கலித்தொகைப் பாடல்கள்... 28
ரசனைக்
குறிப்புகள்: 28
உன்னைப்
பழி வாங்குவதற்காகவே மடலேறுவேன்!
ஐவகையாய்ப் பின்னிவிடப்பட்ட நீள் கூந்தல்;
அழகு வாய்ந்த பெருங் கண்கள்;
அதில் மடப்பமான பார்வை;
பசுமையான கார் காலத் தளிர் மேனி;
அழகொளிரும் நெற்றி;
பூ மொட்டுப்போல் அழகிய கூர்ம் பற்கள்;
கொடிபோன்ற இடையெனக் கொண்ட நீ,
பரல்கள் உள்ளிருந்து ஒலிக்கும் வளையல்களை
முன்கைகள் நிறைய அணிந்தபடி
உன் கைகளை வீசினாய்.
அதுவோ என் ஆருயிரைக் கவ்விக்கொண்டதடீ.
நீயோ, அதைக்கூட அறியாது
செல்லுகின்றாய்.
நான் சொல்வதைக் கேள்:
என் உயிரை உன் மிகையழகு உண்டதையோ,
காதல்நோய் என்னில் வெகுத்து உள்ளதையோ
இளவயதுக்காரியானதால்
நீ அறிந்துகொள்ளவில்லையென
நான் எடுப்பேன்.
ஆனால் நீயோ,
இவை எதுபற்றியுமே யோசியாமல்
தம் வசதிக்கேற்றபடி
அணிகள் பல புனைந்து
வெளியே செல்லவிட்ட உன் உற்றாரிலும்
பிழையில்லை என்கிறாயே!
நடை மெலிந்து, அயர்வுற்று
நாளும் நாளும் நான் நலிவதை
புரியும் அனுபவம் உனக்கில்லைதான்.
ஆனால் நீயோ
ஈதொன்றும் அறியாமல்
தம் செல்வ மிகுதியினால்
உன்னை நகைகளால் அலங்கரித்து
வெளியே செல்லவிட்ட
உன் உற்றாரிலும்
பிழையில்லை என்கிறாயே!
என் மனத்தை அல்லல்படுத்துவதால்
நீ அணங்காகியுள்ளதை
அறியாமலிருக்கிறாயென வைத்துக்கொள்வோம்.
ஆனால் எல்லாம் தெரிந்திருந்தும்
தம் செல்வ மிகுதி காரணமாய்
உன்னை மிகுதியான நகைகளால் அலங்கரித்து
வெளியே செல்லவிட்ட உன் உறவினரிலும்
தவறில்லை என்கிறாயே!
நான் யாரையாவது இதற்காகத் தண்டிப்பதானால்
உன் உற்றாரையே தண்டிப்பேன்.
எனது இந்நோய் மேலும் வளருமானால்
நான் ஒன்றையே செய்வதாக இருக்கமுடியும்.
அது
இவ்வூரின் மன்றத்தில் மடலேறி
உன்மீது எல்லோரும் பழி சொல்லச் செய்வதுவே.
வாருறு வணர்ஐம்பால், வணங்கிறை, நெடுமென்தோள்,
பேரெழில் மலருண்கண், பிணையெழில் மான்நோக்கின்,
காரெதிர் தளிர்மேனி, கவின்பெறு சுடர்நுதல்,
கூரெயிற்று முகைவெண்பல், கொடிபுரையும் நுசுப்பினாய்
நேர்சிலம்பு அரியார்ப்ப நிரைதொடிக்கை வீசினை.
ஆருயிர்வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய், கேள்:
உளனா, என் உயிரை உண்டு, உயவுநோய் கைமிக,
இளமையான் உணராதாய் நின்தவறு இல்லானும்,
களைஞரில் நோய்செய்யும் கவினறிந்து அணிந்து தம்
வளமையான் போத்தந்த நுமர்தவறு இல்லென்பாய்;
நடைமெலிந்து, அயர்வுறீஇ நாளுமென் நலியும்நோய்
மடமையான் உணராதாய், நின்தவறு இல்லானும்,
இடைநில்லா தெய்க்கும்நின் உருவறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நுமர்தவறு இல்லென்பாய்;
அல்லல்கூர்ந் தழிவுற, அணங்காகி அடரும்நோய்
சொல்லினும் அறியாதாய், நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர்வௌவும் உருவறிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல்லென்பாய்;
எனவாங்கு,
ஒறுப்பின் யான்ஒறுப்பது நுமரை. யான் மற்றிந்நோய்
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின் பொலங்குழாய்!
மறுத் திவ்வூர் மன்றத்து மடலேறி
நிறுக்குவன் போல்வல்யான், நீ படுபழியே!
(குறிஞ்சிக் கலி: 22)
Comments