கலித்தொகைப் பாடல்கள்... 29
ரசனைக்
குறிப்புகள்: 29
வாரணவாசிப்
பதம் கொண்டாயோ?
(வாரணவாசிப்
பதம் என்பது, பிறர் துன்பத்தையும் தன் துன்பமாய் உணர்தல்.)
வெள்ளென்று தெரியும்படி தேமல் படர்ந்த
அடியகன்ற அழகிய முலைகளும்,
சுருக்கற்று இளமையின் வீறுடன்
மிளிரும் நெற்றியும்,
வாசம் வீசும் மாலையணிந்த
அடர்ந்த கருங் கூந்தலும்,
படர்ந்திருக்கும் ஒளிர் தேமல்கொண்ட
மேனியும்,
ஒயிலாய் வளைந்த முன்கைகளும்,
மடிப்புள்ள அடிவயிறும் கொண்டவளே!
கண் நிறைந்த அழகியலாரைக் கண்டவரில்
காமநோய் எழுந்து படரும்படியும்
உயிரைமட்டும் எஞ்ச விட்டுப் போதலும்
பெண்தன்மையல்ல என்றுகூறி
ஒருவன் வணங்கினான்;
கண்ணில் நீர் ததும்ப நின்று நடுங்கினான்;
போர் யானைபோன்ற தன் தகைமையெல்லாம் அழிந்து
உள்ளே உடைந்துவிட்டான்போலும், தலைவீ, அவன்!
இவற்றுக்கெல்லாம் ஏது காரணமாய் இருக்கும்?
தெருவிலே இதுமாதிரி பலர் காரணமின்றிக்
கலங்கி நிற்பார்கள்.
அவர்கள் படும் துயரை நீ உன்னதாக
வாரணாசிப் பதம் பெற்றவள்போல்
உணரவேண்டியதில்லையெனவே
என்னால் சொல்லமுடியும், தோழீ, இது குறித்து.
மொட்டுப்போன்ற முலைகளில் தவழும்படி
தேர்ந்த அணிகளை அணிந்தவளே!
பெருவிடர் விளைக்கும் தன் கண்களினால்
உன் தலைவி செய்யும் துன்பம்
உயிரை அறுக்கின்றது,
இந்நோய் தீர்வதற்கு மருந்தும்
ஒன்றேதான் உள்ளது,
அது…
அவள் முகத்தை நான் பார்ப்பதாகுமென
அவன் புலம்பிச் சொல்கின்றானே!
ஒழுக்கத்தைக் கைவிட்ட ஒருவன்
தெருவில் நின்று சொல்வதை
உண்மையென்று எப்படி நாம் கருதமுடியும்?
அவன் பண்பு நாண் எதையும்
எண்ணாதவனாகக் காணப்படுகிறான்,
ஆனால் நாம்…. ஊரில் பிறகோர்நாள் எழக்கூடிய
அலரையும் கருதவேண்டுமல்லவா, தோழி?
உன் மார்பைத் தழுவாமல் அவனும்
அங்கிருந்து போகமாட்டான்.
நாணம் தடுக்கிறதென அவனைக் கைவிடல்
நன்றன்றே எனக்குத் தோன்றுகிறது, தலைவி.
இனியும் என்ன செய்ய எண்ணியிருக்கிறாய்?
தலைவி சிரித்தாள். பின், ‘பொன் செய்யலாம்’ என்றாள்.
(‘பொன் செய்வாம்’ என்பது அக்காலத்தில் ‘நல்லதைச் செய்வோம்’
என்ற அர்த்தமுள்ளதாய் இருக்குமென நம்ப இடமுண்டு.)
சுணங்கணி வனமுலை சுடர்கொண்ட நறுநுதல்
மணங்கமழ் நறுங்கோதை மாரிவீழ் இருங்கூந்தல்
நுணங்கெழில் ஒண்தித்தி நுழைநொசி மடமருங்குல்
வணங்கிறை வரிமுன்கை வரியார்ந்த அல்குலாய்!
கண்ணார்ந்த நலத்தாரைக் கதும்மெனக் கண்டவர்க்கு
உள்நின்ற நோய்மிக உயிரெஞ்சு துயர்செய்தல்
பெண்ணன்று புனையிழாய் எனக்கூறித் தொழூஉம் தொழுதே
கண்ணும் நீராக நடுங்கினன், இன்னகாய்!
என்செய்தான் கொல்லோ, இஃதொத்தன் தன்கண்
பொருகளிறன்ன தகைசாம்பி உள்ளுள்
உருகுவான்போலும் உடைந்து.
தெருவின்கண் காரணமின்றிக் கலங்குவார்க் கண்டு
நீ
வாரண வாசிப் பதம்பெயர்த்தல் ஏதில
நீநின்மேல் கொள்வதெவன்?
அலர்முலை ஆயிழை நல்லாய்! கதுமெனப்
பேரமர் உண்கண் உன்தோழி உறீஇய
ஆரஞரெவ்வம் உயிர்வாங்கும்
மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய், ஒண்தொடீ!
நின்முகம் காணும் மருந்தினேன் என்னுமால்,
நின்முகம் தான்பெறி னல்லது கொன்னே
மருந்து பிறிதுயாதும் இல்லேல் திருந்திழாய்!
என்செய்வோம்கொல் இனிநாம்?
பொன் செய்வாம்.
ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன்
கூறும்சொல் வாயெனக்கொண்டு அதன் பண்பு உணராம்
தேறல் எளிது என்பாம் நாம்.
ஒருவன் சாமாறு எளிது என்பாம்மற்று.
சிறிதாங்கே, மாணாவூர் அம்பல் அலரின் அலந்தவென
நாணும் நிறையும் நயப்பில் பிறப்பிலி,
பூணாகம்நோக்கி இமையான் நயந்து நம்
கேண்மை விருப்புற்றவனை எதிர்நின்று
நாணடப் பெயர்த்தல் நயவரவின்றே.
(குறிஞ்சிக் கலி: 30)
Comments