கலித் தொகைப் பாடல்களின்.... 2
ரசனைக் குறிப்பு 2
எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
நெறிப்படச் சுவல் அசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்,
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறர்மகன் ஒருவனும்
தம்முள்ளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும!
காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை.
ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர் நீர் போறிர்.
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்.
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்.
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுழே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்.
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
எனவாங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறந்தலை பிரியா ஆறும்மற் றதுவே.
(பாலைக் கலி: 8)
'உடன்போக்கு' என்பது காதலின் அறம்.
இக் கருத்துருவத்தை விளக்குகின்ற பாடலாகவன்றி,
ஒரு சிறிய கதையாக, ஓர் ஓரங்க நாடகமாக முன்வைக்கிறது
பாலைக்கலியின் இந்தப் பாடல்.
ஏனைய பாண் பாடல்களிலில்லாத
இவ்வகையான எடுத்துரைப்புகளால்தான்
இப் பனுவல் கற்றறிந்தார் ஏற்றும் கலியாயிற்று.
ஊரெல்லையில் பரதவித்து நின்றுகொண்டிருக்கிறாள் ஒரு தாய்.
தலைக் குடை, உறி தொங்கும் தோள்த் தண்டு, கரகம் ஆதியனவற்றுடன்
அந்தணர் சிலர் பாலையின் அவ் அருஞ்சுரத்தில் வருகிறார்கள்.
எதிர்ப்படும் அத் தாய் வினவுகிறாள்,
'ஐயன்மீர், என் மகள் ஒருத்தியும்
பிறர் மகன் ஒருவனும் தம்முள்ளே ஒருவரையொருவர்
விரும்புபவர்களாய் இருந்தார்கள்.
அவ்வாறான இருவரை நீவிர் வரும் இக் கடுவழியில்
கண்டீர்களோ?' என்பதாக.
அவர்கள் தம்முள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
காணவில்லையெனச் சொல்லவே உந்துதல் எடுத்ததுபோல் தோன்றுகிறது.
ஆனாலும் அது அவசியமில்லாதது. உண்மையைச் சொல்லி அவர்கள் செயற்பாட்டின் நியாயத்தை அத் தாய் உணரச் செய்வதே தக்கதென எண்ணி,
பின்வருமாறு புகல்கிறார்கள்: 'காணவில்லையெனச் சொல்லமாட்டோம்: கண்டோம், தாயே.
நீ, அக் காளையொடு கூடிச்செல்லும் நங்கையின் தாய்போலத் தென்படுகிறாய்.
நாம் உனக்கு ஒன்று சொல்கிறோம்.
மலையிலேதான் பிறக்கிறது மணங்கெழு சந்தனம். அதனால் மலைக்கு ஏதாவது பிரயோசனமிருக்கிறதா? அது தன்னைப் பூசுபவர்க்கு நலம் செய்வதற்கானது.
முத்தானது நீருள்ளேதான் பிறக்கிறது. அதனால் நீருக்கேதேனும் நலம் உண்டாகிறதா? அது தன்னை அணிபவர்க்கு நலம் செய்வதற்கானது.
யாழிலேதான் இன்னிசை பிறக்கிறது. அதனால் யாழுக்கு என்ன லாபம்? எதுவுமில்லை. அது அதை மீட்டி அனுபவிப்பவர்களுக்கே நலன் செய்வதாகிறது.
இவைபோலவே உன் மகளும். அவளும் தான் விரும்பிய தலைவனுடன் சென்று வாழ்வதே தக்கது. அதுவே அவளுக்கான அறமுமாகும்.'
இவ்வண்ணம் அத் தாயைத் தேற்றி அனுப்பினார்கள்.
Comments