கலித்தொகைப் பாடல்களின்... 4
ரசனைக் குறிப்பு 4
அரிதாய அறனெய்தி அருளிலோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநம் காதலர்
வருவர்கொல், வயங்கிழாஅய்! வலிப்பல் யான், கேஎள்
இனி.
அடிதாங்கும் அளவின்றி, அழலன்ன வெம்மையால்
கடியவே, கனங்குழாஅய், காடு என்றார், அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே!
இன்பத்தின் இகந்தொரீஇ, இலைதீர்ந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடு என்றார், அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே!
கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரும் தகையவே காடு என்றார், அக்காட்டுள்
இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே!
எனவாங்கு
இனைநலம் உடைய கானம் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே!
(பாலைக் கலி: 10)
அறப் பண்பு ஓம்பியதால் அரியதாக வறுமைப்பட்டோர்
துயர்பட்ட காலத்தில் வந்து இரக்கின்றவேளையில்
அவர்கட்கு ஈதற்கான பொருள் வேண்டியும்,
பகைவர்க்கு எதிரான போரில்
அவர்களைத் தண்டிக்கவேண்டியும்
நேரும் பிரிவுகள் தவிர்க்கப்பட முடியாதன.
அவ்வாறு பிரிந்து செல்வதும்கூட
உள்ளமொன்றிய காதலர் பின் சேர்கின்ற காலத்தின்
புணர்ச்சியில்
இன்பத்தை மிகுப்பிக்கவே செய்கின்றதென
பொருள் தேடிப் பிரிந்தார்
வருவேனெனச் சொன்ன காலம் வருவது கண்டு
தலைவி கலங்குவதைக் காண்கிறாள் தோழி.
அவளைத் தேற்றியே ஆகவேண்டுமென
எண்ணுகிறாள் தோழி.
பின்வருமாறு அவளுரை விரிகிறது:
‘தலைவி, நான் சொல்வதைக் கேள்.
காலடி பதிக்கவும் இயலாத பெருவெப்பம் கொண்டது
பாலை நில வழியெனக் கூறியிருந்தாலும்,
அவ்வாறான மலைப் பகுதியில்
குடிநீர் சிறிது குளத்தில் கண்டு
தாகத்தில் வருந்திய குட்டி யானை
முதலில் குடித்து மீந்த நீரை
தன் பெண் யானை அடுத்ததாய்க் குடிக்க விட்ட ஆண் யானை
கடைசியில் தானுண்ணுகிற காடெனவும் அவர்
சொல்லியிருக்கிறாரல்லவா!
இலை தீர்ந்த கொப்புகளைக் கொண்டதால்
மரங்கள் நிழல்செய்ய முடியாத
கொடுவழி கொண்டது எனக் கூறியிருப்பினும்,
அங்கே அக் கடுவெப்பத்தால் வருந்திய பெண்புறவை
தன் மென் சிறகரால் வீசி
ஆண் புறவு தெளிவிக்கும் தகைமையதென்றும்
சொல்லியிருக்கிறாரல்லவா!
வெய்யிலின் கடுமையால்
அங்கு இயல்பில் முளைக்கும் மூங்கிலே வாடி
நிழல் காணக் கிடைக்காதபடி
இருக்கும் அக் கடும் வெப்ப வலயத்தில்
வருந்துகின்ற பெண் மானை
கலைமான் தன் சொந்த நிழலைக் கொடுத்து ஆற்றுமளவு
கடுமைய காடுவென்றும்
சொல்லியிருக்கிறாரல்லவா!
இவ்வாறான கானகம் சென்றவரை
இவ்வாறான ஈரமான காட்சிகள்
உன் நலத்தையும் எண்ணப் பண்ணும்.
மட்டுமில்லை,
முகட்டுப் பல்லியும் ஒத்து சப்தித்தது;
மேலும், நல்ல சகுனமாய் என் இடக் கண்ணும் துடித்ததடி.
000
Comments