கலித்தொகைப் பாடல்களின்....8
8. அறனோடி விலங்கின்று
(அறன்
ஓடிச் சென்று விலக்கியது)
துயருற்றுத் தூக்கமற்ற கண்களில்
நீர் சொரிந்துகொண்டிருக்கிறது;
கவனிப்பற்றதால் அழகும்
அழிந்துகொண்டிருக்கிறது;
கைகள் மெலிந்துபோக
வளையல்களும் கழன்றோடிவிட்டன.
இவையெல்லாம் மறந்து
பிரிந்தவர் நலம் மேலெழுந்து
வருகையில்,
தோழி, என்னுள் ஓரெண்ணம் எழுகிறது,
சொல்லட்டுமா?
நான் இவ்வண்ணம் துயருழக்கும்படி
பிரிந்து சென்றிருந்தாலும்
அவர் செல்லிட வழியிலுள்ள கொதி கல்மேல்
மழை பெய்யும்படியாக,
இசைக்கு இரங்கும் மேகக் கடவுளை
நான் வேண்டினால் என்ன?
நானிங்கே புலம்பும்படியாக விட்டு
பொருள் விரும்பிச் சென்றார் வழியில்
மரத்தின் இலைகள் கிளைகளெல்லாம்
வாடும்படி தகிக்கும் சூரியனே,
அங்கெல்லாம் உன் சினம் தணிந்து
அருளை நீ சொரிகவென
நான் இறைஞ்சினால் என்ன?
என் அன்பின் திறம் எண்ணாது
என்னை இங்கே துயருறவிட்டு
பொருள் தேடிச் சென்றாரின்
வழி கடுமையானது.
புற்களெல்லாம் எரிந்து
தீப்பிழம்பாய்ப் பரவிவரும்.
அதனூடு வருகையிலே
காற்றும் கொதிப்பேறும்.
அதனால், காற்றே,
உன் கடுமை தணிந்து
சாந்தம் கொள்ளென
நான் வணங்கினால் என்ன?
என்று கேட்கும் தலைவிக்கு,
தோழி சொல்கிறாள்:
பிரிந்து சென்றவருக்காய்
தெய்வத்தை வேண்ட விழையும்
என் தலைவியே,
நீ அது செய்யவேண்டியதில்லை.
பூமி வறள்ந்தால்
மழையையும் வருவிக்கும்
கற்புத் திறன்கொண்ட உன் நலம்
பசப்பூர்ந்து அழிந்துவிடக்கூடாதேயென,
அறக் கடவுள்
தானே முந்திச் சென்று
உன் வேண்டுதலை நிறைவேற்றிவிடும்,
கலங்காதே.
பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க,
வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர,
ஆடெழில் அழிவெஞ்சாது அகன்றவர் திறத்தினி
நாடுங்கால் நினைப்பது ஒன்றுடையேன்மன், அதுவுந்தான்
தொன்னலம் தொலைபு ஈங்கு யாம் துயருழப்பத் துறந்துள்ளார்
துன்னி நம் காதலர் துறந்தேகும் ஆரிடைக்
கன்மிசை உருப்பறக் கனைதுளி சிதறென
இன்னிசை எழிலியை இரப்பவும் இயைவதோ?
புனையிழாய், ஈங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய ஆரிடைச்
சினைவாடச் சிறக்கும்நின் சினந்தணிந்து ஈகவெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?
ஒளியிழாய், ஈங்குநாம் துயர்கூரப் பொருள்வயின்
அளிஒரீஇக் காதலர் அகன்றேகும் ஆரிடை
முளிமுதல் மூழ்கிய வெம்மைதீர்ந்து உறுகென
வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?
எனவாங்கு,
செய்பொருள் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன
தெய்வத்துத் திறன்நோக்கித் தெருமரல், தேமொழி,
வறனோடின் வையகத்து வான்தரும் கற்பினாள்
நிறனோடிப் பசப்பூர்தல் உண்டென
அறனோடி விலங்கின்று,
அவர் ஆள்வினைத் திறத்தே.
(பாலைக் கலி: 15)
Comments