கலித்தொகைப் பாடல்கள் 21
ரசனைக்
குறிப்புகள் 21
குறியிடம்
வரச் சொல்
ஏது இதுவென்று எனக்குத் தெரியவில்லை, தோழி.
என்னிடம் எதையோ இரக்கப் போவதுபோல் மிகப் பணிவாக வந்து பேசுகிறான்
ஒருவன்.
உலகைக் காக்கும் உரம் கொண்டான்போல் தோற்றத்தில் காணப்படுகிறான்.
அறிவுள்ளோரை வணங்கிக் கற்றதனால் அறிவு கொண்ட நல்லவர்களின்
அடக்கம் அவனிடம் காணப்படுகிறது.
துன்பப்பட்டோரின் துயர் தவிர்க்கும் வன்மை உடையவனாகவும் தெரிகிறான்.
இருந்தும் தன் பீடு பெருமையெல்லாம் துறந்து என்னிடம் என்னென்னவோ
பேசினான்.
‘நீயின்றி நான் உயிர் தரியேன்’ என்றான் ஒருபொழுது.
அம்மாதிரிப் பேச்சை எவராலும் நம்புவது கடினமல்லவா?
‘நான் உன்னால் எவ்வளவு துயர்ப்படுகிறேனென நீ அறியாய்’ என்றும்
சொன்னான்.
தன் வலையில் வீழ்ந்தவரிடமெல்லாம் இவன் இப்படித்தான் பேசியிருப்பானா?
‘நீ விலகிப் போனால் வாழமாட்டேன்’ என்றான் பிறகு.
இவன் பேச்சை நம்பினால் எல்லாரும் என்னை அறிவில்லாதவள் என்றல்லவா
பழிப்பார்கள்?
என்ன செய்வது என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லையே!
எதையும் செய்வதன் முன்பாக, தோழி, அதுபற்றி நாம் சேர்ந்து
பேசிக்கொள்வோம்.
அதற்கு தோழி சொல்கிறாள்: ‘நாணின்றி அவனுடன் உசாவுதல் உனக்கும்
ஏற்காதது. அவனை அப்படியே விட்டுப்போதலும் பெண் தன்மைக்குப் பொருந்தாது. அவனைச் சந்திக்க
விருப்பம் என்பதுபோல் ஒரு பொய்க்குறி காட்டு. அவன் குறியிடம் வரும்போது நடந்துகொள்வதிலிருந்து
நடக்கப்போவதை அனுமானித்து உன்னைத் தழுவும் அவனது விருப்பத்தைப்பற்றி முடிவை எடுத்துக்கொள்.’
ஒன்று இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் ; உலகைப்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையான்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான்போல
நல்லார்கண் தோன்றும் மதுகையும் உடையன்;
இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்.
அன்னான் ஒருவன் தன் ஆண்டகைவிட்டு என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ, சுடர் இழாய். பன்மாணும்
நின்னின்றி அமையலேன் யான் என்னும் அவனாயின்
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்குமிங்கரிதாயின்
என்னுற்ற பிறர்க்குமாங்கு உளகொல்லோ, நறுநுதால்!
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவனாயின்
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதாயின்
அளியரோ எம்போல் ஈங்கிவன் வலைப்பட்டார்?
வாழலேன் யான் என்னம் நீ நீப்பின் அவனாயின்
ஏழையர் எனப்பலர் கூறும்சொல் பழியாயின்
சூழுங்கால் நினைப்பதொன்றறிகிலேன், வருந்துவல்,
சூழுங்கால் நறுநுதால் நம்முளே சூழ்குவம் அவனை.
நாணடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கொல்லாது.
பேணினர் எனப்படுதல் பெண்மையும்
அன்று; அவன்
வௌவினன் முயங்கு மாத்திரம்
வா’ எனக்
கூறுவென் போலக் காட்டி
மற்றவன் மேஎவழி மேவாய் நெஞ்சே!
(குறிஞ்சிக் கலி: 11)
Comments