கலித்தொகைப் பாடல்களின்... 7
7. அவவுக் கைவிடுதல்
அது மனும் பொருளே
இனிதுறங்க அழகிய பெரிய தோள்களும்,
அழகிய நீலக் கண்களும்,
முல்லை மொட்டுக்கள்போன்ற
வெண் பல் வரிசையும்,
வாசனைத் திலகமிட்ட
மணம் வீசும் நெற்றியும்,
நீளிரும் கூந்தலும்,
மலரவுள்ள பெரும் பூக்களையொத்த
இரு முலைகளின் ஆகமும்,
அகன்ற அடிவயிறும்,
பெரிதாகிய சுடர் விரிக்கும்
சிறிதாகிய வளைகளினை
அணிந்துள்ள முன் கரமும்
கொண்டவளே எனவாங்கு
பற்பலவும் பண்டெல்லாம்
பதமாகச் சொன்னாய் நீ!
இனியன சொன்னதெல்லாம்
இன்னாதன செய்தற்கே
என்பதனை இன்றறிந்தேன்.
அது மிக்க துன்பம் தரும்.
ஏன் இவ்வாறு மாறிக்கொண்டாய்?
செய்பொருள் தவிர வேறு
உறுதிப் பொருள் உண்டோவென
பிறத்தியார் சொல்லும்
பிழைபட்ட கருத்தில் நீ
உடன்பாடு கொண்டாயோ?
பொருள் நன்கு இல்லாவிட்டால்
காதலைமட்டும்கொண்டு
என்னதான் செய்வதென்ற
பேச்சுக்கள் கேட்டா நீயும்
பிரிந்து செல்ல
முடிவு செய்தாய்?
ஐயனே!
நேர்மையிலிருந்து விலகிச் சேர்க்கும்
பொருளினாலே, நன்கறிவாய்,
இப் பிறப்பில் மட்டுமல்ல
மறுபிறப்பிலும் துன்பம் வரும்.
என்றும் பிரியாமல்
புணர்ந்தினிது வாழ்வதுவே
சிறந்த செல்வம் என்றுணர்வாய்.
ஆதலினால் ஐயனே
என் பேச்சை மதித்து நீ
பிரிவெண்ணம் கைவிடுவாய்!
(பாலைக் கலி: 13)
000
அணைமருள் இன்துயில் அம்பணைத் தடமென்தோள்,
துணைமலர் எழில்நீலத்து ஏந்தெழில் மலருண்கண்,
மணமௌவல் முகையன்ன மாவீழ்வார் நிரைவெண்பல்,
மனம்நாறு நறுநுதல், மாரிவீழ் இருங்கூந்தல்,
அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல்,
சிலநிரை வால்வளைச் செய்யாயோ எனப்
பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி
இனிய சொல்லி இன்னாங்குப் பெயர்ப்பது
இனியறிந்தேன் அதுதுனி யாகுதலே!
பொருளல்லால் பொருளுமுண்டோவென யாழநின்
மருளிகொள் மடநோக்கம் மயக்கப்பட் டயர்தாயோ?
காதலார் எவன் செய்ப பொருளில்லாதார்க்கு என
ஏதிலார் கூறும்சொல் பொருளாக மதித்தாயோ?
செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவதறியாயோ?
அதனால்
எம்மையும் பொருளாக மதித்தீத்தை, நம்முள் நாம்
கவவுக்கை விடப்பெறும் பொருட்டிறத்து
அவவுக்கை விடுதல் அதுமனும் பொருளே.
000
Comments