கலித்தொகைப் பாடல்களின்... 5
ரசனைக் குறிப்பு 5
இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை யார் ஆற்று அறுசுனை முற்றி
உடங்குநீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடுந்தாம் பதிபாங்கு கை தெறப்பட்டு
வெறிநிரை வேறாகச் சாரல் சாரல் ஓடி
நெறி மயக்குற்ற நிரம்பா நீடத்தம்
சிறுநனி நீ துஞ்சி யேற்பினும் அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்!
உரனுடை உள்ளத்தை செய்பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருளிது வென்பாய்!
இளமையும் காமமும் நின்பாணி நில்லா
இடைமுலைக் கோதை குழைய முயங்கும்
முறைநாள் கழிதல் உறாமைக் காண்டை!
கடைநாள் இதுவென்று அறிந்தாரும் இல்லை
போற்றாய், பெரும! நீ காமம் புகர்பட
வேற்றுமைக்கொண்டு பொருள்வயிற் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி.
( பாலைக் கலி: 11)
நீ தூக்கத்தில்
சற்று நீண்டநேரம் கிடந்தாலும்
அந்த அணுக்கமின்மையையே
ஒரு பிரிவாக எண்ணி இனைபவள்
என் தலைவி.
அப்படியானவளைத் தனியே விட்டுவிட்டு
பொருள் தேடிவர செல்ல நினைக்கிறாயே
நான் சொல்பவைகளைச் செவி மடு.
நீ செல்லவிருக்கிற வழியிலே
கொலைஞரால் கொன்று மூடப்பட்ட
நிரைத்த பிணங்களின் குவியல்கள்
அருகுதொறும் அருகுதொறும்
முள்வேலிபோல நின்றுகொண்டிருக்கும்.
முதலில் அவர்களை வென்று அவ் வழி கடக்கவேண்டும்
பின்னால்,
தாகம் மேவிய யானை
சுனையிலே
சிறிதளவு தண்ணீரிருக்கக் கண்டு
ஆவலாய் ஓடி அதிலே திடமென கைவைக்க
வெய்யிலின் வெப்பத்தில் கொதித்திருந்த அந் நீரில்
கை சுடுபட்டுப் போகிறது.
அது பிளிறிக்கொண்டு தறிகெட்டு ஓடியதில்
வழிகளும் செல்வதற்கரியனவாய்க்
கெட்டிருக்கும்.
இவ்வாறான இடர்கள் கடந்துபோய்
நீ பொருளை ஈட்டிக்கொண்டு
வந்துவிடுகிறாயென வைத்துக்கொள்.
அதில் உன்னுடைய உள்ளத்தின் உறுதி
தெரியத்தான் செய்யும்.
ஆனால் எதையெதை இழந்து அவற்றை நீ
அடையவேண்டி இருக்குமென்பதை
கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறாயா?
இளமையும் அது காரணமான எழுச்சிகளும்
உன் விருப்பத்தின்படி காத்து நின்றுவிடா.
அவை கழிந்தால் கழிந்தவைதான்.
மேலும், இளமையாய் இருந்தால்கூட
ஒருவரை மரணம் எப்போது கொண்டுபோகும்,
இன்றுதான் கடைசிநாள் என்பதை
யாரால் கணித்துக் கூறமுடியும்?
அத்தனைக்கு நிலையற்றது வாழ்க்கை.
அதனால்
அவை இருக்கும்போதே வாழ்ந்துவிட வேண்டும்.
அவளது இடையும் முலையும் குழலும் குழையத் தழுவி
வாழ்வதுதானே வாழ்க்கை.
கூற்றமும் மூப்பும் மறந்து வாழ்வதற்கான
மாற்றுவழியும் அதுவல்லவா!
000
Comments