கலித்தொகைப் பாடல்களின்... 9

 

ரசனைக் குறிப்புரை : 9

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை!

 

(பாலைக் கலியிலுள்ள பதினேழாம் பாடலிது.

இதில் பன்னிரண்டு வரிகளுள.

இதிலொரு முழுமை உளதெனினும்,

இதுவே முழுதான பாடலென்று நான் எண்ணவில்லை.

இது, சிதைந்துபோன ஏட்டுப் பிரதியிலிருந்து

பதிப்பாசிரியர் கண்டெடுத்த முழுமையாக

இருக்கலாம்.

ஏனைய பாலைத் திணைப் பாடல்களிலிருந்து

சொல்லும் முறையில் ஓர் அடாவடித்தனமானதும்,

எடுத்தெறிந்த வாழ்க்கைமுறையைக் கொண்டதுமான

ஒரு இறுமாந்த புலவனின் கூற்றை

இப் பாடலின் அர்த்த வெளிப்பாட்டில்

நான் காண்கிறேன்.

அதனால் இது என் ரசனையின் பதிவாக

இங்கே இருக்கிறது.

இதில் நாடகப் பாங்கு எதுவுமில்லை.

விஷயத்தை நேரடியாகக் கூறுகிற பாடலிது.

இதுபோன் ற சங்கப் பாடல்களில்

தோழி கூற்றாக ‘எம் தலைவர்’ / ‘எம் காதலர்’ என

வருமிடங்களின் பொருத்தமின்மையை

பல தடவைகளிலும்

உணர்ந்து, யோசித்து வருந்தியிருக்கிறேன்.

தோழியோ தலைவியோ எம் தலைவரென / எம் காதலரென

எவ்வாறு கூறுமுடியும்?

தலைவி என் காதலர் / என் தலைவர் என்றும்

தோழி உன் காதலர் / உன் தலைவர் எனவும்

சொன்னால்தானே பொருத்தம்?

இதுபற்றிய ஆய்வுரை ஏதேனும் இருப்பதாகத்

தெரியவில்லை.

பண்டைத் தமிழ்ப் பாடல்கள்பற்றிய

கட்டுரைகளிலும் இதற்கான விளக்கம்

நான் கண்டிருக்கவில்லை.

இது புலவனின் எழுத்தா?

உரைகாரரின் எழுத்தா?

பதிப்பாசிரியரின் எழுத்தா?

இதுபற்றி கல்வித் தகைமை உள்ளவர்களின்

ஆய்வு தேவையென

நான் கருதுகிறேன்.

 

ஆனால் இந்தப் பாடல்

அந்தக் குழப்பத்தைத் தரவில்லை.

தலைவி தலைவனுடன் நேரடியாகவே

உரையாடுகிறாள்.

நீ என தலைவனையும் நான் என தன்னையும்

குறிப்பிடுகிறாள்.

உகந்த உரையாடலாகவே

இது தென்படுகிறது.)

 

பொருள் தேடும் வேட்கையில்

உள்ளம் துரத்த

என்னைப் பிரிந்துசெல்ல எண்ணிவிடாதே.

 

நீ என் ஆகத்தில் தீட்டிய தொய்யிலை,

நான் உன்னைத் தழுவுவதால்

என்னில் தொற்றிக்கொண்டுள்ள

உன் மார்பின் அழகுத் தேமலை

எண்ணிப் பார்.

 

என் பேச்சைக் கேட்காமல்

ஒருவேளை நீ பொருள் தேடிச் சென்றாலும்,

அவ்வாறு சென்றவர்கள்

வாரிக்கொண்டு வரும்படியாக

அங்கே பொருளும் கொட்டிக் கிடைப்பதில்லை.

 

அவ்வாறு பொருள் தேடிச் செல்லாதவர்கள்

இங்கே பட்டினி கிடந்து செத்ததுமில்லை.

 

இளமையும் ஆசையும் ஒன்றாய்க் கொண்டவர்கள்

அவற்றைத் துறந்து போய்த் தேடும் பொருளை

எங்கேனும் அந்தளவு விழைவார்களா?

 

ஒரு ஆடையைப் பாதி பாதியாகக் கிழித்து

அணிகின்ற வறுமை வந்தாலும்

ஒன்றாயிருந்து இளமையையும் ஆசையையும்

அனுபவிக்கும் வாழ்க்கைக்கு எது நிகராக இருக்கமுடியும்?

 

அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப

பிரிந்துறை சூழாதி, ஐய! விரும்பி நீ

என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்

மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக் காண்.

 

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;

ஒழிந்தோர் எல்லோரும் உண்ணாதும் செல்லார்;

இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்

வளமை விழைதக்க துண்டோ? உள நாள்

ஒரோஒகை தம்முள் தழீஇ, ஒரோ ஒகை

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதரோ

சென்ற இளமை தரற்கு.

(பாலைக் கலி: 17)

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)