கலித்தொகைப் பாடல்கள்... 13

 

 

கலித்தொகைப் பாடல்கள்:

ரசனைக் குறிப்புகள் 13

 

(கலித்தொகைப் பாடல்கள் பேசும் பெரும்பாலான பிரிவானது பொருள்வயிற் பிரிவாகவே இருக்கிறது. சிலவே போர்வயிற் பிரிவைப் பேசுகின்றன. அவற்றுள் இது ஒன்று.)

பலதேவனைப்போல்

வெண்ணிறப் பூக்கள்

குலுங்கித் துலங்கும்

அரசமரம்;

சூரியனைப்போல்

விரிந்த பூக்களால்

ஔி விரிக்கும்

செருந்தி;

காமனைப்போல்

வண்டார்க்கும்

பூக்களைக் கொண்ட

காஞ்சி;

அவன் தம்பி சோமன்போல்

பூக் குலுங்கும்

ஞாழல்;

சிவன்போல்

நிறை பூப் பூக்கம்

இலவம்;

இவையெல்லாமே

நதிதீரத்து

எழில் மரச் சோலையில்

பூத்துப் பொலிந்துவிட்டன.

இளவேனில் பிறந்துவிட்டது!

 

திசையெங்கும் பறந்து

தேன்மாந்தி இன்புறும்

வரிகொண்ட தும்பிகள்

மலிந்த நாட்டில்,

அலைந்துழன்று அபலைகளாய்

வருவோரைப் புரந்து

வெற்றியின் புகழோடு

வதிந்துகொண்டிருக்கும்

தலைவரா,

சிறந்த என் அழகெலாம் இங்கே

வாடிக்கொண்டிருப்பதை

நினக்கப்போகிறார்?

 

புகலடைய ஏற்ற இடமென்று

தாமாகவே வந்து

தஞ்சமாகியவரை

தளராது தாங்கி

அதனால்

உலகு புகழ்கொண்டோராய்

அந்நிய நாட்டில் உறையும்

தலைவரா,

என் அழகெல்லாம் வாடுவதைக்

கருதப்போகிறார்?

 

துன்பங்களுக்கஞ்சி

தன்னிழல் அண்டினாரை

ஓம்புவதையே

பொருளாகக் கொண்ட அவரா,

மேன்மையான என் அழகெலாம்

இங்கே அழிந்துகொண்டிருப்பதை

நினைக்கப்போகிறார்?

 

என,

துக்கிக்காதே தலைவி,

யானையேறிப் போர் செய்து

அதில் வெற்றியும் கொண்ட தலைவர்

வருகிறாரென்பதை அறிவிகும்

வாய்வழிச் செய்தி

வந்துவிட்டது.

 

 

 

ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்,

பருதியம் செல்வன்போல் நனையூழ்த்த செருந்தியும்,

மீனேற்றுக் கொடியோன்போல் மிஞிறார்க்கும் காஞ்சியும்,

ஏனோன்போல் நிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆனேற்றுக் கொடியோன்போல் எதிரிய இலவமும், ஆங்கு அத்,

தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோலப்

போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற

நோதக வந்தன்றால் இளவேனில் மேதக.

 

 

பலவரி இனவண்டு புதிதுண்ணும் பருவத்துத்

தொல்கவின் தொலைந்தஎன் தடமென்தோள் உள்ளுவார்,

ஒல்புகு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி

வெல்புகழ் உலகத்தே விருந்துநாட்டுறைபவர்?

 

திசைதிசை தேன்ஆர்க்கும் திருமருத முன்துறை

வசைதீர்ந்த என்நலம் வாடுவது அருளுவார்,

நசைகொண்டு தம்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித் தம்

இசைபரந் துலகேத்த ஏதில்நாட் டுறைபவர்?

 

அறல்சாய் பொழுதோடு எம் அணிநுதல் வேறாகித்

திறல்சான்ற பெருவனப் பிழப்பதை அருளுவார்,

ஊறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி

ஆறின்றிப் பொருள்வெஃகி அகன்றநாட் டுறைபவர்?

 

என

தெருமரல், வாழி தோழி, நம் காதலர்

பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்

செருமேம்பட்ட வென்றியர்

வருமென வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே!

 

(பாலைக் கலி: 25)

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்