கலித்தொகை பாடல்கள்... 25

 

ரசனைக் குறிப்புகள்: 25

என்னைப் பித்தேறச் செய்தான்

 

கொடிப் பூவும் கோட்டுப் பூவும்

நீரின்றிக் காய்ந்து போனதில்

பொன்னினால் செய்த

பூவாத பூக்களை மாலையாக்கி

அணிந்தவளும்,

வளையல் செறிந்த முன்கைகளைக்

கொண்டவளும்,

மூங்கிலை ஒத்த தோள்களை

உடையவளுமான பெண்ணே,

உன் காலடியில் வந்து விழுந்திருந்தும்

கருணையின்றி விலகிச் செல்லல்

நியாயம்தானா? என்று சொல்லி

கஸ்தூரி வாசம்வீசும் என் கருங்கூந்தலை

கொள்ளப் பற்றி

அதை விரல்களிலே சுற்றிக்கொண்டு

முகரச் செய்தான்;

பின் நறவம்பூ மலர்ந்ததுபோன்ற

என் விரல்களைப் பிடித்துக்கொண்டு

கோபமில்லாமலே சிவந்த தன் கண் மறைத்தபடி

ஊதுலைபோல் மூச்சுவிடச் செய்தான்;

தொய்யில் எழுதிய என்

சின்ன முலைகளைத் தடவியபடி

பிடியினைத் தழுவும் களிறுபோல்

தன் பெரிய கைகளினால்

அவன் மூர்க்கமாய்த் தழுவியதில்

என் உணர்ச்சிகளை உச்சமேறச் செய்தான்;

அதனால்

என் உடம்பில் கொதித்திருந்த காமமும்

அவனால் அடங்கியதாயிற்று.

எனவே

என் திருமணத்தை

தோழி செவிலிக்குரைத்தல்,

செவிலி நற்றாய்க் குரைத்தல்,

நற்றாய் தந்தை தனையர்க்குரைத்தல்

என்ற மரபுப்படி

என் திருமணத்தை அவனுடன்

முடித்து வைத்து

அழியும் இந்த உலகத்தில்

அழியாதிருக்கும்படியான புகழை

நீ அடையவேண்டும்.

 

 

 

கொடியவும் கோட்டவும் நீரின்றி நிறம்பெற

பொடியழல் புறந்தந்த பூவாப்பூம் பொலன்கோதைத்

தொடிசெறி யாப்பமை அரிமுன்கை அணைத்தோளாய்!

அடியுறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன,

நரந்தம்நாறு இருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்

பொலம்புனை மகரவாய் நுங்கி சிகழிகை

நலம்பெறச் சுற்றிய குரலகை ஒருகாழ்

விரல்மறை சுற்றி மோக்கலும் மோந்தனன்;

நறாஅ அவிழ்ந் தன்ன என் மெல்விரற் போதுகொண்டு

செறாஅச் செங்கண் புதைய வைத்துப்

பறாஅக் குறுகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;

தொய்யில் இளமுலை இனிய தைவந்து

தொய்யலம் தடக்கையின் வீழ்பிடி அளிக்கும்

மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்.

அதனால்

அல்லல் களைந்தனன் தோழி! நம்நகர்

அருங்கடி நீவாமை கூறின் நன்று என

நின்னோடு சூழ்வல், தோழி. நயம் புரிந்து

இன்னது செய்தாள் இவள்என

மன்னா உலகத்து மன்னுவது புரைமே.

 

(குறிஞ்சிக் கலி: 18)

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)