கலித்தொகைப் பாடல்கள் 24
ரசனைக்
குறிப்புகள்: 24
இவளின்றி
நான் வாழேன்!
முறம்போன்ற செவியின் மறைப்பிடமாய்
பாய்ந்து தாக்கிய புலிய,
அறமல்லாதன செய்த துரியோதனனின்
தொடையைத் தாக்கி பீமசேனன் கொன்றதுபோல்
அதன் தொடையைத் தன் தந்தங்களால் குத்திக் கொன்ற
யானையானது,
மல்லர்களை வென்ற திருமால்போல்
தன் சுற்றத்துள் பெருமிதமாய் நடந்து திரியும் நாடனே,
இதைக் கேள்:
மாலை சூடிய என் தலைவி
சுட்டிய இரவுக் குறிக்கு
தாமரை மலர் மாலை அணிந்து
தண்ணறும் சாந்து மார்பில் பூசி
நீ வரின்,
மணம் வீச மலை வழியில் நின்று
பலியெடுக்கும் அணங்கு என
மலை வாழ்நர் உன்னை எண்ணிவிடுவர்.
தொங்கும்படியான கூந்தலுள்ள என் தலைவி
சுட்டிய இரவுக் குறிக்கு
ஈர ஆடையோடும் இருட்டிலேயும்
நீ வரின்
தீப்பந்தம் ஏந்துவோர், கவண் எறிவோர்,
அம்பெய்வோராகிய தினைப் புனக் காவலர்
உன்னைக் களிறென்று ஆர்ப்பரிப்பர்.
அகன்ற அடிவயிற்றையுடைய என் தலைவி
சுட்டிய இரவுக் குறிக்கு
அவள்மீது அன்புகொண்டவனும்
மலைநாட்டுத் தலைவனுமாகிய நீ
வரின்
புலியென ஊர் உன்னை எண்ணிவிடும்.
அவ்வாறு விலங்கென எண்ணாது
உண்மையை ஊர் அறிந்தால்
தன்மீது ஏற்படக்கூடிய பழியோடு
இவள் உயிதோடு வாழமாட்டாள்.
இவளில்லாமல் நானும் வாழமாட்டேன்.
அதனால் காலையிலேயே வந்து
உன் விருப்பத்தைக் கூறி
இவளை நீ பெண் கேட்கவேண்டும்.
புதியதுபோன்ற உன் வரவையும்,
மண நினைப்பில் தலைவியின் வெட்கப்பாட்டையும்
நான் சந்தோஷமாகக் காணவேண்டும்.
முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெத்து
மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கறுத் திடுவான்போல் கூர்நுதி மடுத்து அதன்
அதன் நிறம்சாடி முரண்தீர்ந்த நீள்மருப்பு எழில்
யானை
மல்லரை மறம்சாய்த்த மால்போல் தன்கிளை நாப்பண்
கல்லுயர் நனம்சாரல் கலந்தியலும் நாட, கேள்!
தாமரைக் கண்ணியைத் தண்நறும் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்,
மணம் கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென அஞ்சுவர் சிறுகுடியோரே.
ஈர்ந்தண் ஆடையை எல்லி மாலையை
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீ வரின்
ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறென ஆர்ப்பவர் ஏனல் காவலரே.
ஆர மார்பினை அண்ணலை அளியை
ஐதகல் அல்குலாள் செய்குறி நீவரின்
கறிவளர் சிலம்பில் வழங்க லானாப்
புலியென்று ஓர்க்கும் இக் கலிகேழ் ஊரே.
எனவாங்கு
விலங்கு ஓரார் மெய்ஓர்ப்பின் இவள் வாழாள் இவளன்றிப்
புலம்புகழ் ஒருவ, யானும் வாழேன்.
அதனால் பொதியவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்குப்
புதுமை போலும் நின்வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே!
(குறிஞ்சிக் கலி: 16)
Comments