கலித்தொகைப் பாடல்கள் 19

 

ரசனைக் குறிப்புகள்: 19

சுடருள் இருள் தோன்றியற்று

 

யானைத் தந்த உலக்கையால்

சேம்பின் இலையைச் சுளகாகக் கொண்டு

மூங்கில் நெல்லை கல்லுரலுள் போட்டு

குற்றியபடி

நாம் நெல்லு குற்றும் பாட்டு

பாடுவோம் தோழி, வா.

 

நள்ளிரவு;

இடி இடிக்கிறது;

மழை பெய்கிறது;

மின்னல் அடிக்கிறது.

யானைகள் தம் இணைகளோடு வந்து

வயலில் இறங்கிய சத்தம் கேட்ட

கானவன்

ஆசினி மரத்தின் உச்சிப் பரணுக்கு

ஏறுவான்;

கவணில் கல் தொடுத்து

அங்கிருந்து எறிவான்;

அது விசையாய்ச் சென்று

வேங்கை மரப் பூக்களை உதிர்த்து

மேலே பாயும்;

வழியில்

தேன் கூட்டைத் துளைக்கும்;

அப்பால்

வாழை மடலைக் கிழித்துக்கொண்டு போய்

பலாப் பழத்துள் தங்கும்;

அவ்வாறான மழைநாட்டையே

பாடுவோம், தலைவி, வா!

 

அருவி இருக்கின்றதா,

அருவியும் இருக்கின்றதா,

வான்மழையில் பொங்கிவரும்

அருவியும் இருக்கின்றதா,

தான் அளித்த சத்தியம்

பேணாது பொய்த்தான் மலையில்?

 

பொய்த்தற்கு உரியவனா,

பொய்த்தற்கு உரியவனா,

அஞ்சேலென்று அபயமளித்த அவன்

பொய்த்தற்கு உரியவனா?

அவ்வாறு அவன் பொய்ப்பவனாக இருந்தால்

அது நிலவிலே தீ தோன்றியமாதிரித்தான்.

 

மழை பெய்கிறதா,

இங்கும் மழை பெய்கிறதா,

இந்தக் குன்றிலும் எப்போதும் மழை பெய்கிறதா,

என்னிடம் வாராதிருந்து,

என் முன் கையிலிருந்து

வளையல்கள் கழன்றோடச் செய்தவனின்

குன்றினிலே?

 

வாராதிருப்பானா,

உன்னை வதைக்கும்படி வாராதிருப்பானா?

அவ்வாறு உன்னை வதைக்கும்

நோக்கமிருந்தால்

அது, நிழற் குளத்தில்

குவளை மலர் வெந்ததுபோல்தான்.

 

மணிபோலத் தோன்றும்

மணிபோலத் தோன்றும்

என் மேனி தழுவாது துறந்து சென்றவன் மலையா’

ஒளி சுடரும் மணிபோலத் துலங்குகிறது?

 

துறந்து செல்வானோ, துறந்து செல்வானோ,

தொடர்மலை கொண்ட மலைநாடன்

துறந்துசெல்வானோ,

அவ்வாறானால்

சூரியனில் இருள் தோன்றியதுபோல் ஆகுமன்றோ!

 

என

நாம் நம் வள்ளையுள்

பாடியதெல்லாம் கேட்ட

உன் காதலர்,

மணம்பேச வந்தாரடி;

வேங்கை மரக் கீழமர்ந்து பேசிய

உன் தந்தையும் அதற்குச்

சம்மதம் அளித்தாரடி!

 

 

பாடுகம் வா, வாழி தோழி, வயக்களிற்றுக்

கோடு உலக்கையாக நற்சேம்பின் இலை சுளகா,

ஆடுகழை நெல்லை அறையுரலுள் பெய்து இருவாம்

பாடுகம் வா, வாழி தோழி, நல்தோழி, பாடுற்று.

 

இடியுமிழ்பு இரங்கிய இரவுபெயல் நடுநாள்

கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்துப்

பிடியொடு மேயும் புன்செய் யானை

அடியொதுங்கு இயக்கம் கேட்ட கானவன்

கடுவிசைக் கவணையில் கல் கைவிடுதலின்

இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி

ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத்

தேன்செய் இறாஅல் துளைபடப் போகி

நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்

குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்

பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனைப்

பாடுகம் வா வாழி தோழி நல்தோழி, பாடுற்று.

 

இலங்கும் அருவித்தே, இலங்கும் அருவித்தே,

வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற

சூழ்பேணான் பொய்த்தான் மலை.

 

பொய்த்தற்கு உரியனோ, பொய்த்தற்கு உரியனோ,

அஞ்சலோம்பு என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ

குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின்

திங்களில் தீத்தோன்றியற்று.

 

இளமழை ஆடும், இளமழை ஆடும்,

இளமழை வைகலும் ஆடும் என்முன்கை

வளைநெகிழ வாராதோன் குன்று.

 

வாராதமைவானோ, வாராதமைவானோ,

வாராதமைகுவான் அல்லன் மலைநாடன்;

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல்கயத்துள்

நீருள் குவளை வெந்தற்று.

 

மணிபோலத் தோன்றும், மணிபோலத் தோன்றும்

மண்ணா மணிபோலத் தோன்றும், என் மேனியைத்

துன்னான் துறந்தான் மலை.

 

துறக்குவன் அல்லன், துறக்குவன் அல்லன்

தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்

சுடருள் இருள் தோன்றி யற்று.

 

எனவாங்கு

நன்றாகின்றால் தோழி நம் வள்ளையுள்

ஒன்றிநாம் பாட மறைநின்று கேட்டருளி

மென்தோள் கிழவனும் வந்தனன், நுந்தையும்

மன்றல்வேங்கைக் கீழிருந்து

மணம்நயந்தனன் அம்மலைகிழ வோற்கே.

 

(குறிஞ்சிக் கலி: 5)

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்