கலித்தொகைப் பாடல்கள் 27

 

ரசனைக் குறிப்புகள்: 27

 

அரசனின் தவறுதான்

 

ஊரின் சோலைக்கண் வாய்க்காலோரமாய்

உள்ளது கொன்றை மரம்.

அதன் பூக்கொண்டு கட்டிய சரத்தினால்

அதுவும் கூந்தலும் ஒன்றாகும்படி

அணிசெய்து விட்டிருக்கிறார்கள் வீட்டிலே.

அந்தப் பூமாலையும் கூந்தலுமோவெனின்

அவளது தோளில் தொங்கிக் கிடக்கின்றன.

கருங்கூந்தல் கவிந்ததனால்போலும்

அவள் முகம் மேலும் மேலுமாய்ச்

சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு வருபவள் எவளாயிருப்பாள்?

ஒருவேளை சிறந்த கலைஞன் ஒருவன்

தன் கைவண்ணத்தில்

தைத்துருவாக்கிய பாவையோ அது?

சிறப்புகள் கொண்ட அவயவங்கள் தேடி

படைக்கப்பட்ட ஒரு பெண்ணாயிருக்கலாமோ?

ஆடவர்மேற்கொண்ட வெறுப்பினால்

யாரோ கொண்ட அணங்கின் வடிவமோ அது?

இப்படியானவளை ஏன் இவ்வாறு காவலின்றி விட்டிருக்கிறார்கள்?

ஒருவேளை,

செல்வமுள்ள பெற்றோர்க்கு அருமையாய்க் கிடைத்த

ஒரு செல்ல மகளோ இவள்?

இவளோடு கதையாடி

இவள்பற்றி நான் அறிந்து வரப்போகிறேன்.

 

‘அன்னம்போல் சாயலும்,

மயில்போல் ஒயிலும்,

புறவுபோல் திட்பமும்,

மான்போல் மருட்சியும் கொண்ட

பேரழகியே!

இவையெல்லாம்

உனைக் கண்டாரைப்

பேதுறச் செய்யும் என்பதை

நீ அறிவாயா, மாட்டாயா?

 

உன் தோள்களின் மூங்கிற் காட்டழகும்,

இளமார்பின் தன்மையும் தினுசும்,

வளைந்த அழகிய முன்கையும்,

வெண்பல் வரிசையும் ஆகிய இவையெல்லாம்

உன்னைக் கண்டாரை

அணங்காய்க் கொன்றுவிடுமென்பதை

நீ அறிவாயா, மாட்டாயா?

 

மற்றும் பிற அங்கங்களின் அழகும் எல்லாம்

சொல்லக்கூடியனவோ!

மயிர் நிறைந்த உன் கைகள்தாம் என்ன அழகு!

முலைகள்…! ஒருபோது முற்றிய கோங்குபோல் உள்ளன.   இன்னொருபோது அடிபரந்து குரும்பையாய்த் தென்படுகின்றன. இன்னொருபோது மழைத் துளி கிளப்பும் குமிழிபோல் காண்கின்றன.

உன்னைப் பார்த்தவரின் உயிரினை

இவை பழிவாங்குமென்பதை

நீ அறிவாயா, மாட்டாயா?

 

இவ்வாறெல்லாம் பிறர் படும் துன்பங்களை

நீ அறியமாட்டாய்.

அதனால்தான் எதுவும் பேசாமல்

மௌனமாய்ப் போய்க்கொண்டிருக்கிறாய்போலும்.

எனினும், இது உன் தவறில்லைத்தான்.

உன் பெற்றார், உற்றாரின் தவறா?

அப்படியுமில்லை.

மதம் பிடித்த யானையை நீர் நிலைக்குக்

கொண்டு செல்கையில்

அதைப் பறையறைந்து

ஊர்க்கு அறிவிக்கவேண்டுமென்ற

அரச கட்டளை இருக்கிறது.

அதுபோல், நீ வெளியே வருகையில்

இன்னார் வருகிறார்கள், ஆடவரெல்லாரும்

உஷாராகுங்களென

பறையறைந்து தெரிவிக்கவேண்டுமென

ஆணை பிறப்பிக்காத அரசனே தவறுடையான்.

 

 

ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க்கால்

கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு,

கழும முடித்துக் கண்கூடு கூழை

சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல்மதி

தீங்கதிர் விட்டதுபோல முகனமர்ந்து

ஈங்கே வருவாள் யார்கொல்? ஆங்கே ஓர்

வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்

உறுப்பெலாங்கொண்டு இயற்றியாள்கொல்? வெறுப்பினால்

வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம்கொல்? ஆண்டார்

கடிதிவளைக் காவார் விடுதல், கொடியியல்,

பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள், ஈங்கு இதோர்

நல்கூர்ந்தார் செல்வமகள்.

இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து.

நல்லாய், கேள்:

ஆய்தூவி அனமென, அணிமயில் பெடையெனத்

தூதுணும் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்

மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய், நிற்கண்டார்ப்

பேதுறூஉம் என்பதை அறிதியோ, அறியாயோ?

நுணங்கு அமைத் திரளென, நுண்ணிழை அணையென,

முழங்குநீர்ப் புணையென, அமைந்தநின் தடமென்தோள்

வணங்கிறை வாலெயிற்று அம்நல்லாய், நிற்கண்டார்க்கு

அணங்காகுமென்பதை அறிதியோ, அறியாயோ?

முதிர் கோங்கின் முகையென, முகம்செய்த குரும்பையெனப்

பெயல்துளி முகிழெனப் பெருத்த நின் இளமுலை

மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார்

உயிர்வாங்கு மென்பதை உணர்தியோ, உணராயோ?

எனவாங்கு,

பேதுற்றாய்போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்.

யாதொன்றும் வாய்வாளாது இறந்தீவாய், கேளினி,

நீயும் தவறில்லை, நின்னைப் புறங்கடைப்

போதர விட்ட நுமரும் தவறிலர்.

நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்

பறையறைந் தல்லது செல்லற்க என்னா

இறையே தவறுடையான்.

 

(குறிஞ்சிக் கலி: 20)

 

 

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)