கலித்தொகைப் பாடல்களின்... 11
ரசனைக்
குறிப்புகள்
11
மடமான்போல்
நின்னாங்கு
வரும் என் நெஞ்சு
தினைப் புன விளைச்சலை
யானை வந்தழிக்கிறபோது,
கவண் வீசி அதைக் கலைப்பர்
புனக் காவலர்.
அப்போது அக் கவண் கற்கள்
பூமரங்களையும் தாக்கி
அதன் கொம்பர்களை
முறித்துப் போடும்.
அவ்வாறான மலையின் வழியானது
வெப்ப மிகுதியால்
கடத்தற்கரியதாய்ப் போயிருக்கும்.
அத்தகைய வழி கடந்து
தனித்துச் செல்ல எண்ணியிருக்கிறாய் நீ.
அப்போது
நானிங்கே வாடியிருத்தல்
தவிர்க்க முடியாததாகும்.
அது
ஊராரின் நகைப்பிற்கே
என்னை இடமாக்கும்.
அதன்மேல் நான்
உண்பதும் வாழ்வதும்
அர்த்தமற்றதாகிவிடும்.
சுவைத்த பின் ஒதுக்கிவிடப்பட்ட
பெண்மேனி,
நீருண்ட பின் வீசப்பட்ட
பிளாவை ஒத்ததாகும்.
நலமெலாம் அனுபவித்துக்
கைவிடப்பட்ட பெண்கள்,
வதிவோர் நீங்கிப் போன
வெற்றூரை ஒத்தவராவர்.
சுகித்த பின்
ஒதுக்கிவிடப்பட்ட பெண்கள்,
தலையிலிருந்து வீசப்பட்ட
காய்ந்த பூச்சரம் ஒத்தவராவர்.
நானும் உன்னால்
அன்னவர்போல் ஆகிவிட்டேன்.
பரவாயில்லை.
கொலைவெறியோடு துரத்திய
நாயிடமிருந்து
தப்பியோடிய மானானது
வேடனிடம் அகப்பட்டுக்கொண்டதுபோல,
ஆசைகளிடமிருந்து தப்புவதற்காய்
என் நெஞ்சு
உன்னிடமே தஞ்சமாகிறது.
அதை
என்னிடம் திரும்பி வாராதபடி
செய்துகொள்க.
இலங்குஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்
புலங்கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும்
விலங்குமலை வெம்பிய போக்கரு வெஞ்சுரம்
தனியே இறப்ப, யான்ஒழிந் திருத்தல்
நகுதக் கன்று இவ் வழுங்கல் ஊர்க்கே.
இனி யான்
உண்ணலும் உண்ணேன், வாழலும் வாழேன்.
தோள்நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேணீர் உண்ட குடைஓ ரன்னர்.
நல்குநர் புரிந்து நலன்உணப் பட்டோர்
அல்குநர் போகிய ஊரோ ரன்னர்.
கூடினர் புரிந்து குணன்உணப் பட்டோர்
சூடினர் இட்ட பூஓ ரன்னர்.
எனவாங்கு
யானும் நின்னகத்து அனையேன், ஆனாது,
கொலைவெம் கொள்கையொடு நாய்அகப் படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மடமான்போல
நின்னாங்கு வரூஉம் என்நெஞ்சினை,
என்னாங்கு வாராது ஓம்பினை கொண்மே.
(பாலைக் கலி: 22)
000
Comments