கலித்தொகைப் பாடல்கள் 20
ரசனைக்
குறிப்புகள் 20
நட்டார்க்குத்
தோற்றலை
நாணாதவன்
வெறிகொண்டு வேங்கையொன்றினைக் கொன்ற புள்ளித் தோல் யானையின்
தந்தத்தினாலும்,இளவண்டு மொய்த்துத் திரியும் சந்தன மரத்தினாலும் ஆன உலக்கைகளை எடுத்துக்கொண்டு,
கல்லுரலுள் நெல்லைப் போட்டு, வா, தோழி, குற்றத் தொடங்குவோம்.
அப்போது கடவுளை ஏற்றிப் போற்றுவதுபோல் தலைவனைப் புகழ்ந்து
பாடுவோம்.
கூற்றுவன் பகையோடு எதிர்வந்தாலும் புறமுதுகிடாதவன் மலையிலே,
பெண்களின் விரலணிபோல் காந்தள் முகையிலே தும்பிகள் மொய்த்திருக்கும்.
தன் நண்பர்களாயின் அவர்களுக்கு அன்பால் தோற்கவும் பின்னிற்காதவன்.
இருளடைந்த மலைப் பகுதியிலே வருடை மான் குட்டியொன்று ஓடித்
திரிவதைக் கண்ட கருங்குரங்கு அச்சத்துடன் பார்க்கும் காட்சிகள் கொண்டது அவனது மலை.
தோற்றுப் பின்வாங்கும் எதிரிகளைக்கூட இகழாத இயல்பினன் அவன்.
பட்டையானது முதிர்ந்ததும் இயல்பில் கழன்றுவிடும் மூங்கில் மரங்களைக் கொண்டது அவனது
மலை.
புலியின் பாதங்களைப்போன்ற காய்களைக்கொண்ட வாழைகள் நிறைந்தது
அவனது மலை.
அவனோ வறுமைத் துயரடைந்த விதம் சொன்னோரின் குறை தீர்க்க முடியாவிட்டால்
தன்னுயிரையே போக்கிவிடும் தன்மையுள்ளவன்.
என,
பாடிப் பாடி அவர்கள் நெல் குற்ற தலைவன் பிரிவால் வாடிநின்ற
தலைவியின் தோள்கள், அவனே நேரில் வந்து சாந்தி செய்ததுபோல், விம்மத் துவங்கின.
வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்து
ஏந்து மருப்பின் இளவண்டு இமிர்பூதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்
ஐவன வெண்ணெல் அறையுரலுள் பெய்து, இருவாம்.
ஐயனை ஏத்துவாம்போல அணிபெற்ற
மைபடு சென்னிப் பயமலை நாடனைத்
தையலாய், பாடுவாம் நாம்.
தகையலர் கைச்செறித்த தாள்போலக் காந்தள்
முகையின்மேல் தும்பியிருக்கும் – பகையெனின்
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத்
தோற்றலை நாணாதோன் குன்று.
வெருள்புடன் நோக்கி வியலறை யூகம்
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வளமலை நாடனைத்
தெருளத் தெரியிழாய் நீ ஒன்று பாடித்தை!
நுண்பொறி மான்செவிபோல வெதிர் முளைக்
கண்பொதி பாளை கழன்றுகும் பண்பிற்றே
மாறுகொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று.
புணர்நிலை வளகின் குளகமர்ந் துண்ட
புணர்மருப் பெழில்கொண்ட வரைபுரை செலவின்
வயங்கெழில் யானைப் பயமலை நாடனை
மணம்நாறு கதுப்பினாய், மறுத்து ஒன்று பாடித்தை.
கடுங்கண் உழுவை அடிபோல வாழைக்
கொடுங்காய் குலைதொறும் தூங்கும் இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்
தன்மெய் துறப்பான் மலை;
எனவாங்கு
கூடி அவர் திறம்பாட என் தோழிக்கு
வாடிய மென்தோளும் வீங்கின
ஆடமை வெற்பன் அளித்தக்கால் போன்றே!
(குறிஞ்சிக் கலி: 7)
Comments