கலித்தொகைக் பாடல்கள்... 12

 

ரசனைக் குறிப்பகள்: 12

 

அஞ்சியது ஆங்கே அணங்காகும்  

 

கேட்கும்போதே

நடுக்கத்தையும் வெறுப்பையும் தந்த

‘நாம் அஞ்சுகிற எதுவோ

அதுவே

அணங்காகிற’தென்ற சொல்

உண்மைதான் தோழி.

சொல்கிறேன் கேள்:

 

என் அழகைப் பாராட்டி

நாளும் புதிது புதிதாக

அவர் சொல்லும்போது,

இதில் ஏதோ இருக்கிறதென

அப்போதே நான் நினைத்தேன்தான்.

ஆனாலும் பெரிதாக அதை

எடுக்கவில்லை.

அதை உண்மையாக்கிக் கொள்ள

சம்பவம் நடந்திருக்கிறது.

 

வாசம் வீசும் படுக்கையில்

படுத்துப் புணர்ந்த பின்

என் ஆகத்தில் அவர்

அயர்ந்து தூங்கினார்.

அப்போது,

‘கூர்மையான தந்தங்களையுடைய

யானையானது தாகம்மேலிட்டு

கானலைக் கண்டு அலமந்தோடும்

வெஞ்சுரம் கடந்துசென்று

யான் பொருளீட்டி வரும்வரை,

தன் முன்னிறைக் கைகொண்ட

வளையல்கள் கழலாமல்,

பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு

என் மனையை நிர்வகிக்கும் வலிமை

இவள் கொண்டிருக்கிறாளா?’

என பிதற்றினார்.

 

அதுவே அவர் எண்ணமானால்,

அவரின்றி நான் வாழும் உளவலிமை

எனக்கு இல்லையென்பது உண்மையானால்,

அவள் மார்பே கதியென்று கிடந்தவர்,

இப்போது நீங்கிப் போனாரேயென்று

வம்பு பேசும் பெண்களின் வசையை

இங்கே விட்டுவிட்டு,

அவருடனேயே என்னுயிரும்

பிரிந்து போய்விடுமென

அவரிடம் சொல்வாயாக.

 

000

 

 

நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும், தாம்

அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னும் சொல்

இன்தீம் கிளவியாய், வாய் மன்ற, நின் கேள்:

 

புதுவது பன்னாளும் பாராட்ட, யானும்

இதுஒன்று உடைத்து என எண்ணி, அது தேர,

மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்

பாயல்கொண் டென்தோள் கனவுவார், ஆய்கோல்

தொடிநிறை முன்கையாள் கையாறு கொள்ளாள்

கடிமனை காத்தோம்ப வல்லவள் கொல்லோ?

‘இடுமருப்பு யானை இலங்குதேர்க் கோடும்

நெடுமலை வெஞ்சுரம் போகி, நடுநின்று

செய்பொருள் முற்றுமளவு என்றார், ஆயிழாய்!

 

தாமிடைகொண்டது அதுவாயின், தம்மின்றி

யாமுயிர் வாழும் மதுகை இலேமாயின்

தொய்யில் துறந்தார் அவரென நீ தம்வயின்

நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு

போயின்று சொல், என் உயிர்.

 

(பாலைக் கலி: 23)

 

 

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்