கலித்தொகைப் பாடல்கள்... 15
ரசனைக்
குறிப்புகள்
15
எண்ணிய
நாள் வரையிறவாது புகுதந்தார்
மக்களெல்லாரும் சிறப்புற வாழும்படி
ஒருபோது
நிலமெங்கும் செழிக்க
பாய்ந்துகொண்டிருந்த யாறு,
அடிமணல் தெரியும்படி
வற்றத் தொடங்கிவிட்டது.
தாம் தாழ்ந்திருந்த காலத்தில்
தமக்குதவி செய்தார் தாழ்ந்தபோது,
முன்சென்று உதவும்
உயர் குணத்தார்போல,
யாறு வறண்டபோதும்
நீருண்ட கரை நிலப் பூமரங்கள்
பூத்துப் பொலிந்து
அழகை
உதவியாய்ப் பகிர்கின்றன.
இளவேனில் முழுதுமாய்ப்
பிறந்துவிட்டது.
காஞ்சி மலரின் மகரந்த மணி குளித்த
கருங்குயில் காவில் கூவுகிறது.
இளவேனில் வந்துவிட்டதை
மீளமீள எனக்கு ஞாபகப்படுத்துகிறது.
இருந்தும்
என் காதலர் செய்து சென்ற
தீமை மறந்து
என்னால் அப்போதும் இருக்க முடியும்.
ஆனால்
பொய்ச்சாட்சி சொன்னவன் கீழே வர
வாடிவிடும் உணர்மரம்போல்
என் நெஞ்சில் மூண்டெழும்
காதல் கனலானது
என்னழகை வாட்டி
தன்னிருப்பைக்
காட்டிவிடுகிறதே,
நான் என்ன செய்வேன்?
பூக்களின் பாரத்தால்
தாழ்ந்திருக்கும் பூங்கொம்பில்
வண்டினம் வந்து மொய்த்து
மேலும் தாழ வைத்தாற்போல,
இளவேனிலும் அவர் நினைவும்
வருத்துவதை மறந்து
என்னால் இருக்கமுடியும்.
ஆனால்
நீதி செய்யாத மன்னனின் ஆட்சியில்
குடிகள் கலங்குவதுபோல,
கண்ணீர் தன்னாலே கசியுமாயின்
நானென்ன செய்வேன்?
பூவிதழ் விரிய
தாதுண்ணும் தும்பிகள்
இசை பரத்திப் பாய்ந்தாலும்,
அவர் குறை மறந்து
என்னால் இருக்க முடியும்.
ஆனால்
தன்னுறவினர்க் கருதாது
தன்னை மட்டுமே கருதி வாழ்ந்தவனின்
அவலம் நிச்சயம்போல்,
வளைகள் கழன்றும் தோள்கள் மெலிந்தும்
தாமாகவே போகின்றனவே,
அதற்கு நான் என்ன செய்வேன்?
என,
உன் உள்ளத் துயருரைத்து
வருந்தாதே.
சொல்லிச் சென்ற நாளெல்லை
கடவாது,
கண்ணின் துயர் தீர்க்க
கைவிரைவதுபோல்
உன் துயர் கழைய
புரவியேறி தலைவர் நகர் புகுந்தார்,
அறி நீ!
மன்னுயிர் ஏமுற மண்ஞாலம் புரவீன்று
பன்னீரால் பாய்புனல் பரந்தூட்டி இறந்தபின்
சின்னீரால் அறல்வார, அகல்யாறு கவின்பெற,
முன்னொன்று தனக்காற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடையாளர்போல்,
பன்மலர் சினையுகச் சுரும்பிமிர்ந்து வண்டார்ப்ப,
இன்னமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்.
விரிகாஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும்
பிரிவஞ்சாது அவர்தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்
கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி
எரிபொத்தி என்நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?
பொறைதளர் கொம்பின்மேல் சிதரினம் இறைகொள
நிறைதளராது அவர்தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்
முறைதளர்ந்த மன்னவன்கீழ்க் குடிபோலக் கலங்குபு
பொறைதளர்பு பனிவாரும் கண்ணாயின், எவன்செய்கோ?
தளையவிழ்பூஞ் சினைச் சுரும்பு யாழ்போல இசைப்பவும்
கிளையழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல்லென்று
வளையானா நெகிழ்போடும் தோளாயின், எவன்செய்கோ?
எனவாங்கு,
நின்னுள்நோய் நீயுரைத்து அலமரல், எல்லா! நாம்
எண்ணிய நாள் வரையிறவாது காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண்ணுறுபூசல் கைகளைந் தாங்கே.
(பாலைக் கலி: 34)
Comments