கலித்தொகைப் பாடல்கள் 18
ரசனைக்
குறிப்புகள்
18
நின்
கண்ணால் காண்பென்!
நீராடலை விரும்பி
யாறு சென்ற தலைவி
நீரின் வேகத்தில் அஞ்சி, தளர்ந்து,
கண்கள் சொருகி
நீரால் இழுப்புண்டு செல்லப்படலானாள்.
அப்போது
அங்கே வந்த
புன்னை மலர் மாலை சூடிய தலைவன்
அது கண்டிரங்கி
நீரிலே பாய்ந்து
தன் நெஞ்சோடு சேர்த்து
அவளைப் பற்றிக்
கரைசேர்த்தான்.
அச் சமயம்
அவனது அகன்ற மார்பில்
அவளது முலைகள் அழுந்திப்போயின.
அதனால்
தன் கற்புக்குப் பங்கமின்றி
அவனையே நம் தலைவி
விரும்புதல் செய்துவிட்டாள்.
அவனும்தான் யார்?
தினைப் புனத்திலே எழுப்பும்
அகிற்புகையானது
மேலே சென்று
நிலவின் தோற்றத்தை மங்கச் செய்ய,
அதை
தேன்கூடுவென நினைத்து
ஏணி எடுத்துவைக்கும்
அகன்ற வளமான காட்டினையுடைய
மலைநாட்டுத் தலைவனின் மகனேயாவான்.
வீட்டாரே! வீட்டாரே!
ஒன்று ஞாபகம் வைத்திருங்கள்.
மலை வாழ்நர் அல்லவை செய்தொழுகினால்
வள்ளிக் கொடியில் கிழங்கு வீழாது;
மலையிலே தேனீக்கள் கூடு கட்டா;
தினையிலே கதிர்கள் வளமாகப் பெருகா.
பேரழகுகொண்ட மலைக் கன்னியர்
எப்போதும் தம் நிறை பிழைப்பதில்லை.
கணவனையே தொழுதெழுவர்;
அதனால்தான் அவர் அண்ணன்மார்
தம் வேட்டையிலே குறி தப்புவதில்லை.
என
நியாயத்தை நான் பேச,
அதைத் தாயார்
மற்றவர்களுக்குரைத்தார்.
அவர்கள் முதலில் கண் சிவந்தார்கள்;
அம்பு வில்லை நோக்கினார்கள்;
ஒரு பகல்பொழுது முழுக்க
கொதித்துக்கொண்டிருந்தார்கள்;
பின்னர்
அவர்கள் இருவர்பேரிலும் குற்றமில்லை
என்றார்கள்.
தொடர்ந்து
தம் கோபத்திற்கு வருத்தப்பட்டு
தலை சாய்த்தார்கள்.
தலைவீ,
இனி என்ன?
உனதும் உன் காதலனதும் திருமணத்திற்கு
மலைத் தெய்வத்தின் ஆசீர்வாதம் வேண்டி
நாம் பாடி குரவையாடுவோம், வா.
வேங்கையின் தாதினால்
பொன்னிறமான முன்றிலில்
என்னைச் சேர்த்துவைக்கும் நிகழ்வு
நடக்குமல்லவா?
அதன் பின் கனவுப் புணர்ச்சிக்கு
ஏது இடம்?
தலைவீ,
அந்த நன்னாளில்
நீயும் உன் காதலரும்
ஒருவரையொருவர்
முன்னர் அறியாதீர்போல்
நடந்துகொள்வீர்களல்லவா?
நானும்தான்
அது தெரியாதவள்போல்
பேசாமல் இருந்துவிடுவேன்.
ஆனால் ஒன்று,
மணநாளில்
காதலனின் மணக்கோலம் காணாத கண்களும்
கண்களாகுமா?
அது ஏன் அவ்வாறு போகவேண்டும்?
நான் உனது கண்களால் பார்த்துக்கொள்வேனே!
இனி
ஈதொன்றும் பேசவேண்டியதில்லை.
பசலையும், அலரும், கனவுப் புணர்ச்சியும் எல்லாம்
நீங்கும்படி
இன சனம் சூழ
உன் காதலர் வந்துவிட்டார்.
காமர் கடும்புனல் கலந்து எம்மோ டாடுவாள்
தாமரைக் கண்புதைத்து அஞ்சித் தளர்ந்து அதனோ டொழுகலான்
நீள்நாக நறும் தண்தார் தயங்கப் பாய்ந்து அருளினால்
பூணாக முறத்தழீஇப் போதந்தான் அகனகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால், என் தோழி,
அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே.
அவனுந்தான் ஏனல் இதணத்து அகிற்புகை உண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும்
கானகல் நாடன் மகன்.
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளிகீழ் வீழா, வரைமிசைத் தேன் தொடா,
கொல்லை குரல்வாங்கி ஈனா, மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுகலான்.
காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார், கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்
தாம்பிழையார் தாம் தொடுத்த கோல்.
எனவாங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்.
அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒரு பகலெல்லாம் உருத்தெழுந்து ஆறி
இருவர்கண் குற்றமுமில்லையால் என்று
தெருமந்து சாய்ந்தார் தலை.
தெரியிழாய் நீயும் நின்கேளும் புணர
வரையுறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாமாடக் குரவையுள்ன
கொண்டு நிலைபாடிக் காண்.
நல்லாய்,
நன்னாள் தலைவரும் எல்லை நமர் மலைத்
தம்நாண் தாம் தாங்குவார் என்னோற்றனர் கொல்?
புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில்
நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?
விண்தோய் கல்நாடனும் நீயும் வதுவையுள்
பண்டறியாதீர்போல் படர்கிற்பீர் மன்கொலோ?
பண்டறியாதீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியாதேன்போல் கரகிற்பென் மன்கொலோ?
மைதவழ்வெற்பன் மணவணி காணாமல்
கைகளால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ?
என்னைமன் நின்கண்ணால்
காண்பென்மன் யான்.
நெய்தல் இதழுண்கண் நின்கண் ஆக, என் கண் மன.
எனவாங்கு
நெறியறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக
வேய்புரை மென்தோள் பசலையும் அம்பலும்
மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்கச்
சேயுயர் வெற்பனும் வந்தனன்;
பூவெழில் உண்கணும் பொலிமா இனியே!
(குறிஞ்சிக் கலி: 3)
Comments