கலித்தொகைப் பாடல்களின்... 6
6. நடுங்குநர் காண்மார்
நகை குறித்தனரே!
செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல
எரிமேய்ந்த கரிவறல் வாய்புகுவ காணாவாய்ப்
பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான்
திரிமருப்பு ஏறோடு தேரறற் கோட,
மரல்சாய மலை வெம்ப மந்தி உயங்க,
உரல்போல் அடிய உடம்புயங்கு யானை
ஊறுநீர் அடங்கலின் உண்கயம் காணாது
சேறுசுவைத்துத் தம் செல்லுயிர் தாங்கும்
புயல்துளி மாறிய போக்கரு வெஞ்சுரம்
எல்வளை எம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆயிதழ் அரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறின் அவ்வடி கறுக்குந அல்லவோ?
நலம்பெறு சுடர்நுதால் எம்மொடு நீவரின்
இலங்குமாண் அவிர்தூவி யன்னமென் சேக்கையுள்
துலங்குமான் மேலூர்தித் துயிலேற்பாய் மற்றாண்டை
விலங்குமான் குரல்கேட்பின் வெருவுவை அல்லையோ?
கிளிபுரை கிளவியாய் எம்மொடு நீவரின்
தளிபொழி தளிரன்ன எழின்மேனி கவின்வாட
முளிஅரில் பொத்திய முழங்கழல் இடைபோழ்ந்த
வளியுறின் அவ்வெழில் வாடுவை யல்லையோ?
எனவாங்கு
அனையவை காதலர் கூறலின், வினைவயின்
பிரிகுவ ரெனப்பெரி தழியாது திரிபுறீஇக்
கடுங்குரை அருமைய காடெனின் அல்லது
கொடுங்குழாய் துறக்குநர் அல்லர்
நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே.
(பாலைக்
கலி: 12)
போர்மேற் சென்ற
சினங்கொண்ட வேந்தனொருவன்
தன் வெற்றியின் அடையாளமாய்
பகைவன் நாட்டைத் தீமூட்டி எரிக்கிறான்.
பாலை வழியானது அதுபோல்
கரிந்தும் வறள்பட்டும் போய்க் கிடக்கும்.
அக் கடுவழியில்
தாகம்மேலிட்ட பெண்மானொன்று
முறுக்குண்ட கொம்புடைய தன் ஆண்மானோடு
கானலையே நீரென்றெண்ணி
அலைவுற்று அழியும்.
ஓடியும் பாய்ந்துமாய்
அசைவியக்கம் கூடுதல்பெற்ற மந்திகளும்
நீர் வேட்கையில்
நிலைதடுமாறுகின்றன.
உரல்போல் பருத்த அடிகொண்ட யானையுமே
நீர்வேட்கை மிக்கலைந்து
கடைசியில்
வற்றிய குளமொன்றில்
சேற்றை உறிஞ்சி
தன் உயிர் காக்கிறது.
அவ்வாறான கொடுவழியில்
என்னுடன் நீ வந்தால்
உன் தாமரைப் பூப் பாதங்கள்
நெருப்புப் பட்டவுடன்
பற்றிவிடும் அரக்கினைப்போல்
கறுத்தும் கன்றியும்
பாழ்பட்டுப் போகாவோ?
என்னோடு நீ வரின்
சிங்கக் காற் கட்டிலிலே,
அன்னத்தின் மென்னிறகுப்
படுக்கையிலே துயிலும் நீ,
கடுமையான காட்டில்
சிங்கத்தின் நிஜ குரலில்
வெருண்டு போவாயே!
என்னோடு நீ வரின்
மழை கண்டு தளிர்க்கும் உன்
துளிர்போன்ற மேனியிலே
உலர்ந்த புதர் மூண்ட தீயை
ஊடறுத்து வந்த காற்று
பொசுக்கிப் போகாதோ!
என்றெல்லாம்
சொன்னாரா உன் தலைவர்?
பொருள் தேட அதனாலே
அவர் பிரிவார் என்றெண்ணி
அவலத்தைக் கொள்ளாதே.
உன்னைப் பயமுறுத்த
இது
விளையாட்டாய் அவர் சொன்னார்.
000
Comments