கலித்தொகைப் பாடல்கள்..... 17
(பாலைத் திணையை அடுத்து வருவது குறிஞ்சித் திணை. கலித்தொகையில்
கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்கள் உள. இவற்றில் குறிஞ்சிப் பாடல்கள் 29. இவற்றை கபிலர்
பாடியுள்ளார்.
குறிஞ்சித் திணையானது புணர்தல் ஒழுக்கத்தைக் கொண்டது.
மலைப் புறமும் நீரும் அதனாலாகும் காவும், தினைப் புனமும்
எல்லாம் கூடலுக்கு வசதியாக இருத்தலில் மக்களின் வாழ்வு அப்படித்தாகி புணர்தலொழுக்கத்தைக்
குறிஞ்சி நிலத்துக்கு ஆக்கினர் ஆன்றோர்.
குறிஞ்சித் திணைப் பாடல்களில், ஏனைய திணைப் பாடல்களைவிட,
நாடகப் பாங்கான உரையாடல்கள் அதிகமிருக்கின்றன. அது, கற்போருக்கு மிகுந்த இனிமை செய்யும்.)
ரசனைக் குறிப்புகள்
17
ஓர்
நாணின்மை செய்தேன்
தோழீ, ஒரு விஷயம் சொல்கிறேன், கேட்பாயாக.
வில்லேந்திய ஒருவன்
மிருகத்தின் அடியைத் தொடர்பவன்போல வந்து
என்னை நோக்கி நிற்பான்;
குறிப்பினில் தானுற்ற எண்ணம்
காட்டுவானேயன்றி,
வார்த்தையேதும் கூறாமல் திரும்புவான்.
இவ்வாறு பல நாட்கள் நடந்தன.
எண்ணியெண்ணி தூக்கமிழந்துபோனேன்.
எவ்வித உறவுமில்லாத அவன்மீது
எனக்கு பரிதாபமுண்டாயிற்று.
அவனோ
நேரே நின்று பார்த்து
தன்னெண்ணம்
கூற முடியாதவனாகயிருந்தான்;
நானோ
பெண் தன்மை காரணமாய்
என்ன சொல்ல விரும்புகிறாயென
கேட்க முடியாதவளாய் இருந்தேன்.
இவ்வாறே இவன் தன் எண்ணமுரைக்காமலே
அழிந்தேவிடுவானோ என்பதாலும்,
நானும் ஒருவகை விருப்பம்
அவன் மேலுற்று
தோள் மெலியத் துவங்கியதனாலும்
துணிந்து ஒருநாள்
ஒரு நாணமற்ற செய்கை செய்தேன்.
நாம் கிளிகளையோட்டும்
தினைப் புனத்தின் அயலிலே
உஞ்சால் ஆடிக்கொண்டிருந்தபொழுது
அவன் வந்தான்.
‘ஐய, என்னைச் சிறிது ஆட்டிவிடுகிறாயா?’
என நான் கேட்டேன்.
‘நல்லது, பெண்ணே!’ என
அவனும் உஞ்சாலை ஆட்டிவிட்டான்.
அப்போது நான்
கை நெகிழ்ந்துபோல்
பொய்யாக அவன் மார்பில் வீழ்ந்தேன்.
அதை உண்மையெனக் கருதி
விரைந்து அவன் என்னை எடுத்துக்கொண்டான்.
நானோ இன்னும்
மயங்கியவள்போலவே கிடந்திருந்தேன்.
மயக்கம் திரும்பியதாகத் தெரிந்தால்
‘நன்றாகிவிட்டாய், செல்க’ என
எனை விடுக்கும்
பண்புடையாளன் அவனென்பதை
நான் நன்கறிந்திருந்தேனடி.
கயமலர் உண்கணாய், காணாய், ஒருவன்
வயமான் அடித்தேர்வான்போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்திற் காட்டுதல் அல்லது தானுற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன் பன்னாளும்.
பாயல் பெறேன், படர்கூர்ந்து அவன்வயின்
சேயேன்யானும் துயருழப்பேன் ஆயிடைக்
கண்ணின்று கூறுதலாற்றான் அவனாயின்
பெண்ணன்று உரைத்தல் நமக்காயின், இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டென்று ஒருநாள் என்
தோள் நெகிழ்புற்ற துயரால் துணிதந்து ஓர்
நாணின்மை செய்தேன்,
நறுநுதால். ஏனல்
இளக்கிளி யாம்கடிந்து ஓம்பும் புனத்தயல்
ஊசல் ஊர்ந்தாட ஒருஞான்று வந்தானை
ஐய, சிறிதென்னை ஊக்கி எனக்கூறத்
தையால் நன்றென்று அவன் ஊக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில்; வாயாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்
மெய்யறியாதேன்போல் கிடந்தேன்மன் ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவேனாயின் மற்று ஒய்யென
ஒண்குழாய், செல்கவெனக் கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்!
(குறிஞ்சிக் கலி: 1)
Comments