கலித்தொகை பாடல்கள் 23

 

ரசனைக் குறிப்புகள்: 23

கொல்வான்போல் நோக்கி

நகைக் கூட்டம் செய்தான்!

 

கையில்

சுடர்கொண்ட வளைகள் அணிந்தவளே,

கேட்பாயாக.

மண்வீடு கட்டி விளையாடிய காலத்தில்

அதை ஓடிவந்து காலாற் சிதைத்தும்,

நம் தலையிலுள்ள மாலையை அறுத்தும்,

விளையாடும் பந்தை எடுத்துக்கொண்டு ஓடியும்

நம்மை வருத்திய சின்ன வம்பன்,

அன்றொருநாள்

அன்னையும் நானும் இருந்தபொழுதில்,

‘வீட்டுக்காரரே! வீட்டுக்காரரே!’ என அழைத்து

தனக்குத் தாகமாக இருக்கிறதென்றும்

தண்ணீர் கொஞ்சம் தரும்படியும் கேட்டான்.

அதற்கு அன்னை எனை நோக்கி,

பொற்பாத்திரமெடுத்து நீர் கொடுத்துவரச் சொன்னாள்.

நானும் எதையும் யோசியாது சென்று

நீரைப் பாத்திரத்திலெடுத்து கொடுக்கும்வேளையிலே

அவன் என் முன்கையைப் பற்றியிழுத்தான்.

நானும் பயந்துபோய்,

‘அம்மா, இவன் செய்வதைப் பா’ரெனக் கத்திவிட்டேன்.

அன்னை அலறிக்கொண்டு ஓடிவந்தாள்.

உடனே நான், ‘இவனுக்கு தண்ணீர் விக்கிவிட்டது’ என

பொய் ஒன்று சொன்னேன்.

அன்னையும் அவனது கவனமின்மையைப்

பரிவாகக் கண்டித்து

அவனது முதுகை நீவிவிட்டாள்.

அந்தக் கள்வன் மகனோ,

கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் நோக்கி

புன்சிரிப்பு உதிர்த்தான்.

 

 

சுடர்த்தொடீஇ கேளாய், தெருவில் நாமாடும்

மணற்சிற்றில் காலிற்சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி

நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லீரே!

உண்ணுநீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை

அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்,

உண்ணுநீர் ஊட்டிவா என்றாள். என யானும்

தன்னை அறியாது சென்றேன். மற்றென்னை

வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு

‘அன்னாய், இவனொருவன் செய்தது காண்!’ என்றேனா,

அன்னை அலறிப் படர்தரத் தன்னை யான்

‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக் கூட்டம்

செய்தான் அக் கள்வன் மகன்.

 

(குறிஞ்சிக் கலி: 15)

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

'கனவுச்சிறை'பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம் (முகநூல் பதிவில்)