கலித்தொகைப் பாடல்கள்... 31

 

ரசனைக் குறிப்புகள்: 31

என்மீது குறைசொல்லாதே!

 

‘என் பார்வையை எதிர்ப்படும்போது

கையெடுத்துக் கும்பிடுகிறான்.

பிறர் பார்த்துவிடுவார்களே என்றும்

யோசிக்கிறானில்லை.

ஊருக்குத் தெரிந்தால் பழியாவிவிடும் எனச்

சைகை பண்ணும்போது,

போவதா வேண்டாமாவென

யோசித்துக்கொண்டு நிற்கிறான்.

எடியே, இவனை என்ன செய்தால் தகும்?’

 

(என, தலைவி கேட்டதற்கு, தோழி  சொல்கிறாள்: )

‘நானே உன்னைக் கூப்பிட்டு இங்கே கூட்டிவந்து

விட்டேன் என்பதால்

என்மீது குறை சொல்லாதே!

நீயே அவனுடன் பேசித் தீர்த்துக்கொள்.

என் தோளில் தொய்யில் எழுத

குளம்பு எடுப்பதுபோல் சென்று

அவனுக்குக் கிட்டவாக நிற்கிறேன்,

நீ, இங்கேயா நிற்கிறாய் என்பதுபோல்

என்னைத் தேடி அங்கே வந்து சேர்.

நீயே மருந்தானதால்,

நின்றபடியே உன் காலில் விழுந்து

உன்னை அவன் இறைஞ்சுகிறானா இல்லையா, பார்!

 

(தோழி கூற்று:)

சரி; ஆனால்

நான் உடன்பட்டதாய்

அவனுக்குச் சொல்லிவிடமாட்டேன் என

என் கையிலடித்துச் சத்தியம் பண்ணு!

 

(தோழி தொடர்கிறாள்:)

முழுவதும் கேள்:

நீ அவனோடு பேசும்போது

நான் அருகில் நின்றால்

காலால் நிலத்தைக் கிளைந்துகொண்டு

நின்றுவிடுவாய்.

அதனால் நான் போகிறேன்,

நீ அவனோடேயே நின்று என்னவோ செய்.

 

 

 

நோக்குங்கால் நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்

தூக்கிலி; தூற்றும் பழி யெனக் கைகவித்துப்

போக்குங்கால், போக்கு நினைந் திருக்கும்;மற்று நாம்

காக்குமிடம் அன்று, இனி

எல்லா, எவன் செய்வாம்?

 

பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய்

விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல்

கரும்பெழுது தொய்யிற்குச் செல்வல்; ஈங்காக

இருந்தாயோ என்றாங்கு இற.

 

அவன் நின்திருந்தடி மேல்வீழ்ந்து இரக்கும், நோய்தீர்க்கும்

மருந்துநீ ஆகுதலான்.

இன்னும் கடம்பூண்டு, ஒரு கால்நீ வந்தை ; உடன்பட்டாள்

என்னாமை என்மெய் தொடு.

 

இஃதோ அடங்கக் கேள்:

நின்னொடு சூழுங்கால், நீயும் நிலங்கிளையா,

என்னொடு நிற்றல் எளிதன்றோ? மற்றவன்

தன்னொடு நின்றுவிடு.

 

(குறிஞ்சிக் கலி: 33)

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)