கலித்தொகைப் பாடல்கள்.... 30

 

ரசனைக் குறிப்புகள்: 30

 

உன் தலைவியைத்தான் தேவை

 

தோழீ, இவன், என்ன தேவையென வந்து இங்கே நிற்கிறான்?

பார்த்தால், எல்லாவற்றையும் இழந்தான்போல் காணப்படுகிறானே!

செல்வமெல்லாம் இழந்து வறுமையுற்ற சான்றோர்

தமது வறுமையைக் களையத் தக்க உறவினரிடம் சென்று

தம் நிலை சொல்லத் தொடங்கியும் நாணத்தால்

சொல்லமுடியாது தடுமாறுபவர்போல்

திரும்பத் திரும்ப எனை நோக்குகின்றான்;

நான் நோக்குகையில் மெல்ல தலையைக் குனிகின்றான்;

யாரிவன்?

(இவ்வாறு தலைவி கேட்கவும், தோழியானவள் அவ் இளைஞன் பக்கம் திரும்புகிறாள்:)

ஏடா, நீ ஏதோ பெறவந்தவன்போல் காணப்படுகிறாய்.

உன் நிழல் உன்னைத் தொடர்வதுபோல்,

எம்மையும் நீ தொடருகின்றாய்.

நீ ஏது பெறவந்தாய்?

ஏன் இவ்வண்ணம் அலைகின்றாய்?

 

(அதற்கு அவனது பதில்:)

கேட்டால் உன் தலைவி அதை மறுக்காமல்

தருவாளா?

இரந்தார்க்கு, அவர் கேட்டதைக் கொடுக்க முடியாதுபோனால்

இரக்கப்பட்டோர் சாதலும் கூடுமென்று

வார்த்தை இருக்கிறதே!

 

(அதற்கு தோழியின் பதில்:)

இவள் தந்தையை யாரென்று நினைத்தாய்?

ஒருவர் விரும்பிக் கேட்கும்

எவ்வித மேலான பொருளையும்

யாருக்கும் மறுக்காமல் கொடுப்பவராக்கும்!

நீ வேண்டியதைக் கேள்.

 

(இளைஞனின் பதில்:)

நங்கையே!

பொருள் வேண்டுமளவான வறுமை

எனக்கில்லை.

மருண்டு மடப்பமாய் நோக்கும் உன் தலைவி

தன்னை சினக்காமல் எனக்களிக்கவேண்டும்.

 

‘அப்படியோ?’

(இவ்வாறு தோழி கூறி,

போர்க்களத்து யானைபோல் திமிறி நிற்கும் இவன்,

தனக்கு ஒரு பெண் தேவையென இவ்வளவு பணிந்துகேட்கவும் நேர்ந்ததேயென அதிசயித்து எண்ணியபடி அவன்புறம் திரும்ப, அவன் பின்வருமாறு கூறிவிட்டு செல்கிறான்.)

‘உன் தலைவி தன் நிலைப்பாட்டில் தவறிவிட்டால்,

சந்தடி மிக்க இவ்வூரில்

பலர் ஏளனம் செய்வதாயிருந்தாலும்

மடலூரச் செய்வேன்.’

 

(அவன் சென்ற பிறகு, தோழி தலைவியின் பக்கம் திரும்புகிறாள்.)

தான் மடலூர நேர்ந்தால் தவிர்க்கமாட்டேன் என

இவன் சொல்லிச் செல்வதைப் பார்த்தால்

நாம் எவ்வளவு கேவலமாக ஏளனம் செய்தாலும்

இவன் இப்படியே போய்விடமாட்டான்;

இவன் திரும்ப வரவே செய்வான்.

ஒரு திருடனைப்போல்

அவ்வப்போது உன்னை

நோக்கவும் செய்வான்.

நினைத்து வந்ததை அடையாது போகிற

குணமுடையவனாக இவன் காணப்படவில்லை.

(நீயே உசிதமானதை யோசித்துச் செய் என்பதுபோல் தோழி அத்துடன் முடித்துக்கொள்கிறாள்.

(கலித்தொகையின் சிறப்புகளில் ஒன்று, அது நாடகப் பாங்கான உரையாடலாக அமைந்திருப்பது. இப் பாடல் அவற்றுள் சிறப்பானது.)

 

எல்லா! இஃதொத்தன் என் பெறான்? கேட்டைக்காண்.

செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர்

அல்லல் களைதக்க கேளி ருழைச்சென்று

சொல்லுத லுற்று, உரைக்கல்லா தவர்போலப்

பல்லூழ் பெயர்த் தென்னைநோக்கும், மற்றுயான் நோக்கின்,

மெல்ல இறைஞ்சும் தலை.

 

எல்லா, நீ முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை,

நின்னின் விடாஅ நிழல்போல் திரிதருவாய்;

என் நீ பெறாதது? ஈது என்?

 

சொல்லின் மறாதீவாள் மன்னோ இவள்?

செறாஅ தீதல் இரந்தார்க்கொன்று, ஆற்றாது வாழ்தலின்

சாதலும் கூடுமாம் மற்று.

 

இவள்தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப்பொருள்.

யாது நீ வேண்டியது?

 

பேதாய்! பொருள்வேண்டும் புன்கண்மை ஈண்டில்லை யாழ,

மருளி மடநோக்கின் நின்தோழி என்னை

அருளீயல் வேண்டுவல் யான்.

 

அன்னையோ? மண்டமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு

பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?

 

ஒண்டொடி! நாணிலன் மன்ற இவன, ஆயின் ஏஎ!

 

பல்லார்நக்கு எள்ளப் படுமடல்மா ஏறி

மல்லலூர் ஆங்கண் படுமே, நறுநுதல்,

நல்லாள்கண் மாறிவிடின் எனச் செல்வான், நாம்

எள்ளிநகினும் வரூஉம் இடையிடைக்

கள்வர்போல் நோக்கினும் நோக்கும், குறித்தது

கொள்ளாது போகாக் குணனுடையன், எந்தைதன்

உள்ளம் குறைபடா வாறு.

 

(குறிஞ்சிக் கலி: 31)

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)