(சென்ற 11| 2024 இல் தாய்வீடு பதிப்பாக வெளிவந்த எனது 'சாம்பரில் திரண்ட சொற்கள்' என்ற நாவலின் என்னுரை)



 

இது எனது பதின்மூன்றாவது நாவல். 2022 மேயிலிருந்து 2023 ஓகஸ்ற் வரை ‘தாய்வீடு” மாதாந்திரியில் வெளிவந்த ‘சாம்பரில் திரண்ட சொற்கள்’ என்ற  தொடர்கதையே அதே தலைப்பில் இப்போது நாவலாக நூலாக்கம் காண்கிறது.

இது, தொடராக வந்த வடிவத்தில் பிரதி இப்போது இல்லையென்பதைத் தெரிவிக்குமென்றாலும், சற்று விளக்கமாக இதை நான் இங்கே சொல்வது அவசியம்.

பல்வேறு உலகமொழிகளிலும் நாவலின் தொடக்க வரலாறு பெரும்பாலும் தொடர்கதைகளினூடாகவே நடந்து வந்திருக்கிறது. அவற்றுள் பல சிறந்த நாவல்களும் தோற்றம்பெற்றன. ஆயினும், தொடராக வந்த வடிவத்துக்கும் நூலாக வந்த வடிவத்துக்கும் இடையிலான செம்மையாக்கத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவான தகவல்களேதும் வெளிப்படக் கிடைக்கவில்லை; அல்லது அதில் நாம் கூடிய கவனம் செலுத்தவில்லை.

2012 ஜனவரி – 2013 டிசம்பர் வரையான காலத்தில் ‘தாய்வீ’ட்டில் வெளிவந்த ‘நதி’யென்ற தலைப்பிலான எனது தொடரொன்று பின்னர் 2017 ஜனவரியில் ‘நதிமேல் தனித்தலையும் சிறுபுள்’ என்ற தலைப்பில் தமிழகத்தின் நற்றிணை பதிப்பாக நூல் வடிவம் பெற்றபோது, அதன் கதைப் பின்னல் தவிர்ந்த அம்சங்கள் யாவும் நீக்குதல் – சேர்த்தல் -   மாற்றுதலென பலவகையான செம்மையாக்க மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தன. அந்தளவு மாற்றம் இதிலுமுண்டு.

இவ்விபரங்கள் ஒரு படைப்பின் நூலாக்கத்தில் முக்கியமாக வௌிப்படுத்தப்படவேண்டிய அம்சங்களாகும். இது வாசகர்களையும் விமர்சகர்களையும் ஆய்வாளர்களையும் விஷய மயக்கம் கொள்ளாதிருக்க வைக்கும். நான் மயங்கிய தருணங்கள்போல் என் நூல்கள் மற்றவர்களை மயங்க வைத்துவிடக் கூடாதென்பது என் கூடுதலான அக்கறை.

இது என்னூரின் கதைல்ல; ஓரூரின் கதை. இதன் பாத்திரங்களும் என்னூரில் கண்டடையப்பட்டவை அல்ல. மாறாக, எங்கேயும் இருந்திருக்கக்கூடிய மனிதர்களிலிருந்து உருவானவை. இவை தம் விதி இழுத்தபடி கண்டங்கள் கடக்கின்றன. சமகால இலங்கைத் தமிழர் வாழ்வு அதுமாதிரியன்றி வேறுமாதிரிப் புனைய முடியாததுதான். அவர்களது அக உணர்வுகளும் மிக நுட்பமாக பிரச்னையின் வடிவெடுத்துவிடுகின்றன. அதை விளக்குகிற கதையிது.

கதை களம் காணும் இப் பகுதிக் கலாச்சாரம் பருண்மையாக இல்லையெனினும் நுண்மையாக பிற இலங்கைத் தமிழ்ப் பிரதேசங்களிலிருந்தும் வித்தியாசம்கொண்டது. அதைப் புரிந்திருத்தல் வாசக விளக்கத்துக்கு அவசியமானது. இதன் வரலாறும் இன்னும் முழுவதுமாய் எழுதப்படாமல் மண்ணுள் புதைந்துபோயிருக்கிறது. இப் பிரக்ஞை இல்லாமல் இந்த மண்ணின்மேல் ஒரு கதையை நடத்திச்சென்றுவிட முடியாதல்லவா? இவை கவனம்கொண்டே கதைச் சம்பவங்கள் நாவலில் பதிவாக்கம் பெற்றுள்ளன.

என் சில கால வடமராட்சி வாழ்வை பெருங்காலமாக உணரவைத்த நண்பர்களை அன்போடு இத் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

இந் நாவலின் உருவாக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் காரணஸ்தர்களான நண்பர்கள் எஸ்.கே.விக்னேஸ்வரன், டானியல் ஜீவா, ‘தாய்வீடு’ திலீப்குமார் ஆகியோர்க்கும், ஓவியர் ஜீவா மற்றும் நூல் வடிவமைப்பு அச்சாக்கங்களில் பங்குகொண்ட நண்பர்களுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்.

-தேவகாந்தன்

ஜுலை 2024   

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- நாவல்