கலித்தொகைப் பாடல்களின் 3

 


3

 

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்,

சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி,

யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான்  இறுதிபோல்

வேரொடு மரம்வெதும்ப விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகி

கொலையஞ்சா வினைவரால் கோல்கோடியவன் நிழல்

உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்.

 

இடைகொண்டு பொருள்வயின் இறத்திநீ எனக்கேட்பின்

உடைபு நெஞ்சுக ஆங்கே ஒளிஓடற்பாள் மன்னோ.

படையமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ

புடைபெயர்வாய் ஆயினும் புலம்புகொண்டு இனைபவள்.

முனிவின்றி முயல்பொருட்கு இறத்திநீ எனக்கேட்பின்

பனிய கண் படல்ஒல்லா படர்கூர்கிற் பாள்மன்னோ.

நனிகொண்ட சாயலாள் நயந்துநீ நகையாகத்

துனிசெய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்

பொருள்நோக்கிப் பிரிந்துநீ போகுதியெனக் கேட்பின்

மருள்நோக்கம் மடிந்து ஆங்கே மயல்கூர்கிற் பாள்மன்னோ,

இருள்நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்றநின்

அருள்நோக்கம் அழியினும் அவலம்கொண்டு அழிபவள்

வினைவெஃகி நீசெலின் விடும்இவள் உயிர் என

 

புனையிழாய் நின்நிலை யான்கூறப் பையென

நிலவுவேல் நெடுந்தகை நீளிடைச்

செலவுஒழிந் தனனால் செறிக நின் வளையே.

 

( பாலைக் கலி: 9)

 

தமிழிலக்கியத்தில் பாலையென்று சொல்லப்பட்ட நிலம், நாம் இப்போதறிந்துள்ள சஹாராபோல இருக்காது. ராஜஸ்தானின் மணல் வனமாகக்கூட இருக்காது. அது தமிழ் நாட்டின் முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல்பிழந்து, நடுங்கு துயருறுத்து, பாலையென்று கொண்ட படிமமாகத்தான் இருந்திருக்கும்.

அதனால் பெரும்பாலும் அங்கே மலைச் சுனைகள் இருந்திருப்பினும் நீர் இருந்திருக்காது. மரமிருந்திருக்கும், ஆனால் இலை இருந்திருக்காது.

சூரிய தகிப்பில் பொடிபட்ட கல்கள் பரந்து கடத்தற்கரிய வழியைக் கொண்டதாய் அந் நிலத்தை ஆக்கிவிட்டிருக்கும்.

காட்சிகள் பொறுத்து பெரும்பாலும் இதற்கு மேல் வர்ணனைகள் செல்வதில்லை. ஆனால் இவற்றுக்கான உவமானங்கள் பாடலுக்குப் பாடல் வித்தியாசம் கொண்டிருந்தன.

பாலை வழியிலேயுள்ள மரக் கிளைகள் வறியவனது இளமைபோல்  வாடிப்போயுள்ளன. ஈகைக் குணமற்றவன் கையிற் கிடைத்த செல்வம்போல் அடைந்தார்க்கு நிழல் கொடுக்க முடியாதபடி மரங்கள் கிடக்கும். எவரிடத்தும் தீமையே செய்து புகழழிந்தவனது இறுதிக் காலம்போல் மரங்களே வேரோடு வெம்பிக் கிடக்கும்.

இவ்வாறான பாலை நிலம் கடந்து ஒரு தலைவன் பொருளீட்டம் கருதி தன் மனைவியைப் பிரிந்துசெல்ல நினைத்தான்.  

அவனுக்கு, இவ்வாறான பாலை வழியின் கடினங்களைக் கூறியதோடு, நன்கு அமைக்கப்பட்ட  படுக்கையில் அவன் தற்செயலாய் சிறிது விலகிப் படுத்தாலும் துன்பம்கொண்டு வருந்துபவளும், அவன் விளையாட்டாய் அவளை அணுகாது சிறுபொழுது அகன்றிருந்தாலும் ஏக்கம்கொண்டு கலங்குபவளுமான தலைவி, அவன் பொருள் தேடிப் பிரிந்துசென்றால் வாழவே மாட்டாள் என்று கூறி அவனது செலவைத் தடுக்கிறாள்.

அதை தலைவியிடம் மகிழ்வோடு தெரிவித்து, அதனால் இனி தலைவியின் கைகளின் வளையல்கள் கழராமல் செறியப்போகின்றன என்கிறாள்.

000

 

Comments

Popular posts from this blog

கலாபன் கதையும், புனைவின் சில சிக்கல்களும் - டி. சே.இளங்கோ

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்