கலித்தொகைப் பாடல்கள்.... 14

 

 

ரசனைக் குறிப்புகள்

 

14

தாம் சொல்லிய பொய்யன்றி புகுதந்தார்

 

பாய்ந்து வரும் ஆற்றுநீர்

கால்வாய்களில் ஓடி

வறண்டிருந்த இடங்களை

அழகுபெற வைத்திருக்கிறது.

குளங்களுக்கு

நீரடித்துப் பாய்ந்த அயலிலே

வரிவரியாய்

நுண்மணல் திரண்டிருக்கிறது.

அதை மூடி

உதிர்ந்து கிடக்கின்றன

ஈங்கை மரப் பூக்கள்.

காதலர்ப் பிரிந்தவர் நெற்றி நிறத்தில்

பீர்க்குகளும் பூத்துவிட்டன.

புணர்ந்தவர் முகம்போல

பொலிந்திருக்கின்றன பொய்கையில் பூக்கள்.

உடம்பை நடுக்கும் பனியோடு

வாடையும் சேர்ந்து

என்னைக் கலங்கச் செய்கின்றது.

அன்றொரு நாள்

புணர்ச்சிவேளையின் உச்சத்தில்

பிரியேனென்று ஒரு வார்த்தை சொன்னார்.

நாடு வென்று  

வெல்புகழ் வீரராய்

யானைமேல் ஏறி

அவர் ஒருநாள் வரக்கூடும்.

அதுவரை

இவையெல்லாம் என்னை

உயிர் தின்னாமல் வைத்திருக்குமா?

 

தன் நிறை கதிர்களை வீசி

நிலா எறிக்கிறது.

வாடைக்காற்றும்

குளிரோடு சேர்ந்து

கடுகி வீசுகிறது.

படை வென்று

வெற்றி வீரராய்      

குதிரையேறி

அவர் ஒருநாள் வரக்கூடும்.

அதுவரை

இவையெல்லாம் என்னை

உயிர் தின்னாமல் வைத்திருக்குமா?

 

மூங்கில் பூ,

நிறமழிந்திருக்கும்

என்னைப் பார்த்து

பழிப்புச் செய்கிறது.

நான் வீட்டுள் செல்லும்படியாக

சின்மழை தூறுகிறது.

வெற்றி கொண்ட நாட்டில்

திறைபெற்றுக்கொண்டு

தேரேறி

ஒருநாள் அவர் வரக்கூடும்தான்.

ஆனால்

அதுவரை

இவையெல்லாம் என்னை

உயிர் தின்னாமல் வைத்திருக்குமா?

 

எனவாங்கு

வருந்தாதே, தலைவி!

தாம் சொல்லியதை

உண்மையாக்கும்படி

தலைவர் வந்துவிட்டார்.

அதோ பார்,

நீள் மாடக் கூடலில் கொடி எழுந்து பறப்பதை.

 

 

கடும்புனல் கால்பட்டுக் கலுழ்தேறிக் கவின்பெற,

நெடுங்கயத்து அயலயல் அயிர்தோன்ற, அம்மணல்

அடுத்தூர வலிப்பபோல் பீர்வீயக் காதலர்ப்

பிரிந்தவர் நுதல்போலப் பொய்கைபூப் புதிதீன,

மெய்கூர்ந்த பனியொடு மேல்நின்ற வாடையால்

கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன்,

பொய்யேமென்று ஆயிழாய், புணர்ந்தவர் உரைத்ததை

மயங்கமர் மாறட்டு, மண்வௌவி வரபவர்,

தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ?

 

பயங்கெழு பல் கதிர் பால்போலும் பொழுதொடு

வயங்கிழை தண்ணென வந்தவிம் அசைவாடை?

 

தாள்வலம் படவென்று தகைநன்மா மேல்கொண்டு

வாள்வென்று வருபவர் வனப்பார விடுவதோ

நீள்கழை நிவந்தபூ நிறம்வாடத் தூற்றுபு,

தோளதிர்பு அகம்சேரத் துவற்றுமிச் சின்மழை?

பகைவென்று திறைகொண்ட பாய்திண்தேர் மிசையவர்

வகைகொண்ட செம்மல்நாம் வனப்பார விடுவதோ?

புகையெனப் புதல் சூழ்ந்து பூவங்கள் பொதிசெய்யா

முகைவெண்பல் நுதிபொர முற்றிய கடும்பனி

எனவாங்கு

வாளாதி வயங்கிழாய், வருந்துவள் இவளென

நாள்வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொயன்றி

மீளிவேல் தானையர் புகுதந்தார்

நீளுயர் கூடல் நெடுங்கொடி எழவே.

 

(பாலைக் கலி: 31)

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்