆச்சியுடனான அவரது நனவிடை தோய்தல் உள்ளத்தை ஈர்க்கும் வகையில்,, நினைவில் நிலைத்து நிற்கும் வகையில் நாவலில் விபரிக்கப்பட்டுள்ளது. அவர் பெரும்பாலும் நிலவு விண்ணில் தண்ணொளியைப் பரப்பும் சமயங்களில் கதைகளைக் கூறுவார். நிலவு அவரது வாழ்வுடன் பின்னிப்பிணைந்ததற்கு முக்கியமான காரணமுண்டு. அவர் இளம்பருவத்தில் தன் நெஞ்சைக்கவர்ந்த கதிரமலையுடன் வன்னிக்கு ஓடி வாழ்வைத்தொடங்கியபோதில் , அவர்களது முதலிரவுக்குச் சாட்சியாகவிருந்தது அந்த நிலாதான். அன்றிலிருந்து அந்த நிலா அவளது வாழ்வெல்லாம் தொடர்ந்து வருகின்றது. அவளது காதலுக்குரியவனுடான வாழ்க்கையும் இன்பகரமானதாக நிலைக்கவில்லை என்பது பெருஞ்சோகம். அவன் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுகின்றான். பவளம் ஆச்சியுடனான நடனசுந்தரத்தின் நனவிடை தோய்தலை விபரிக்கும் தேவகாந்தனின் மொழி சிறப்பானது. நாவல் முழுவதுமே அவரது தனித்துவம் மிக்க மொழி தொடர்ந்து வருகின்றது.
இந்நாவலில் வரும் இன்னுமொரு உப பாத்திரமும் மறக்க முடியாத வகையில் , நினைவில் நிலைத்து நிற்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. செவந்தி என்னும் பாத்திரம்தான் அது. இரண்டாம் உலக மகா யுத்தக் காலத்தில் இலங்கையில் வந்து தங்கியிருக்கும் ஆபிரிக்கக் கறுப்பின இராணுவச் சிப்பாய் ஒருவனுக்கும், நான்கு பெண் குழந்தைகளுடன், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் , தனித்து வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு வாழும் அடித்தட்டு வர்க்கப்பெண் ஒருத்திக்குமிடையிலான உறவின் விளைவு அவள். ஆபிரிக்க மனிதரின் அடையாளங்களுடன் வாழும் பெண் அவள். அவளுடனான சிவயோகமலரின் நட்பும் சிவயோகமலரின் ஆளுமையில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றது.
செவந்தி பாத்திரம் அறுபது, எழுபதுகளில் தமிழகத்தில் பிரபல்யமாக விளங்கிய எழுத்தாளர் ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' நாவலில் வரும் நச்சி என்னும் பாத்திரத்தை நினைவூட்டியது. அந்நாவல் இந்திய சாகித்திய அமைப்பினால் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல். தேசபக்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல். அதில் வரும் நச்சி செவந்தியைப்போல் ஓர் உபபாத்திரம் அல்ல. முக்கிய பாத்திரங்களில் ஒருவன் அவன். அவனும் செவந்தியைப்போல் , இரண்டாம் உலக மகாயுத்தத்தில் இந்தியாவில் தங்கியிருந்த ஆபிரிக்கச் சிப்பாய் ஒருவனுக்கும், தமிழ் நாட்டின் அடித்தட்டு வர்க்கத்துப்பெண் ஒருத்திக்குமிடையிலான தொடர்பின் விளைவாக, ஆபிரிக்க மானுட அடையாளங்களுடன் உருவானவன். ஜெகசிற்பியன், தேவகாந்தன் தவிர வேறு எழுத்தாளர் எவரும் இவ்விதம் இரண்டாம் உலக மகாயுத்ததின் விளைவாக வந்த ஆபிரிக்கச் சிப்பாய்கள் பற்றி எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வகையில் இப்பாத்திரங்களுக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு.

நடனசுந்தரம், சிவயோகமலரின் முதுமைப்பருவம் புகலிடத்தமிழர் ஒருவரின் வீட்டு 'பேஸ்மண்ட்'டில் கழிகின்றது. புகலிடத்தில் வாடகைப்பிரச்னைகள், வீடு வாங்குவதால் எதிர்கொள்ளும் சவால்கள், குழந்தைகளின் நிர்ப்பந்தங்கள் அல்லது எதிர்பார்ப்புகள் முதியவர்களான பெற்றோர் மேல் ஏற்படுத்தும் பொருளாதார ரீதியிலான தாக்கங்கள் என இந்நாவல் புகலிடத்தில் முதியவர் இருப்பை விபரிப்பதிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
முதுமையில் தனித்து வாழும் நடனசுந்தரம், சிவயோகமலரின் இருப்பைச் சித்திரிக்கும் நாவலின் முக்கிய அம்சம் சிவயோகமலரின் உளச்சிதைவின் முக்கிய காரணத்தை எடுத்துக்கூறுவதுதான். அதற்கான காரணம் சிவயோகமலரின் வாழ்வில் அவள் அறியாமல், உணராமல் நடந்த சம்பவமொன்றின் காரணமாக நடந்தது என்பதை விபரிப்பதுடன் நாவல் முடிவுறுகின்றது. ஆனால் அதற்கான விடையினை வாசகர்களின் ஊகங்களுக்காக் விட்டு விடுகின்றார் தேவகாந்தன். காமம், பாலியல் வல்லுறவு போன்ற விடயங்களி விபரிக்கையில் அவற்றை நேரிடையாக விபரிக்காமல் , வாசகர்களின் ஊகங்களுக்காக விட்டு விடுவது , வாசகர்களையும் இந்நாவல் பற்றி மேலதிகமாகச் சிந்திக்க வைக்கின்றது. இவ்விதமாக ஊகங்களுக்கு விட்டுவிடுதலை ஓர் உத்தியாகவே தேவகாந்தன் பாவிப்பதை அவரது ஏனைய படைப்புகளி வாசிப்பவர்கள் புரிந்து கொள்வர்.
நாவல் இலங்கைஅரச படைகளுடன் இணைந்து இயங்கிய போராட்ட அமைப்புகளைப் பற்றியும் கோடிழுத்துச் செல்கின்றது என்பதும் இந்நாவலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
இவ்விதம் முதுமையில் , வாழும் தம்பதியரின் வாழ்க்கையினை விபரிக்கும் நாவல், புகலிடத் தமிழர்களின் இருப்பு, அதில் பொருளாதாரம் ஏற்படுத்தும் பாதிப்பு, இரண்டாம் உலக மகாயுத்தம், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் மானுடரில் ஏற்படுத்திய தாக்கங்கள், மானுடரின் உளவியல பிரச்சினைகள், அவற்றுக்கான காரணங்கள் , சமூக, வர்க்கப்பிரிவுகள் மானுடரில் ஏற்படுத்தும் தாக்கங்கள், மானுடரின் காதல்,காமம், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பல விடயங்களையும், தேவகாந்தனின் தனித்துவம் மிக்க மொழியில் தொட்டுச் செல்கின்றது. அண்மையில் வாசித்த நல்லதொரு நாவல் எழுத்தாளர் தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்'.
ngiri2704@rogers.com
பதிவுகள்.கொம்
Comments