எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 9

(சில வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீதரனின் ‘ஸ்ரீதரன் கதைகள்’ தொகுப்பை வாசித்ததிலிருந்து ‘சொர்க்கம்’ கதை நெஞ்சில் நின்றிருந்தது. சிறுகதையின் அமைப்பு கச்சிதமாய் அமைந்த கதையென்பதே அப்போது என் அபிப்பிராயமாக இருந்தது. எனக்குப் பிடித்த சிறுகதைகள் பகுதிக்கு இதை எடுத்துக்கொண்டு ஒரு மீள்வாசிப்பைச் செய்தபோது இது சிறுகதை வடிவத்தையும் மீறி ஒரு குறுநாவலளவாய் வந்திருப்பதை உணர்ந்தேன். மேலே பதிவிற்காக தட்டச்சு செய்தபோதுதான் இது அந்தளவு விஸ்தீரணத்தையோ உள்ளடக்கத்தையோ கொண்டிருக்கவில்லையென்பது உணர்கையாகியது. இதை கூடியபட்சமாக ஒரு நெடுங்கதையாகவே எடுக்க இப்போது முடிந்திருக்கிறது. சிறுகதையின் விரிந்த வடிவமே நெடுங்கதையெனின் இந்த அலகுக்குள் இதனை அடக்குவதுதான் சரியாகவிருக்கும்.)


சொர்க்கம்
- ஸ்ரீதரன் -

எசக்கி என்கிற இசக்கிமுத்து, செவுத்தி என்று அழைக்கப்படுகிற செவுத்தியான், கரீம் இவர்களடங்கிய புனிதத்திரித்துவம் நமது கவனம்.
எசக்கியும் செவுத்தியும் கொழும்பு மாநகரசபைச் சுத்திகரிப்பு வாகனமேறிய பெம்மான்கள். கரீம் ஒரு ஜாதி ஆள். இரவல் அல்லது வாடகைக்குத் தள்ளுவண்டி கிடைக்கிற நேரம் விறகு தள்ளுவான் அல்லது இளநீர் விற்பான். சிலவேளைகளில் பழைய புத்தகங்களப் பரவி விற்பான். இதை இப்போதே சொல்லலாம்.

இந்தப் புத்தக வியாபாரம் எசக்கி, செவுத்தி இவர்கனோடும் சம்பந்தப்பட்டது. சிலவேளைகளில் நடைபாதையில் பார்க்கர் பேனா விற்பான். மற்றும் சிலவேளைகளில் தண்ணீர்க் குழாய் பழுதுபார்ப்பான். தொழிலைச் சொல்லி கரீமைச் சொல்லமுடியாது.

எசக்கி அறுபது வயதைத் தாண்டிய ஒரு கிறிஸ்தவன். எசக்கிக்கு ஒரு குடும்பம் அமைந்துபோனதற்கு இதை ஒரு காரணமாகச் சொல்லலாம். எசக்கியின் மாளிகையில் போய்க் கணக்கெடுப்பு நடத்தினால் மனைவி அன்னம்மா, மூத்த மகன் பீட்டரின் ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் உப குடும்பம், இரண்டாவது மகன் டேவிட், நாலாவது மகன் என்றி என்று அழைக்கப்படுகிற ஹென்றி, கடைசி மகள் மேரி இவர்கள் மட்டும் இருப்பது தெரியவரும். குhணாமல் போய்விட்ட மூன்றாவது மகன் பிலிப்பைப்பற்றியோ அல்லது கல்யாணமாகி – சரியாகச் சொல்லப்போனால் குடும்பம் நடத்துகிற - மூத்த மகள் பாக்கியம், இரண்டாவது மகள் தெரசா இவர்களைப்பற்றியோ சொல்வது இலகுவானதல்ல.

செவுத்தி எசக்கியை ‘அண்ணே’ என்று கூப்பிடுவதில் உண்மையிருக்குமாயிருந்தால், செவுத்திக்கு வயது அறுபதைவிடக் குறைவு. சுமயம் இல்லாத ஆத்மா.

சாதியைப் போக்காட்டுகிற வேலையொன்று செய்திருக்கிறானென்றால் அன்னாசி என்று யாவரும் செல்லப் பேரிட்டு அழைக்கிற அலிஸ் நோனாவுடன் குடும்பம் நடத்துவதை இது குறிக்கும். விட்டுவிட்டு நடத்துவதைக் குறிக்க வினைச்சொல் வருமட்டும் நடத்துவது என்றே சொல்லிக்கொள்ள வேண்டும்.

இந்தத் தொடர்பின் தொடக்கம், செவுத்தி ஆணழகனாக இருந்த காலம். சினிமாப் பாட்டுக்காரர்கள் சொல்கிற மாதிரி இந்த உறவில் பூத்த மலர்கள் ‘ரத்னே’ என்று அழைக்கப்படுகிற ரத்னபாலவும், ‘விஜிதே’ என்று அழைக்கப்படுகிற விஜிதபாலவும். இந்தப் பெயர்களிலேயே செவுத்திமேலான அன்னாசியின் ஆதிக்கம் தெரிந்திருக்கவேண்டும்.

மூத்தவன் ரத்னேக்கு புறக்கோட்டையில் காய்கறிக் கடையில் வேலை. இளையவன் விஜித, கெம்பா என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிற அர்தோலிஸ் சில்வாவின் வலது கை. இந்த கெம்பா சாதாரண சட்டத்தை மதிக்கிற பிரஜையிலிருந்து எஸ்.பி.க்கள்வரை எல்லோரும் மரியாதை செலுத்துகிற ஒரு குழுத் தலைவன். கொழும்பு, ஒரு சின்னச் சிகாகோ என்கிற மரியாதையைத் தேடித்தருகிற வீரபுருஷர் வரிசையில் அவன் முதன்மையானவன்.
கெம்பாவுக்கு அடுத்ததாகக் குழுவின் அரியாசனமேற இருப்பவன் இந்த விஜித. அன்னாசியின் பாசத்துக்கும் பிரியத்துக்கும் விஜித ஆளாகியதற்கு இந்த வீரப் பதவியும், இந்த வீரப் பதவி கொணர்கிற செல்வமும் காரணம். மற்றது ரேடியோக்கள், ரேப்ரெக்கோடர்கள், தங்க நகைகள், பேனாக்கள் இத்தியாதி மற்றவர்களுக்குத் தெரியாமல் கைகளில் போய் வருவது ஒரு விசே~ சுகானுபவம். எல்லாவற்றிற்கும் மேலாக அன்னாசி அவன் அளவிலேயே ஒரு தனி விசை. இந்த விஜிதவுக்கும் கரீமுக்கும் தொடர்பு உண்டு. சந்ததி இடைவெளி கடந்த இந்தப் பிணைப்பு இறுக்கம் தொழில்ரீதியானது.

கரீமின் புத்தக விற்பனை இதில் சம்பந்தப்பட்டதில்லை. தகவல்கள், வாங்குதல், விற்றல்… இந்த வகையான பிணைப்பு.

கரீம் ஐம்பது வயதாகியும் ஒரு தனிக்கட்டை. இந்த வயதில் உள்ள அநேக தனிக்கட்டைகள்போல் இடைக்கிடை இரட்டைக் கட்டையாகிறதும் உண்டு. அலிஸ் நோனா இதற்குதவி- உதவி மட்டும்தான்.

கரீம் விற்பதற்குச் சேர்த்துக்கொள்கிற புத்தகங்களின் மூலம் அநேகமாக செவுத்தி; செவுத்திக்கப்பால் அது நதிமூலம்.

எசக்கி ஒரு விற்பனைப் புள்ளி. எசக்கி வாசிப்பதென்பதில்லை.
கரீமுக்கு எவ்வாறோ என்னென்ன புத்தகங்கள் எசக்கி மூலமாக பாதர் தியோபிளஸ் தலையில் கட்டமுடியுமென்பது தெரியும். கரீம் புத்தககக் கடையிலோ அல்லது வாசிகசாலையிலோ வேலை பார்ப்பதென்பதுகூட இல்லை. இங்கிலிஷ் எழுத்துக்கூட்ட மட்டுமே தெரியும். இருந்தாலும் புத்தகங்களை வடிகட்டும் கலையைத் தெரிந்திருக்கிறான்.

ஒரு புத்தகம் விற்பனையாகாமல் ஒன்றிரண்டு மாதமாகத் தங்குமென்றால், அது ‘கதப் பொஸ்தவம்’ இல்லையென்பது தெரிந்துபோய்விடும். இன்னும் தங்குமென்றால், கரீமுக்கு அவைகளை ‘மோந்து’பிடித்துத் தத்துவப் புத்தகங்களைப் பிரித்தெடுக்கத் தெரியும். கடைசிப் பரிசோதனையாக பாதர் வேண்டாமென்கிறபோது அது எதற்கும் உதவாத ‘பொஸ்தவம்’ என்பது தெரிந்துபோகும். கரீம் அதை செவுத்தி கையிலேயே கொடுக்க, செவுத்தி ஏற்கனவே இவ்வாறாகத் தங்கியிருக்கிற பழைய பேப்பர் கட்டோடு அதைப் போட்டுவிடுவான் பின்னர் நிறுத்து விற்பதற்கு. பாதர் தியோபிளஸ் - எசக்கி தொடர்பை இந்தக் கட்டத்தில் சொல்லிவிட்டால் வசதியாகப் போய்விடும்.

ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்தைப் பெருக்குவதும் மலசலகூடம் துப்புரவு செய்வதும் எசக்கியின் திருத்தொண்டு. பாதர் இதற்குக் காசு தருவதும் உண்டு. இப்படித்தான் இந்தத் தொடர்பு தொடங்கியது. பாதர் எசக்கியில் அன்புகொண்டது எசக்கியின் கதைகளைக் கேட்ட பின்னர். எசக்கி எல்லாவற்றையும் பாதரிடம் சொல்லிவிடுவான்.

பாதருக்கு எசக்கியைத் திருத்தியெடுப்பது ஒரு முக்கிய முயற்சி. இது விடாமுயற்சியாய் இருந்தாலும், எசக்கியின்மீது நம்பிக்கையும் பாசமும் இருந்துவந்தன. மத்தேயுவில் தேவகுமாரன் இந்த விடாமுயற்சியைப் பற்றித்தானே சொல்லியிருக்கிறார். எசக்கி எல்லாவற்றையும் சொல்ல, அதில் திருத்தங்கள் செய்து உண்மையைக் கிரகித்துக்கொள்வார்.
புhதர் தலையில் புத்தகங்கள் தள்ளலாம் என்று கண்டுபிடித்தது கரீமின் அசல் மூளை. ஒருநாள் ஒரு மூளை அலை பாய்நதது கரீமுக்கு. தங்கிப்போயிருந்த புத்தகமொன்றை எசக்கி கையில் கொடுத்தான். “சிலவேளை இந்தப் பாதர்மாருங்க இந்தமாதிரிப் பொஸ்தவம் படிப்பாங்க. நீயே பாதர்கிட்ட வித்துக்க” என்ற உடன்படிக்கையுடன். ஏசக்கி பாதர் தலையில் அதை வெற்றிகரமாகக் கட்டி… அன்று சொர்க்கத்தில் பெரும் கொண்டாட்டம்.
சொர்க்கம்?

இதை முடித்துவிட்டுச் சொல்கிறேன். அதிலிருந்து பாதர் என்கிற விற்பனைப்புள்ளி உருவானது. இந்தப் புத்தக வியாபாரத்தின் கொடுக்கல் வாங்கல்கள் பிசகுகள் சொர்க்கத்தின் அமுதத்தில் வெகு இலகுவாகக் கரைந்துபோகும். ஓட்டுமொத்தமாக உலகம் கரீமின் காலடியிலென்று தெரிந்தே செவுத்தியும் எசக்கியும் அவனைத் தங்கள் குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். பல பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு உண்டு. விசே~மாக அமுதத்திற்கு வழிகாண்பது.

சொர்க்கம் திறந்திருக்கிற நாளெல்லாம் அங்கே கூடி, அமுதம் பருகி அவர்கள் வாழழ்ந்துகொள்வார்கள். பிழைப்பும் வாழ்வும் இந்த மூவரைப் பின்னி இழையோடுகின்றன. கொழும்பில் கரையோரப் பொலிசிற்கும் பொன்னம்பலவாணேசருக்கும் நடுவில் இந்த சொர்க்கம் இருக்கிறது.

முன்னரே கோடிட்டுக்காட்டியதுபோல அமுதம் கிடைக்கிற சொர்க்கம். இங்கே தேவர்கள் வந்து, மசால் வடை, ‘இஸ்ஸோ’ வடை, சுண்டல் இத்தியாதி டேஸ்ட் அனுமானங்களுடன்கூடி அமுதம் பருகி ஆனந்திக்கும்பொழுது வர, சூரியன் எதிரே உள்ள கடலில் துறைமுகத்திற்கும் அப்பால் விழுந்து மறையவும், பொன்னம்பலவாணேசுவரரின் மணிச் சத்தம் தன்னைத்தானே சப்தித்துக் கொள்ளவும் சரியாக இருக்கும். தேவர்களுள் வித்தியாசங்கள் உண்டு. சிரட்டையில் அமுதம் பருகுகிறவர்கள், கோப்பையில், வெறுமே பருகுகிறவர்கள், சுண்டல்காரர்கள், வடைகாரர்கள், ஆண்கள், பெண்கள், நாக்கு நனைக்கிறவர்கள், குடிகாரர்கள், வெறிகாரர்கள், மற்ற வித்தியாசங்கள் தனி.

திருமணங்கள் மட்டுமல்ல, பிறப்புகள், இறப்புகள் பலவும் இந்த சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. சண்டை, சமாதானம் பலவும் இங்கே உண்டு. தேவர்களின் ஆயாசம் தீருகிற சத்தமும்…
காரியாலய வேலை இப்போதுதான் முடிந்து வீட்டைநோக்கிப் போகிறவர்களானாலும், வேலை வெள்ளனவே முடிந்து இந்த நரகத்தைச் சுவைப்பதற்காகப் புறப்பட்டிருக்கிற அதிர்ஷ்டசாலிகளானாலும் பிதுங்குகிற பஸ்கள்.

லொறிகள்.

சைக்கிள்கள்.

கார்கள்.

பாதசாரிகள்.

கொழும்பின் வெக்கை அல்லது மழை, தூசு அல்லது சக்தி எல்லாமும் சொர்க்கத்தின் பின்னணி.

பாதர் தியோபிளஸ் சொர்க்கத்தை ஒரு நரகம் என்று சொல்கிறார். இவற்றை மூடிவிடும்படி பெரிய மனிதர்கள், ஆளுமன்றப் பிரதிநிதிகள், மந்திரிகள் எல்லோரையும் கேட்டபடி இருக்கிறார். ஏன்? இந்த எசக்கியையே அவரால் தடுத்துநிறுத்த முடியாமலிருக்கிறது. எல்லாவற்றையும்விட அங்கே பெண்களும் இருக்கிறார்களே! கடவுளே! மிக மோசம்!

சொர்க்கத்தின் அமுதபானாதிக் கடன்கள் முடிந்து எசக்கி எப்படியும் தன் வீடு ஒழுங்காய்ப் போய்ச் சேர்ந்துவிடுவான். செவுத்தி சிலவேகளில் எங்கேயாவது விழுந்துவிடுவான்.

செவுத்தி விழுந்தால் விழுந்ததுதான். இப்படி விழும்போது, அலிஸ் நோனாவிடம் போய் இந்தச் செய்தியைச் சொல்லும் கஷ்டமான கடமை எசக்கி தலையில் விழுந்துபோகும். ஆவள் எசக்கியைத்தான் முதலில் பேசுவாள் - அவன் முதலில் எதிர்ப்படுவதால். செவுத்தி விழுந்த இடத்தைச் சரியாகச் சொல்லமுடியாத நிலையில் அவன் இருக்கும் கஷ்டம் வேறு. இது காரணத்தால் அடுத்த நாள் அவள் கண்ணில் எதிர்ப்பட்டால் இன்னமும் பேச்சு வாங்கவேண்டி வரும்.

இதைத் தவிர்க்க எசக்கிக்கு இர்டு மாற்றுகள். ஓன்று சொர்க்கம் போகிறதை நிற்பாட்டுகிறது. மற்றது செவுத்தியைத் தவிர்ப்பது. இரண்டும் முடியாதென்பது செவுத்திக்கும் நன்றாகத் தெரியும்.
எவ்வாறோ அடுத்த நாள் ஓவசியர் செக்ரோல் எடுக்கிறபோது இரண்டு பேரும் நிற்பார்கள். கரீம் நிதானமாக நடந்து இரவு பகலாகத் திறந்திருக்கும் ஒரு ஹொட்டேலின், அவனுக்கென்றே உள்ள, தகரப் பொந்தில் போய்ப் படுத்துவிடுவான் - தனிக்கட்டையாய் உள்ளபோதெல்லாம்.


2

இந்த வாழ்க்கையோட்டம் ஓடி முடிந்திருக்காத ஒருநாளில்…
சொர்க்கத்தில் இருந்து மூன்றுபேரும் அமுதம் சுவைத்துக்கொண்டிருக்கிற உற்சாகப் பொழுதில்…

அலிஸ் நோனா!

அலிஸ் நோனா வருவதைக் காணுமளவு நிதானம் செவுத்திக்கே இருந்தது. அமுதம் திடீரென்று கசந்தது.

எசக்கி, செவுத்தியின் சிநேகிதத்தை முடித்துக்கொள்வருபற்றியும், திடீரென்று மாயமாக மறைந்துபோவதைப் பற்றியும் யோசித்தாலும் கரீம் அருகில் இருந்ததில் துணிவு கொண்டான்.

கரீம் மலையைப்போல இருந்தான்.

அலிஸ் நோனா தான் விற்கிற கலப்படக் கையிருப்பு முடிந்து போகிறபோதெல்லாம் அதைப் புதுப்பித்துக் கொள்வதற்காக இங்கு சிலவேளைகளில் வருவதுண்டு. ஆனால் அவள் கையில் பையில்லை. அத்துடன் வெகுவேகமாக இரைந்தபடி வந்துகொண்டிருந்தாள்.
தேவர்கள் மூவருக்கும் இது ஏதோ கஷ்டம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அலிஸ் நோனா முதலில் கரீமிடந்தான் போனாள். எசக்கி இருக்கிற இடத்தில் பெளிப்படையாக ஏதேனும் சொல்லமுடியுமா? செவுத்தியிடம் சொல்லி என்ன பிரயோசனம்?

செவுத்திக்கு உண்மையில் அவள் தன்னிடம் வராதது சந்தோ~மாகவே இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கரீமைத் தனியே கூட்டிக்கொண்டு போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு திரும்பி நேரே செவுத்தியிடம்தான் வந்தாள்.

“உடனே வீட்டுக்குத் திரும்பு.” மிரட்டலுடன் கட்டளையும்.
செவுத்திக்கு தான் போராடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க நேரமெடுத்தது. இன்னும் கொஞ்சம் உள்ளே இறக்கினால்தான் பேச முடியும். இப்போது சண்டை போடுவததானால், ஏற்கனவே இறங்கியிருக்கவேண்டும். ஆகவே, கரீமுக்கும் இசக்கிக்கும் கையைக் காட்டிவிட்டு, அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தான். கரீம் வேலையிருக்கிறதாக எசக்கியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். அலிஸ் நோனா கஷ்டத்தில் இருக்கிறாள்.

எசக்கி தனித்துப்போனான். அலிஸ் நோனா என்ன சொல்லியிருக்கக்கூடுமென்பதான விசாரணை எசக்கிக்குக் கிடையாது. வரவும் வராது. தனிமையே தங்கிநின்றது.

இந்தத் தனிமையை வெல்வதற்கு வழக்கமாக எச்சிக்கு அமுதம் நிறையத் தேவை. இந்தத் திடீர்ச் சூழலிலன் கனத்தில், ‘பாதரிடம் போவோம்’ என்று ஒருதரம் யோசித்தாலும், வீடு போய்ச் சேருவோம் என்கிற நோக்கத்துடன் எழுந்துபோனான். அமுதம்பற்றிய யோசனையின் ஆதிக்கத்தில், விடாயில், எங்காவினும் இரண்டு ரூபாய் தெண்டுவதற்கான வழிவகைகளை யோசித்ததில், கால்கள் தம்பாட்டில் எங்கெல்லாமோ இழுத்து…

ஒருவகையாய் வீடு போய்ச் சேர்ந்தான். முன்னர் ஒருகாலத்தில் இம்மாதிரியான இக்கட்டுக்களில் பாதரிடம் தன் சாதுர்யங்களைக் காட்டி, ஒன்றோ இரண்டோ கநற்துவிடுவதுண்டு. பிறகு பாதருக்குச் சந்தேகம் வரத் தொடங்கியதில் இந்த வருவாய்கள் குறைந்துபோயின.

அடுத்த நாள்தான் அவனுக்கு விபரம் தெரிந்தது. சொர்க்கத்தில் ‘கோரம்’ இல்லாமல் சபை கூடியபோது, கரீம் வரவில்லை. செவுத்தி வந்து சொன்னான். அவன் இரண்டாவது மகன் விஜிதவைக் காணவில்லை. பொலிஸ் வந்து விசாரித்துக்கொண்டு போயிருந்திருக்கிறது. அலிஸ் நோனாவே கவலைப்படுகிறாள் என்றால் இது மிகப் பாரதூரமான விஷயம்.
அமுதத்திற்கு வழியில்லாது கையில் ஒவ்வொரு ரூபாயுடன் ஆளை ஆள் பார்த்துக்கொண்டிருந்தபோது…

எசக்கிக்கு நன்றாகத் தெரிந்தது, ஒரு ரூபாயுடன் நாக்கை நனைத்துக்கொண்டால் எப்போதும் மகன் பீட்டருன் - ஏன், வீட்டில் எல்லோருடனும் சண்டையில்தான் முடியும்.

‘நாளைக்குப்  பார்த்துக்கொள்ளலாம்’ என்பதைச் செவுத்தியானுக்குள் செலுத்திவிட முயன்றான். செவுத்தியானுக்கோ இந்தமாதிரி யோசனைகள் எப்போதும் கிடையாது. ஐகயில் கிடைக்கிற காசிற்கு உள்ளே போய்விடவேண்டும். எசக்கியின், ‘நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற விஞ்ஞாபனம் அவன் காதில் ஏறாதுபோயிற்று. எசக்கி குடிப்பது கூடாதென்று சொல்ல முயற்சித்தான்.

செவுத்தியான், எசக்கி வைத்திருந்த ஒரு ரூபாயிலும் தன் நம்பிக்கையை வைக்க முயற்சித்தபோது, எசக்கிக்கு குடிப்பது அறவே கூடாது என்பது தெளிவாகப்பட்டது.

செவுத்தி மகன் விஜிதவைக் காணவில்லை என்பது பாரதூரமான வி~யம். வழக்கமாக விஜிதவின் ஸ்தாபனப் புள்ளிகள் ரகசியமாய் இருந்தாலும் தெரிந்தேயிருக்கும் அல்லது தெரிவிக்கப்படும்.

இப்போது காணவில்லை என்கிறார்களே! இது மிகவும் பாரதூரமான விஷயமென்றால் கரீமையும் காணாததையும் எப்படிச் சொல்கிறது.
செவுத்தி அசையாமலிருப்பதைக் கண்டு எசக்கிக்குக் கோபம் வந்தது. எசக்கியினுள்ளே ஆழத்தில் அமிழ்ந்துபோயிருந்த தேவதை வெளியே வந்து, “எப்போது பார்த்தாலும் அமுதத்தின் யோசனைதனா? கழுதையே! உன் மகனைக் காணவில்லையென்று கொஞ்சமாவது கவலைப்படுகிறாயா, அமுதம் பருகுவதே உன்னுடைய வேலையாகப் போய்விட்டது. என்னைப் பார்! உன்னை மாதிரி எப்போதாவது சாக்கடை ஓரத்தில் விழுந்து நாறியிருக்கிறேனா? இந்தக் குடிகார யோசனைகளை விட்டுவிட்டு மகனைத் தேடு.” ‘தேடு’ என்று எசக்கியின் தொண்டை மூலமாகப் பெலத்தே பிரலாபித்தாலும், செவுத்தியோ தன்பாட்டில் தாடியைத் தடவிவிட்டுக்கொண்டான்.

எசக்கிக்குத் திடீரென்று ஒரு மூளை அலை பாய்ந்தது. பாதரிடம் கூட்டிக்கொண்டு போவோம், இந்த மகனை. பாதருக்கு இப்படியான நிலையில் உள்ளவர்களைக் கண்டாலே சந்தோஷம். சுங்கானைப் பற்றவைக்காமலே அறிவுரை சொல்லும் ஆர்வம் எழும். செவுத்தியான் ஒத்துக்கொண்டு எழுந்தான். பாதரிடம் பழைய புத்தகங்கள் ஏதாவது தட்டுப்படக்கூடும். அவரிடம் புத்தகம் கொள்முதல் செய்வதற்குக் கையில் காசு தேவையில்லை. கடன் சொல்லி வாங்கி, ஒரு கிழமைக்குப் பிறகு போனாலே அவர் மறந்துபோவார். ஆவரிடம் உடன் வேலை ஏதாவது கிடைத்து, இரண்டு ரூபாய் கைக்கு வந்தால்போதும். உபதேசங்களை எசக்கி கேட்டுக்கொள்ளலாம்.

செவுத்தியும் எசக்கியும் போன நேரத்தில் பாதர் பூசை முடிந்து தன் மக்களுள் பிரதானமானவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். தன் இருப்பிடத்தின் வரவேற்பறையில். எசக்கியும் செவுத்தியும் வெளியில் குந்தியிருந்தார்கள். எட்டு மணியளவில் சொர்க்கம் பூட்டுப்பட்டுப் போகும் என்பதையும், நேரம் ஏழு மணியாயிற்று என்பதையும் செவுத்தி யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தான்.

எசக்கி புண்ணியமான காரியம் செய்துவிட்டவன்போல் ஒருவிதமான சந்தோஷத்துடன் இருந்தான். நல்லவேளையாக எல்லோரும் விரவில் போய்விட பாதர் இவர்களைப் பார்த்தார். பாதருக்கு எசக்கியுடன் செவுத்தியானை அல்லது கரீமைக் கண்டால் பயம் வந்துவிடும். அவரைப் பொறுத்தமட்டில் செவுத்தி திருத்தப்பட வேண்டியவன். கரீம் ஒரு சாத்தான். தன் பிரியத்துக்குகந்த எசக்கியை நாசமாக்குவது இவர்கள்தான்.
எசக்கி தன் பாணியில் செவுத்தியின் இக்கட்டை அவிழ்த்து பாதர் முன் போட்டான். செவுத்தி (எசக்கி பாதரிடம் தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தபோது), ‘ஆமாங்க… ஆமாங்க’ என்று தலையாட்டுகிறபோதுதான், தன் மகன் காணாமல்போனமை எவ்வளவு பாரதூரமான விஷயமென்பதை உணர்ந்துகொண்டான். அலிஸ் இருக்கிறாள். பார்த்துக்கொள்வாள். பாதரிடம் அதைச் சொல்லமுடியாது. கூடாது.

பாதர் சுங்கானைப் பற்றவைத்துக்கொண்டார். அவருக்கு இப்போதுதான் செவுத்தி குடும்ப விவகாரம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. விஷயங்கள் மிகவும் முற்றியபின் தன்னிடம் சொல்கிறார்கள். இந்த காணாமல் போயிருக்கிற விஜித சிறுவனாக இருக்கிறபோதே இங்கு கொண்டுவந்து ஞானஸ்நானம் பண்ணுவித்திருந்தால் நெறிப்படுத்திப் பண்படுத்தியிருக்கலாம்.

‘கர்த்தரே, எனக்குப் பொறுமையைத் தந்தருளும்’ என்கிற ஜெபத்துடன் செவுத்தியின் விபரணைகளைக் கேட்டுகொண்டிருந்தார். செவுத்தியான் விஜிதவின் தலைவன் கெம்பாவின் வீரதீரங்கள் முதற்கொண்டு தனக்குத் தெரிந்தது சகலவற்றையும் சொன்னான்.

பாதருக்குத் தெட்டத் தெளிவாக இப்போது தெரிந்தது. விஜித என்ன குற்றத்தையும் செய்திருக்கக்கூடும்.

‘கடவுளே! ஏன் மனிதனுக்குச் சுயாதீனத்தையும் தந்து, வறுமை நெருக்கடியையும் தருகிறாய்? ஆவன் பலமற்ற இருதயத்திதுடன் சாத்தானை நோக்கி ஓடவா? நுல்வழி நடக்க நிறைய மனோபலம் தேவைப்படுகிறது. இல்லை, இல்லை. சாத்தானை முழுக்க அரவணைத்துக் கொள்ளவும்தான். இல்லாவிட்டால், எல்லோரும் கொலைகாரர்களாக இருக்கவேண்டுமே? கடவுளே! உம்முடைய சித்தம் இங்கேதான் தோன்றுகிறது. ஒற்றையடிப் பாதையில் மனிதனை ஓடவிடுகிறீர். எதிரே வருவது பெரிதாயிருந்தால் பாதை விலகியே போய்விடுகிறது. இந்தமாதிரியான நெருக்கடிகளில் நீர்தான் தடையை நீக்க வல்லமையுடையவர்.’

செவுத்தியைப் பிரார்த்திக்கும்படி சொன்னார். தானும் பிரார்த்திப்பதாக உறுதி கூறினார். ஏதோ உந்தலால் இரண்டு ரூபாய் எடுத்து செவுத்தியிடம் கொடுத்தார் - தான் முன்னர் எடுத்திருந்த உறுதிகளை நினைவுக்குக் கொண்டுவராமல்.

எசக்கி செவுத்தியையும் இழுத்துக்கொண்டு தேவாலயத்துக்கு ஓடினான். செவுத்தி அகமகிழ்ந்திருந்தான். சொர்க்கம் அநேகமாக மூடப்பட்டிருக்கும். ஆனால் அவன் மாளிகைப் பக்கம் அதைவிடத் தரமானது கிடைக்கும். அங்கே எசக்கியும் பங்குக்கு வரமுடியாது. ஆந்தோனியாருக்கு முன்னால் முழந்தாளிட்டு எசக்கி உருக்கமாகப் பிரார்த்தித்தான். ‘ஏசுவே! விஜிதவுக்கு ஒன்றும் நேராமல் இருக்கவேண்டும்.’

எசக்கிக்கு பிரார்த்திக்க நிறைய நேரம் எடுத்தது. செவுத்தியானுக்கு எசக்கி கல்லாகிப் போனானென்கிற ஆத்திரம் வந்தது. எசக்கி செவுத்தியைக் குறியிட்டுக்கொள்ளச் சொன்னான். செவுத்திக்கு வேறு வழியில்லை. பிரார்த்தனை முடிந்து இருவரும் எழுந்து போனபோது சொர்க்கம் திறந்தே கிடந்தது.

செவுத்தி, “அண்ணே! மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு” என்றபடியே சொர்க்கத்தைநோக்கி எசக்கியையும் இழுத்தபோது எசக்கி ஒன்றும் சொல்லவில்லை.

“நீ என்னாப்பா” என்று அலுத்துக்கொண்டதோடு சரி. தூன் இல்லாதுபோனால் தனியே பருகி நாசமாகிப்போவான் என்கிற சமாதானத்துடன் எசக்கி தன் ஒரு ரூபாயுடன் செவுத்தியைச் சேர்த்துக்கொண்டான்.

அவன் மகிழ்ச்சியெல்லாம் கரைந்துபோய் மௌ;ளமௌ;ளச் சோகம் மனதில் ஆழ்ந்தது. கனத்த மனதுடன் அமைந்தநிலையில் சோகம். புhதரின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராகச் சொர்க்கத்துக்கு வந்ததின் குறுகுறுப்பின் சோகம். கரீம் இல்லாத வெறுமையும் சோகம்.

செவுத்தி இதற்கிடையில் ஏனோ பெரிதாகப் புலம்பத் தொடங்கினான். ஏசக்கி மனதிலிருந்த கொதி எண்ணெயில் இந்த நெருப்புப் பொறி பட்டது.
செவுத்தியின் புலம்பலைத் தொடர்ந்து எசக்கி கற்பிழந்துபோன ஒரு பத்தினிபோல அதைவிடப் பெரிதாகப் புலம்பத் தொடங்கினான். ஒரு நீண்டநேரப் புலம்பலுக்குத் தேவையான அமுதத்துக்குக் குறைவாகவே அமுதம் உள்ளே போயிருந்ததனால், சீக்கிரமாக இன்னும் தேடிக்கொள்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்துகொண்டுபோக இருவரும் தொடங்கினார்கள். அதன் விபரங்கள் யாவும் பாதருக்கு ஒரு வாரம் கழித்து எசக்கியின் பாவமன்னிப்புப் புலம்பலூடாகத் தெரியவந்து, அவர் தன் அங்கியின் நூல் பட்டன்களைப் பிய்த்துக்கொண்டிருந்தார்.

எசக்கிமேல் கோபப்படுவது அர்த்தமில்லாதது. ஆவன் மனவிசைகளின் காரணகாரியத் தொடர்புகளை அறிவதும், அவற்றின் மூலமாக அவனை நெறிப்படுத்த முயல்வதும் கடைசியாக ஒரு வீண் முயற்சிதானோ என்று கவலைப்பட்டார்.

‘என்னைக் கண்ட அதே இரவுக்குள் குடித்து வெறித்துத் திருடித் திரும்பவும் குடித்து வெறித்து தங்களையே நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்களே! கர்த்தரே! பன்றிக்கு முத்தைத் கொடாதேயென்று இவர்களை வைத்துத்தான் சொன்னீரா? ஏசுவே! இதோ, ஒரு வாரத்துக்கு முன்புதான் ஒரு தேவனாக இருந்த எசக்கி இன்று நெறியிழந்து முன்னால் நிற்கிறான். திரும்பவும் இதுபோல் எத்தனை தடவை?

‘கடவுளே! சபித்தே இவர்களை அனுப்புகிறீராயின் நான் ஏன்? இந்த திருச்சபை ஏன்?

‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடம் வாருங்கள் என்ற அழைப்பை விடுத்ததேன்?’ சிலுவைக்குறி ஒன்றை தன் தெய்வ நிந்தனையை ஒட்டி இட்டுக்கொண்டார்.

‘யேசுவிடம் உண்மையாகவே அடைக்கலம் புகுந்திருப்பவர்களாயின், இவர்களுக்கு இந்த இக்கட்டு வந்திருக்காதே! அப்படியா? தேவனே! சாத்தானை வெல்ல உம் பலம் வேண்டும். உம்மிடம் வருவதற்கு சாத்தானை வெல்லவேண்டும். கர்த்தரே! வழிகாட்டும்.’


3
இதற்கெல்லாம் இடையில்…

எசக்கியின் மூத்த மகன் பீட்டரும், அடுத்தவன் டேவிட்டும் ‘லஞ்ச் கரியர்’ நடத்துகிறார்கள். பீட்டர் இதில் முதலாளி. டேவிட் தொழிலாளி.
கொட்டாஞ்சேனையிலிருந்து யூனியன் பிளேஸ்வரை இவர்களின் வீச்சு பரம்பியிருக்கிறது. டேவிட் சேர்த்துக்கொண்டு வந்து கோட்டையில் தர, பீட்டர் கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையிலான விநியோகத்தை பொறுப்பேற்றுக்கொள்வான். வருமானத்தில் பெரிய பங்கை பீட்டர் எடுத்துக்கொள்வதாலேயே முதலாளியாயிருக்கிறான்.

டேவிட்டுக்கு இன்னும் கனவுகள் ஏதும் தொடங்கவில்லை. எப்போதும் தொடங்காதுபோலிருக்கிறது. ‘எங்க அண்ணே சொல்லும்…’ என்று பீட்டருக்கு ஒரு ஸ்தானத்தை டேவிட் கொடுத்திருப்பதால், பிணக்குகள் எதுவுமில்லாமல் இந்த ஸ்தாபனம் ஓடிக்கொண்டிருக்கிறது. சைக்கிள் திருத்தும் வேலைகளும், சினிமாப் படங்கள் பார்ப்பதுவும் டேவிட்டின் பொழுதுபோக்கு.

சைக்கிள் உறுப்புகளினதும், மற்றும் ரயர் ரியூப் இவற்றினதும் விலைகள் தட்டுப்பாடுகள் சிலவேளைகளில் ஸ்தாபனத்தை ஆட்டிவைத்துவிடும். நல்லவேளையாக சைக்கிள் நல்ல சைக்கிள். இது விஜிதவின் கைங்கரியம். பீட்டருக்கு அந்த மலிவு விலையில் அவ்வளவு நல்ல சைக்கிள் எப்போதும் கிடைத்திருக்காது. பீட்டர் ஸ்தாபனத்துக்கும் விஜிதவிற்குமிடையிலான பிணைப்பின் அடி அத்திவார் அதுதான்.
அலிஸ் நோனா பீட்டரை அழைத்து, விஜித காணாமல்போனதை அறிவித்தவுடன், விஜிதவைத் தேடுவதற்கான ஏற்பாடுகளை பீட்டர் ஸ்தாபனம் தொடங்கியது. பீட்டர் தானே அலிஸ் நோனா, கரீம் இவர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்தான்.
டேவிட் பெருமையுடன் பீட்டரின் ஸ்தாபனத்தைத் தற்காலிகமாக எடுத்துக்கொண்டான். டேவிட்டின் பதவி உயர்வில், டேவிட்டுக்கு அடுத்தவனுக்கு அடுத்தவனான என்றிக்குப் புதுப் பதவி தற்காலிகமாகக் கிடைத்தது. என்றிக்குப் புல்லு வெட்டுவது தொழில். இருந்தாலும் டேவிட் அவனுக்கு சாப்பாடுகளைச் சேகரிக்கும் வழிமுறைகளை இடைக்கிட பழக்கி வைத்திருப்பதில் இப்போது புதிதாகக் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. என்றி புதுப்பதவியின் நியமனம் கிடைத்தவுடன் டேவிட் மாட்டியிருப்பதைப்போல ஒரு சிலுவைக் குறியுடனான சங்கிலி ஒன்றைத் தேடிக்கொண்டு போக ஆரம்பித்தான்.
டேவிட்டின் அதிகாரம் என்றியினால் ஏற்றுக்கொள்ளப்படத் தொடங்கியிருந்தது.

4
பீட்டரும் கரீமும் விஜிதவின் குழுத் தலைவன் கெம்பாவைத் தேடிக்கொண்டு போனார்கள். பீட்டரோடு போனபோது, கரீமுக்கு அது மூன்றாவது முறை. முதல் இரண்டு முறையும் கெம்பா அங்கே இல்லை. கெம்பாவின் மற்ற அடியாட்களிடம் கரீம் சேகரித்துக்கொண்ட தகவல்களின் பிரகாரம், விஜிதவின் தானைக்த் தலைவன் கெம்பாவும் விஜிதவும் ஒரு முதலாளியின் உயிருக்கும் ஐயாயிரம் ரூபாய்க் காசிற்கும் வழிசொல்லவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள். இதுதான் முழுச் சிக்கலும். கெம்பா விபரங்கள் தர மறுத்தான்.

யாரோ பொலிசிற்கு ‘ரிப்’ பண்ணியிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சபதங்களையே கெம்பா முழக்கிக்கொண்டிருந்ததில் கரீம் கலைமையிலான மீட்புக் குழு திரும்ப வேண்டியதாயிற்று. திரும்பி, அலிஸ் நோனாவிடம் அவர்கள் விஜயத்தின் விபரங்களைக் கூற… அலிஸ் நோனாவே கரீம், பீட்டருடன் புறப்பட்டு கெம்பாவிடம் போனாள். கெம்பா அலிஸ் நோனாவைக் கண்டதும் பொலிசிற்கு ‘ரிப்’ பண்ணியவர்களைப்பற்றிய சபதங்களை இன்னும் பெலத்தே முழக்கினான். ஆலிஸ் நோனா அந்த வீரசபதங்களைத் தானும் எடுத்தாள். யார் சொல்லியிருக்கக்கூடும்? இந்த விவாதத்தில் ஒரு மணத்தியாலம் போன பிறகே அலிஸ் நோனா விஜிதவைப்பற்றிய விபரங்களைக் கேட்க முடிந்தது. கெம்பா விஜிதவிற்குப் பொறுப்பு தான் என்பதை வலியுறுத்த, அலிஸ் நோனா தன் அருமந்த புத்திரனின் இருப்பிடம் தனக்குத் தெரியவேண்டுமென்பதை வலியுறுத்த நிலைமை மோசமாகிக்கொண்டு வரும்போல இருந்தது.

கெம்பா அலிஸ் நோனாவிற்கு வி~யங்களைச் சொல்வதென்று முடிவெடுத்தான். அலிஸ் நோனவைத் தனியே ரகசியமாக அழைத்துச் சென்றான். விஜிதவை கொஞ்ச நாட்கள் மாத்தறையில் தன் தமையனுடன் விட்டு வந்திருப்பதாகவும், அவன் பத்திரமாக இருப்பதாகவும், இன்னும் ஒன்றிரண்டு கிழமைகளில் திரும்பிவிடுவானென்றும் சொல்லி, யாரிடமும் இவைகளைச் சொல்லவேண்டாமென்று அவளிடம் சத்தியமும் வாங்கிக்கொண்டான். அலிஸ் நோனா தன் அந்தரங்கப் பேச்சு வார்த்தைகளை முடித்துக்கொண்டு திரும்பும்வரையில் கரீமும் பீட்டரும் பொறுமையுடன் ஒருபுறம் குந்தியிருந்தார்கள்.

“வாங்க போவோம்” என்ற உத்தரவுடன் அலிஸ் நோனா திரும்பினாள். கரீமுக்கு இப்போது அவளை ஏதும் கேட்கக் கூடாதென்பது தெரியும். என்ன நடந்திருக்குமென்று அனுமானிக்கத் தொடங்கினான். பீட்டருக்கு அனுபவமில்லை. வாயைத் திறந்தான். “பிறகு சொல்கிறேன்” என்று அலிஸ் நோனா அடக்கினாள். அடுத்தநாள் பீட்டர் தன் ஆசனத்தில் - சைக்கிள் ஆசனத்தில் - அமர்ந்துகொண்டான். கழுத்தில் சிலுவைக் குறியுடனான சங்கிலியுடனும், சீக்கிரத்தில் தன் ஸ்தானம் பறிபோய்விட்டதே என்ற கவலையுடனும் அடுத்தவன் டேவிட்டுக்கு இது ஏமாற்றங்களைத் தராது . என்றி புல்வெட்டப் போய்ச்சேர்ந்தான்.


5
கரீமும் பீட்டரும் அலிஸ் நோனாவுடன் கெம்பாவிடம் போய்வந்த அன்று மாலை, திருத்துவச் சபை சொர்க்கத்திலே கூடியபோது, கரீம் தன் அலைச்சலின் ஆயாசத்தையெல்லாம் தீர்த்துக்கொண்டிருந்த வேளையில், விஜிதவின் தலைமறைவின் விபரங்களைச் செவுத்திக்கும் எசக்கிக்கும் வெளிவிட்டான். செவுத்தி விஜிதவின் தலைமறைவினால் மிகவும் லாபமடைந்த ஆத்மா. அலிஸின் தொந்தரவுகள் இல்லாமல் இருந்தது. கரீமுக்கு அலிஸ் வார்த்தது தனக்கும் சொரிந்தது, பாதரிடம் இரண்டு ரூபாய் கநற்தது, இத்தியாதி இத்தியாதி. ‘விஜிதவுக்கென்ன நேர்ந்துவிட முடியும்’ என்பது இந்த லாபங்களினால் எழுந்த தத்துவமே தவிர, விஜிதவைப் பற்றிய அக்கறை எதுவுமில்லை செவுத்திக்கு.

அதுதான் செவுத்தி - இன்னொரு மனிதனுக்குள் - தன் மகனாகவே இருந்தாலும்; - எவ்வளவு தூரம் தன்னை நுழைத்துவிட முடியும்? கரீம் விஜிதவின் மறைவிடத்தைச் சொல்லாது போனாலும், பருகியிருந்த அமுதத்தின் விளைவாகப் பேசிப் பேசிச் சிந்தித்தான். கெம்பாவுடைய தமையன் ஒருத்தன் மாத்தறையில் இருக்கிறான். அவனிடம்தான் கெம்பா விஜிதவை அனுப்பியிருக்கவேண்டும். செவுத்தி இன்னும் அசையவில்லை. எசக்கி அதைக் காதில் கேட்டுக்கொண்டான். காதில் வாங்கும்போது அதை பாதரிடம் சொல்ல வேண்டுமென்கிற யோசனை எதுவுமில்லை எசக்கிக்கு.

இது நடந்த அடுத்த ஞாயிறு எசக்கி தன் தேவாலயத் திருத்தொண்டு செய்ய காலை பத்து மணியளவில் போனபோது பாதர் சாய்வு நாற்காலியில் தன் சுங்கானுடன் சாய்ந்திருந்தார். அவரைச் சுற்றியிருக்கிற கூட்டம் இல்லை.
ஏசக்கி திருத்தொண்டு செய்யப் போகும்போது நேரே பின்பக்கம் குசினிக்குப் போய், பாதருடைய சமையற்காரன் அந்தோனியிடம் தேநீர், வெற்றிலை பரிவர்தனையைத் தன் வழக்கப்படி முடித்துக்கொள்ளப் போனபோது, பாதருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியும் கிடைத்தது. அவரிடம் பெசமுடியாதென்கிற வருத்தத்துடன் எசக்கி தன்பாட்டில் முன்தோட்டத்தைத் அவன் துப்புரவு செய்துகொண்டிருந்தான். விளக்குமாறு பூமியை வருத்தியெழுப்பிய சர்க்… சர்ர்க்… என்ற சன்மமான கீதம் பாதரை எழுப்பிவிட்டது.

அவருக்குத் தெரியும் இது எசக்கி. மௌ;ள எழுந்து வாசலில் வந்து வாயில் சுங்கானுடன் அவன் துப்புரவு செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தின் பின் எசக்கி, பாதர் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.

“பாதர்!” சர்ர்க்…. சர்ர்க்… நின்றுவிட்டது.

பாதர் நேரடியாகவே “ விஜித வந்துவிட்டானா?” என்கிற விசாரணையில் இறங்கினார். எசக்கியைப் பொறுத்தமட்டில், செவுத்தியைக் கரைசேர்ப்பதற்காக பாதரிடம் அவனைக் கூட்டிக்கொண்டு வந்ததுவும், பிறகு தானே பாவம்செய்ய நேர்ந்ததைப் பற்றியுமான மன வருத்தத்தைச் சொல்லியழுது, தன் பாவத்தைக் கரைக்க இது அயனான சந்தர்ப்பமாகப் போய்விட்டது. செவுத்திக்கு பாதர் இரண்டு ரூபாய் கொடுத்ததிலிருந்து தொடங்கினான். பாதருக்குச் சுருக்கென்றது. ‘நான் எவ்வளவு பெரிய மடத்தனம் செய்துவிட்டேன்!’

செவுத்தி கூப்பிட்டிருக்காவிட்டால் தான் சொர்க்கத்துக்குப் போயிருக்க மாட்டானென்பதை ஊட்ட முயன்ற எசக்கியை இடைவெட்டி திரும்பவும் விஜிதவைப்பற்றிய தன் கேள்வியை நினைவூட்டினார். எசக்கி, கரீம் காதில் போட்ட செய்திகளையும் சொல்லி விஜிதவின் தற்போதைய மறைவிடம் எதுவாயிருக்க முடியுமென்கிற கரீமின் அனுமானத்தையும் சொல்லிவிட்டான்.

பாதர் யோசிக்கத் தொடங்கினார்.

சுரீரென்று, ‘மனிதன் தன்னை வென்ற மனிதனாவதைப்பற்றி’ அவர் படித்திருந்த தத்துவங்கள் மனதில் எழுந்தன.

‘ஓ… இதுவெல்லாம் ஏசுவுக்கு எதிரான ஒரு நாஸ்திகனின் புலம்பல்கள் அல்லவா?’

‘ஏன்? பாதர் டேவிட் செமினாரி (குருமார் பாடசாலை) யில் இவைகளைப்பற்றிச் சொல்லவில்லையா?’

பாதர் தியோபிளஸ் இலகுவாக எந்த வாதத்தையும் முறியடித்துவிடுவார். அவருக்கு உடம்பு முழுவதும் மூளை. ஞாபகம் வருகிறது.

மனிதன் தன்னைத்தானே மேவுகிறதென்பது மனிதன் தன்னை முதல் வைத்த வாதம். நுலிவெல்லாம் உலகத்தை எப்போதும் @ழ்ந்து வருத்த, வாழ்வென்ன என்று சோர்வுறுகிற வேளையில், ‘மனிதனை வென்ற அதிமனிதனாக மாறு’ என்று கட்டளையிட்டுக் கடவுளையும் தூக்கியெறிந்து, நலிவும் சோர்வும் பயமும் துன்பமும் நித்தியமாகிப்போன அலுவல்கள் என்று மனிதனுடைய பலவீனத்தை அதிகரிக்கச் செய்கிற வாதம்.

இது பாதர் தியோபிளஸின் வாதம். வாதங்கள், எல்லாவற்றிற்கும் உண்டு.
செவுத்தி, எசக்கி, ஏன் அந்த சாத்தான் கரீம் இவர்கள் தங்களை வெல்வது என்பது எப்போதாவது முடியுமா? திரும்பத் திரும்ப நரகத்தில் உழன்று தங்களை இழப்பவர்கள் இவர்கள்.

‘பன்றிகள்.’

பாதர் மேலும் யோசிக்கத் தொடங்கினார்.

கர்த்தரே! ஒளி எதுவுமில்லாமல் இருண்ட வாழ்க்கையை அரவணைத்துக்கொண்டு இருக்கிற இவர்கள் சீரான, ஒழுங்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

இது சாதாரண மனிதாபிமானம். வேறொன்றுமில்லை.

இந்த நாற்பது வருஷ திருச்சபைச் சேவையில் நான் கண்டது சிறிய வெற்றிகளே… எல்லோருக்குள்ளும் என்னை நுழைத்துக்கொள்கிற ஆசை இருக்கிறது. இது அகங்காரமோ அல்லது சாதாரண மனிதாபிமானமோ தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் இந்த ஆசை என்னை வருத்துவதுதான். செவுத்தியும் கரீமும் - ஏன் எசக்கியும் சேர்த்துத்தான் - சேற்றுள் உழல்வதை என்னால் நிறுத்த முடியுமா?

நான் ஒரு சாதாரண மனிதன். அதிமனிதன் அல்ல. இதற்காக வருந்துவேனாகின் கர்த்தரே! இவர்கள் ஒளியைக் காணவேண்டும் என்பதற்காகவே தவிர, என்னுடைய அகங்காரம் தோல்வியைத் தழுவுவதைனாலல்ல. உம்மிடம் அவர்கள் அடைக்கலம் புக என்னாலானதைச் செய்வதே சரியானது. செவுத்தியைத் தன்னிடம் வரும்படி எசக்கியிடம் சொல்லி அனுப்பினார். மற்றப் பிரசைகளும் கவனிக்கப்பட வேண்டும். அவருக்கு நிறைய வேலையிருந்தது.


6
சொர்க்கத்தில் கரீமின் சாதுரியத்தினால் அமுதம் கூடவே சொரிகிற நேரத்தில் எசக்கி பாதர் வரும்படி சொன்னதை செவுத்தி காதில் போட்டான். செவுத்திக்கு கோபமும் எரிச்சலு; வந்தன. பாதரின் பிறப்புபற்றிய வசவுகளை செவுத்தி சொல்ல, எசக்கி செவுத்தியை விபரிக்க, கரீம் வேறொரு கோணத்தில் அணுகினான். ‘பொஸ்தவம்’ ஒன்றிரண்டு தங்கிப் போயிருக்கிறது. பாதர் வாங்கக்கூடும்.

செவுத்தி அதைக்கூடக் கேட்கத் தயாரில்லை.

விஜித எப்படிப் போனாலென்ன? தான் எப்படிப் போனாலென்ன? பாதரை இவைகளெல்லாம் என்ன செய்கின்றன என்பது செவுத்தியின் நிலை.
எசக்கிக்கு சாதாரண வாழ்க்கை நியதிகட்கு அப்பால் சிறியதாக ஏதேனும் நடந்தால் பாதரை அணுகி, அவர் சொல்வதைக் கேட்டு, அதன்படியோ அல்லது தன் வசதிக்கேற்றவாறோ அவர் சொல்வதைத் திருத்தி (சிலவேளைகளில் தலைகீழாக) நடப்பதே பழக்கம். செவுத்தியின் உதாசீனம் அவனுக்குப் புரியவில்லை.

“அவரு பாதருப்பா, கடவுளு மாதிரி” என்றான். செவுத்தி ஒரு சிரட்டை அமுதத்தை ‘டக்’கென்று பருகினான்.

“கடவுளு இருந்தாத்தான் என்ன, இல்லாட்டாத்தான் என்ன? அவரு நமக்கு இன்னாதான் செஞ்சுப்பிட்டாரு…” என்று உளறத் தொடங்கினான்.
குடக்க முடியாத நெடுஞ்சுவர்கள் எதிர்ப்படும்போது எசக்கி, “ஏசுவே” என்று வானத்தை நோக்குவது வழக்கம். கரீம் ‘பொஸ்தவ’ வி~யத்தை நினைவூட்ட முயன்றான். செவுத்திக்குக் கோபம் பொங்கிவரத் தொடங்கியது. எல்லோரையும் எல்லாவிதமுமாகக் கத்தி அழைத்தான். அமுதம் இன்னமும் தேவைப்படும்போல இருந்தது. தள்ளாடிக்கொண்டே கரீமையும் எசக்கியையும் ‘கெடவுங்கடா இப்பிடியே’ என்று உதாசீனப்படுத்திவிட்டு தன்பாட்டில் நடக்க ஆரம்பித்தான்.

பலகீனம் கூடக்கூட கோபமும் கூடி அமுத தாகம் அவனை உருக்குலைத்தது. கொஞ்ச தூரம் சென்று எசக்கியைப் பார்த்து, “பாதர்கிட்ட நான் வரமாட்டேன். அதை நீயே அவருகிட்டப் போய் சொல்லு” என்று கத்தினான்.

எசக்கி திரும்பவும் “ஏசுவே” என்று வானத்தை நோக்கினான். செவுத்தி எல்லாரையும் வைதபடிதள்ளாடித் தள்ளாடி மேலும் நடந்தான்.
கரீம் அக்கறையுடன் எசக்கியை விசாரித்தான். எசக்கி சொல்லச்சொல்ல கரீமுக்கு சிக்கல் புரிந்தது. பாதரிடம்ழ இவைகளைச் சொல்லியிருக்கக் கூடாதென்பது கரீமுக்குத் தெரிந்தாலும், எசக்கியை அவனுக்கு அதைவிட நன்றாகவே தெரியும். எசக்கி எப்படி இருக்கவேண்டுமென்று கரீம் வழி நடத்துவது கிடையாது. எசக்கி எப்படி இருக்கிறான் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி நடப்பதுதான் கரீமின் கொள்கை.

விஜிதவை பொலிசில் போய் தண்டனையை ஏற்றுக்கொண்டு தேவாலயத்தில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி பாதர் சொல்லுவார். புhதர் ஜெயிலுக்கும் போகப்போவதில்லை. நரகத்துக்கும் போகப்போவதில்லை. அவருக்கென்ன தெரியும்? நரகம் எல்லோரும் சொல்வதைப்போல மோசமானதாக இருக்க முடியாது. மிஞ்சி மிஞ்சிப்போனால் நரகத்தில் செத்துக்கொண்டே வாழ்வதோ அல்லது வாழ்ந்துகொண்டே சாவதோதான் நடக்கும். அதைவிட என்ன நடந்துவிட முடியும்?

“எசக்கி!” கரீம் அழைத்தான்.

“பாதர்கிட்டே கேளு, இந்த நரகம் எப்படி இருக்குமெண்டு.”

எசக்கியோ பாவச் சுமை தாளாமல் முனகிக்கொண்டு இருந்தான்.

“செவுத்தியான் இப்படி போறானே, எங்கேயாச்சும் உளுந்து உருளப் போறான். நான்தான் அவனை இழுத்தாந்தேன். குடிக்காதடான்னாரு பாதர். நான் குடிச்சுப்புட்டேன்.”

எசக்கி அழ ஆரம்பித்தான். எசக்கியின் அழுகையும், கரீமின் சிந்தனையும் நேர பரிமாணத்தின் நினைவில் நிறையவே பின்னிப்போனதன் பிறகு, கரீம்தான் முதலில் அந்தக் கனவிலிருந்து திடீரென்று விழித்தான்.
செவுத்தியைத் தேடுவோமென்று எசக்கியின் புலம்பலைக் கலைத்து, அவனை இழுத்துக்கொண்டு புறப்பட்டான். கரீமை அமுத தாகம் வருத்தும்போது போகுமிடத்தையே கரீமினால் அனுமானிக்க முடியும்.
கரீமினால் அன்று வெகுநேரத்தின் பின்னரே செவுத்தியைக் கண்டுபிடிக்க முடிந்தது.

செவுத்தி, கரீமும் எசக்கியும் போனபோதுகூட, பாதர் இருப்பிட வாசல் இரும்பில் தன்னைப் பற்றிக்கொண்டு அவன் அகராதியிலுள்ள முழுச்சொற்கள் வீச்சையும் உபயோகித்தபடி பாதரைத் திட்;டிக்கொண்டிருந்தான்.

பாதரின் சமையற்காரன் அந்தோனி, பாதர் கட்டளையின்படி செவுத்தியைத் துரத்தாமல் ஒரு புன்னகையுடன் அவன் திட்டலைக் கேட்டபடி நின்றுகொண்;டிருந்தான். பாதர் உண்மையில் செவுத்தியின் திட்டலை இன்னும் கேட்டபடி இருந்தார் உள்ளே இருந்தவாறே. அவருக்குக் களைப்பாக இருந்தது.

“நான் எப்படிப் போனாலென்ன?”

“என் மகன் எப்படிப் போனாலென்ன?”

“உன்னை என்ன செய்கிறது?”

“கடவுளைக் கும்பிட்டுக்கொள்.”

“நான் கும்பிட வேண்டுமென்றால் எனக்கு இரண்டு ரூபாய் கொடு.”

“நான் கும்பிட்டுக்கொள்கிறேன். கடவுளைக் கூப்பிடு.”

புhதரை செவுத்தியின் கேள்விகள் வருத்தத் தொடங்கின. ‘நான் ஒரு பாதிரியாராக இல்லாதுபோனால்… நான் யாராக இருப்பேன்? இல்லை, எப்படி இருப்பேன்?’ சுங்கானைப் பற்ற வைத்துக்கொண்டு தன் கேள்விகளின் கனபரிமாணங்களை செவுத்தியின் திட்டலைப் பின்னணியாக அமைத்துக்கொண்டு சிந்திக்கத் தொடங்கினார்.

‘ஏசுவே! பிசாசினால் முழுக்க ஆட்கொள்ளப்பட்டு இருக்கிற இந்த செவுத்தி எப்போது ஒளியைக் காணப்போகிறான்? உம்மை இவன் நம்புகிறானில்லை என்பதைவிட, இவன் உம்மை ஒருபோதும் நம்பப்போவதில்லை என்பது நிச்சயமானதுபோன்று தெரிகிறது.

‘பிசாசு இவனை ஆட்கொண்டிருக்கிறதா அல்லது இவன் பிசாசை அரவணைத்துக்கொண்டு இருக்கிறானா?

‘ஏசுவே! இறந்து கல்லறைக்குள்ளே முகத்தை மறைத்து நான்கு நாள் சவமாகக் கிடந்த லாசரசை நீர் உயிர்ப்பிக்கவில்லையா? சுவத்துக்கு ஒப்பான செவுத்தி இந்த ஒரு சிறுஒளியைக் காணும் பாக்கியத்தை நீர் தரமாட்டீரா?’
புhதரின் சிந்தனையை செவுத்தியின் அலறல் நிறுத்தியேவிட்டது. “ஏ பாதரே! ஊன் கடவுளைக் கூப்பிடு. ஊன் கடவுளைக் கூப்பிடு. ஊன் கடவுளைக் கூப்பிடு…”

செவுத்தியானின் இந்த அலறல் ஓங்கியபோது, எசக்கியும் கரீமும் செவுத்தியை அடைந்திருந்தார்கள்.

எசக்கி, “ஏசுபே!” என்று செவுத்தியைச் சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்.

பாதர் திரும்பவும் தன் சிந்தனைகளை ஒழுங்குபடுத்த முயற்சித்தார்.
‘ஏசுN! இவன் உம்மில் நம்பிக்கை வைக்க நான் என்ன செய்யலாம்?’
புhதர் சந்தனைவசப்பட்டபடியே வெளியே வந்தார். எசக்கியும் கரீமும் “வா போவோம்” என்று இழுக்க செவுத்தியான், “பாதர் கடவுளு காட்டப்போறாரு. பாத்துட்டுப்போறேன்” என்று திமிறிக்கொண்டிருந்தான்.

புhதரைக் கண்டதும் எசக்கிக்கு தன் குடியின் நினைவு வந்து தன் பாவத்தின் சுமையை நினைத்து, “பாதரே! நூன் குடிச்சுப்புட்டேன்” என்று அழத் தொடங்கினான். பாதர் எசக்கியைக் கவனிக்காமல் நேரே செவுத்தியிடம் போனார்.

“செவுத்தி.”

“உடுங்க பாதர், நாங்க இவனைக் கொண்டுபோறோம்” என்று கரீம் முன்வந்தான்.

“செவுத்தி, நீ இப்போ போய்ப் படு. கடவுள் உனக்கு நல்வழியைக் காட்டட்டும்.” பாதர் குறியிட்டுக்கொண்டார்.

செவுத்தி இன்னும் திமிறினான். “உன் கடவுளைக் கூப்பிடு.”
“செவுத்தியான்! கடவுள் வரமாட்டார். வா போவோம்” என்று கரீம் இழுத்தான். பாதருக்குத் திக்கென்றது. பாதரிடம் சொல்லிக்கொண்டு எசக்கியும் செவுத்தியானை இழுக்க செவுத்தியான் பாதர் இருப்பி முற்றத்தில் கட்டையாக விழுந்தான். பாதர் அந்தோனியைக் கவனிக்கச் சொல்லிவிட்டு உள்ளே போய்ச் சேர்ந்தார்.

‘கரீம் என்ன சொல்கிறான்? கடவுள் வரமாட்டார் என்றால்…? இவர்கள் பன்றிகள். பாவச் சுமையும் தெரியவில்லை. வழியும் தெரியவில்லை. காட்டினாலும் ஏற்கிறார்களில்லை.’

புhதர் தன்னைத்தானே சலித்துக்கொண்டார். ‘இவர்கள் வி~யங்களில் தேவைக்கதிகமாகவே என்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டேன். எனக்குமே தவிர்க்க முடியாத ஒரு சூழலில் இருந்து மீள்வு இல்லைப் போலிருக்கிறது.
‘நான் அதிமனிதனாக மாறினால்…

‘ஓ! இது என்ன சிந்தனை?’

பாதர் தன் படுக்கையிலிருந்து தூக்கம் வராமல் சிந்தித்துக்கொண்டிருந்தபோது செவுத்தியை இழுத்துக்கொண்டு கரீமும் எசக்கியும் போவதை, அவன் சத்தம் குறைந்துவருவதைக்கொண்டு அனுமானிக்க முடிந்தது.

‘உன் கடவுளைக் கூப்பிடு… உன் கடவுளைக் கூப்பிடு’ என்ற செவுத்தியின் வெறியும், ‘கடவுள் வரமாட்டார்’ என்ற கரீமின் தீர்ப்பும் திருப்பத் திருமப எதிரொலித்தன.

‘செவுத்திக்கு இந்த மனச்சுமை இருப்பதனாலே இவன் பன்றியாக முடியாது. சுமைகளை இறக்கிக்கொள்ள வழி காண்பதிலேதான் மனிதனைக் கண்டுகொள்ளவேண்டும். இவன் இதைச் செய்வதில்லை. நான் வழிகாட்ட முயற்சிக்கிறேன். இவன் ஏற்கிறானில்லை. ஏசுவே! பிதாவே! நீர் வரமாட்டீரா?’

பாதர் மெல்லமெல்ல நித்திரையாகிப்போனார்.

அடுத்த நாள் காலை எழும்பியபோது ஒரு புதிய எண்ணம் அவர் மனதில் எழுந்திருந்தது.

‘நான்தான் செவுத்தியிடம் போகவேண்டும். செவுத்தி என்னிடம் வரத்தேவையில்லை. செவுத்தி இருக்குமிடம் எசக்கிக்குத் தெரியும். எசக்கியிடம் கேட்டால் சொல்லுவான். எசக்கியும் விஜிதவும் தேவனுக்கு முன்னால் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கட்டும். சட்டம் என்னவாவது செய்துகொள்ளட்டும்.’ அந்தோனியிடம் எசக்கியைக் கண்டால் என்னிடம் அழைத்துக்கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டார்.


7
பாதர் எசக்கியைக் கண்டு செவுத்தியிடம் தான் போகவேண்டும் என்பதைச் சொன்னபோது, எசக்கி தானே செவுத்தியைக் கூட்டிக்கொண்டு வருவதாகச் சொன்னான்.

“இல்லை, நான்தான் அவனிடம் போகவேண்டும்.” பாதர் மறுத்தார். பாதர் எசக்கி வழிகாட்ட செவுத்தியின் இருப்பிடத்தை அடைந்தபோது மாலை ஐந்தரை இருக்கும்.

பெரிய வீதியிலிருந்து கிளையாக ஒரு சின்ன வீதி புறப்பட்டு, அது எங்கேயோ போக, சின்ன வீதிக்கு கிளையாக ஒரு சந்து நீண்டு சேறும் சகதியும் நிறைந்தவொரு இடத்தில் முடிந்தது. தகரமும் மரமும் மண்ணும் கலந்த பொந்து. தனித்ததல்ல. ஒருமித்த பொந்துகளின் இடையில் அடைந்துபோனதொன்று. எதிரும் புதிருமாகவும் அக்கம்பக்கமாகவும் பொந்துகள்.

மனித சீவியம் எவ்வாறு இருக்கமுடியாதென்றும், இருக்கக்கூடாதென்றும் பல மேலாவிகளும் நினைத்தும் வற்புறுத்தியும் இருக்கிறார்களோ அது இங்கே இந்தப் பொந்துகளில் இருக்கிறது. சேற்றில் புரள்கிற நாய்களும், அவற்றுடன் விளையாடித் திரிகிற சிறுவர்களும், சொற்களை வீசி அவற்றின் உரசலில் தங்களை இழக்கிற பெண்களும், நீரிலும் புகையிலும் அமிழ்ந்துபோன ஆண்களும், அழுக்கான அழுக்கும்… கர்த்தரே! இது நரகமாகத்தான் இருக்கவேண்டும். இது கொழும்பு மாநகரத்திலேதான் இருக்கிறதா?

பாதரைக் கண்டதும் அந்த இடத்தின் இயக்கம் முழுவதும் ஒரு நொடி ஸ்தம்பித்துப் பிறகு மந்த கதியில் நடக்கத் தொடங்கியது.

எசக்கி, பாதருக்கும் பின்னால், தானே செவுத்தியைக் கூட்டிவந்திருபானென்றும், பாதர் அங்கு வந்திருக்கத் தேவையில்லையென்றும் சொன்னபடி வந்துகொண்டிருந்தான். ஒரு பொந்திலிருந்து சிறு குழந்தையொன்றின் அழுகுரல் உரக்கவே கேட்டது.
‘கர்த்தரே! இங்கே பிறக்கிற குழந்தை என்ன பாவத்தை, எங்கே செய்திருந்து இந்த நரகத்தில் பிறந்திருக்கவேண்டும்? உம்மை அடைவதற்காகவல்லோ?’
பாதரின் சிந்தனை திடீரென்று வந்த பலத்த குரல்களின் வீச்சினால் தடைப்பட்டது.

செவுத்திக்கும் அலிசுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. அழகான சொற்தொகுப்புகளில், மனித உறுப்புகள், செய்கைகளின் வெவ்வேறு பெயர்களும் வந்துகொண்டிருந்தன. அலிசுக்கு பாதர் வீட்டு முற்றத்தில் செவுத்தி விழுந்துபோனது தெரியவந்து… அதுதான் முழுப்பிரச்சினையும்.

அலிசுக்கும் பாதரின் யோசனை விளைவுகளைத் தீர்மானிக்க முடியும். கரீமுக்கு பாதரிடம் உள்ள பயங்கள் அவ்வளவும் அலிசுக்கும் உண்டு. பாதருக்கு இந்த விஷயங்களைப்பற்றி என்ன தெரியும்? ஆனர் விவாதம் எங்கேயோ இதற்கப்பால் வெகுதூரத்தில் நின்றது.

“நீ ஏன் பாதர் வீட்டு முற்றத்தில் விழுந்தாய்?” என்பது அலிசின் கேள்வி.
செவுத்தி பலவிதமாகவும் அந்தக் கேள்வியைச் சுற்றிப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

“நீ யார் கேட்பதற்கு?”

“நான் எங்கேயும் விழுவேன்.”

“நீயா காசு தருகிறாய்?”

“நீ யார் கேட்பதற்கு? நீ யார் கேட்பதற்கு?”  என்பதை செவுத்தி சொற்தோரணைகளுடன் அலிசைக் கேட்டுக்கொண்டிருந்தபோது பாதர் போய்ச் சேர்ந்திருந்தார்.

“நீ யார் கேட்பதற்கு?”

பாதர் போய்ச் சேர்ந்தபோது ஏற்பட்ட மௌனத்துக்குச் சற்று முன்னோடியாக இந்த எதிரொலி அதிர்ந்து, அந்த மௌனம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

பாதர் தன்னைச் சுதாரித்துக்கொள்ள முயன்றார். “செவுத்தியான்” என்று மெல்ல அழைத்தார் பாதர்.

“அவள் உன் மனைவி.”

செவுத்தியான் ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் நின்றான்.
அலிஸ், “அதைச் சொல்லுங்கோ பாதர்” என்று தொடங்கி செவுத்திபற்றி தன் குறைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள்.
பாதருக்கு அவள் பேசப் பேச ஒன்று தெளிவாகப் புரிந்தது. செவுத்திக்கும் அவனைச் சுற்றியுள்ள உலகிற்குமான தொடர்பில் ஒரு விரிசலமைந்து போயிருக்கிறது. தன்னந்தனியனாகவே சீவியத்தை வாழ்ந்துகொள்ளக் கற்றுக்கொண்டிருக்கிறான். எவ்வளவு தூரம் இப்படி வாழ்ந்துவிட முடியும்?
‘கர்த்தரே இப்படித் தனித்துப் போனவன் எப்ப்டி உம்மில் நம்பிக்க வைக்கமுடியும்? இவன் உள்ளத்தில் நீர்தான் ஒளி ஏற்றவேண்டும். இவன் தன் ;மகன் விஜிதவைத் தன்னிடம் கூட்டிவருவானென்று நம்பியது எவ்வளவு முட்டாள்தனமானது?’

பாதர், அலிசிற்கும் செவுத்தியானுக்கும் பின்னணியாக அமைந்துபோன சேற்றையும் சகதியையும் எந்த ஒழுங்குக்கும் அமைய வரா சேரிக் கூட்டங்களையும், டயர் களையும் கற்களையும், குறுக்கும்; நெடுக்குமாக ஓடுகின்ற நாய்களையும், முழு மனிதர்களையும், நிர்வாணச் சிறுவர்களையும், அவர்களின் இரைச்சலையும், அந்தச் சூழல் பரப்பிக்கொண்டிருந்த நெடியையும் புலன் நுகர்ந்தபோது, அவருக்குள்ளே ஒரு தீர்மானம் எழுந்தது. இவர்களுக்காக  ஏசுவிடம் பிரார்த்திப்பதே என்னால் கூடுமானது. நான் இவற்றில் ஈடுபடமுடியாது. நான் உடனே திரும்புவதுதான் உசிதமானது. இதைத்தானே ஏசு தன் அப்போஸ்தலர்களை மக்களிடம் நோய் தீர்க்க அனுப்பியபோது சொல்லியிருக்கிறார்.

‘மக்களை நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்களாயின் உடனே திரும்புங்கள்.’

பாதர் புத்திமதிகளைக் கூறி ஏசுவிடம் அவர்களைவ ந்து பிரார்த்திக்கும்படி கேட்டுக் கும்பிட்டுக்கொண்டு திரும்பினார். அவருக்கு வருத்தமாக இருந்தது.

அலிசும் பாதர் திரும்பியவுடன் செவுத்தியைப் பிறகு கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிபட்டு அந்தோனியார் தேவாலயத்துக்கு இரண்டு பெரிய மெழுகுவர்த்திகளுடன் போய் முழந்தாளிட்டுக்கொண்டாள்.
‘கடவுளே! விஜிதவுக்கு ஒன்றும் நேராமல் இருக்கவேண்டும். அவன் இந்த இக்கட்டிலிருந்து தப்பவானாயின், கடவுளே, உனக்கு இன்னும் இரண்டு மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கிறேன். அவனைக் காப்பாற்று.’ அவள் பிரார்த்தனை முடிந்து திரும்பியபோது பாதர் அவளைக் கண்டார். ‘ஏசுவே! என் பிரார்த்தனை பலித்துவிட்டதா? பாதரின் மனதில் ஒரு சிறு நம்பிக்கை பிறந்தது. அதை ஒட்டியே அவநம்பிக்கையும் பிறந்தது. ‘இவள் பிரார்த்தனை மகன் வரும்வரரைக்குந்தான். அதற்குப் பிறகு இவள் உம்மிடம் வருவாளா பார்ப்போம்.’

தனக்காகக் காத்துநிற்கிற மக்களைக் காண பாதர் திரும்பினார்.


8
கெம்பா ஸ்தாபனம், கெம்பா எவ்வளவுதான் தீரனாக இருந்தாலும் தனித்ததல்ல. அதற்கெதிரான ஸ்தாபனங்களும், அவ்வப்போது நட்புறவு கொள்கிற ஸ்தாபனங்களும் உண்டு. ஸ்தாபனங்களுக்கிடையே ஒருவகை உணர்வுப் புலம் இயங்குகிறது. ஒருவன் கத்தியில் கைவைத்தால், மற்றவன் கை தானாகவே அவன் கத்தியைத் தொடுவது, பொது எதிரியைக் கண்டால் ஆளுக்காள் சமிக்ஞை செய்துகொண்டு காற்றோடு காற்றாகப் போய்விடுவது… அரவணைத்துக் கொள்கிறபோது வலிந்து அரவணைத்துக் கொள்வது… நம்பிக்கை கொள்கிறபோது அவநம்பிக்கையை அடித்தளமாகக் கொள்வது… செய்வதை வலிந்தே செய்வது, எதையும எதிர்நோக்கி நடப்பது. இவைகள் இவ்வுணர்வுப் புலத்தின் வெளித் தோற்றப்பாடுகள்.

கேம்பா ஸ்தாபனத்தின் நடவடிக்கைகளில் உயிரிழந்துபோன முதலாளியின் சொந்தக்காரர்கள் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதென்று, கெம்பா ஸ்தாபனத்துக்கெதிரான ஒரு ஸ்தாபனத்திடம் அவற்றை விட்டிருந்தார்கள்.

விஜிதவை அவர்களும் தேட ஆரம்பித்திருந்தார்கள். கெம்பா பொதுவில் இதுமாதிரியான எதிர் நடவடிக்கைகளையும் எதிர்பார்த்தே இயங்குவது உண்டு. விஜிதவை பொலிஸ் தேட முயற்சித்தபோதே எங்கோ ஓர் எதிர்விசை இயங்க ஆரம்பித்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டான். விஜிதவை மாத்தறைக்கு அனுப்பி, அங்கே அவன் போன ஒரு வாரத்துக்குள் அவனை வெகு ரகசியமாக கொழும்பிற்கு திரும்பவும் அழைத்துக்கொண்டான். மாத்தறையில் எதிரி, விஜிதவைத் தேடுவான் என்பது அவனுக்குத் தெரியும்.

விஜிதவைக் காப்பாற்றுவதென்பது இலகுவானதல்ல. காவல் வைக்கவும் முடியாது. காவலாட்கள் நடமாடுவது தெரிந்தாலே, ஆள் பதுங்கியிருக்கிறான் என்பது தெரிந்துபோகும். இதனால் காவலாட்களை வேறோரிடத்தில் நடமாடச்செய்து எதிரியைக் குழப்பிக்கொண்டிருந்தான்.

விஜித கொழும்பில் அலிசக்கும் செவுத்திக்கும் தெரியாத, அவர்களால் தேட முடியாத ஒரு பொந்தில் தலைமறைவாக இருந்தான். சில நாட்கள் மாத்திரம் தலைமறைவாக இருந்த இடத்து அழகிகள் அலுத்துப்போனபோது – தமையனையும் தாயையும் பார்த்துவிட்டு வருவோமென்று தீர்மானித்தான். தலைவன் கெம்பாவின் கட்டளைகள் தீர்க்கமானவை. அவன் கட்டளையை மீறினால்…

அதனால் தொந்தரவுகள் உண்டு. விஜிதவுக்கு எதையும் மீறுவதே பழக்கமானது. வுp9ஜிதவுக்கு வாழ்க்கை பாரமானதல்ல. ஒவ்வொரு மூச்சையும் ‘வாழ்வு! வாழ்வு! வாழ்வு!’ என்று இன்புற்று நுகர்ந்தும் விதிர்த்தும் ஆனந்திக்கிற பொய்மையும் இல்லை. வாழ்க்கை என்பது வாழ்ந்துகொள்ளப்பட வேண்டியிருந்தது. எனவே வேறெதுவும் முக்கியமானதல்ல. விஜித வாழ்ந்துகொண்டிருந்தான். இதில் சலனம் ஏற்பட்டுப்போனது.

நேரப் பாதையின் நெடுந்தூரத்தின் சிறு புள்ளி ஒன்றில் கெம்பாவுக்க எதிரான ‘எதிரி ஸ்தாபனம்’ விஜிதவை, அவன் தன் தாயைத் தேடிப்போன நேரத்தில் மிக வசதியான ஒரு சந்தில் கண்டுகொள்ள… விஜித தன் தற்காப்புப் போரைத் தொடங்க…


9
பாதர் பூசை முடிந்து தன் மக்களுடைய பிரச்சினைகளை விசாரித்து, தீர்க்க முடிந்த விவகாரங்களைத் தீர்த்து, தீர்க்க முடியாதவைகளை ஒத்திப்போட்டு, ‘சாப்பாட்டு மேசையில் அமருவோம்’ என்று தீர்மானித்தபோது, அவருடைய ரெலிபோன் மணி அடித்தது. பிஷப்பாண்டவரின் காரியதரிசி பாதர் பிரான்சிஸ் மற்ற முனையில். முக்கியமானதாக இருக்கவேண்டும் அவர் சொல்லப்போவது.

திருச்சபை தீர்மானித்திருக்கிறதாம் செமினரியின் தலைமையை பாதரிடம் கொடுக்கவேண்டும் என்பதாக.

“என்னை இறுதியில் உண்மையாகவே ஒரு குருவாக ஆக்குவதென்று தீர்மானித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.”

பாதர் பிரான்சிஸ் மறுமுனையில் மெலிதாகச் சிரித்தார்.

“போதனைகளை நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பது எப்படி என்று மிகவும் தெரிந்தவரைத்தான் நியமித்திருப்பதாக பி~ப்பாண்டவர் எல்லோருக்கும் கூறினார்.”

“நன்றி.”

“எனது வாழ்த்துக்கள்.”

தனது உணவு மேசையில் திரும்பவும் அமர்ந்து பிரார்த்தனையை முடித்து மெல்லச் சாப்பிட்டவாறே இந்தப் புதுத் திருப்பத்தைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

ஷகடவுள் வரமாட்டார்’ என்று கரீம் செவுத்தியைச் சமாதானப்படுத்தியது திரும்பவும் மனதில் எழுந்தது. கரீமுக்கு அவன் சொல்வதன் முழுப்பரிமாணமும் தெரியுமா? தேவகுமாரனின் வருகையைப்பற்றி அவர்களுக்கு நான் சொல்லவேண்டும். கரீம், செவுத்தியின் காதுகளில் இது ஏறுமா?

‘தேவனே! கடவுள் வரமாட்டார் என்று சர்வ நிச்சயத்துடனும் சொல்கிறானே! இவன் மனதில் ஒளி ஏற்றமாட்ரா? கரீமுக்கு அவன் சொல்வதன் முழுப் பரிமாணமும் தெரியுமா?’

பாதர் இடையில் நீர் குடித்தார். அந்தோனி பெரிய தண்ணீர்ப் பாத்திரத்துடன் வந்து ‘களக்… களக்…’ என்று பாதரின் ரம்ளரை மறுமுறை நிரப்பினான். பாதர் திரும்பவும் சந்திக்கத் தொடங்கினார். வேதாகமத்தில் தங்கள் இருதயத்தின் கசப்பிலும் வறுமையிலும் எழன்று மண்ணோடு மண்ணாகப் போகப்போகிறவர்களைப்பற்றி சொல்லப்படவில்லையா?

‘தேவரீரே! நான் கேட்பதெல்லாம் இவர்கள் மனதில் சிறு ஒளியே. இவ்வொளி ஏற்றப்படுவதற்கு நான் ஒரு சிறு கருவியாக அமைவேனானால், அதுவே எனக்குப் போதுமானது. செமினாரியிலே போய் நான் என்ன செய்யமுடியும்? இவர்களின் வாழ்க்கையின் நாடி எனக்கே தெரியவில்லை. அதைக் கண்டு பிடித்தாலொழிய இவர்கள் மனதில் ஒளி ஏற்றப்படுவதற்கு நான் கருவியாவது சாத்தியமாகாது. பிஷப்பாண்டவருடைய கட்டளையை மீறமுடியாது. பாதர் பிரான்சிஸிற்கு எனது மனப்பாங்குகள் புரியக்கூடும். நான் அவரைக் காணவேண்டும்.’

பாதர் தன் உணவை முடித்த பின்னர் சுங்கனைப் பற்றவைத்துக்கொண்டார். தேவன் தன் மக்களையே வெறுத்தொதுக்க முடியமா?

‘உன் கடவுளைக் கூப்பிடு. உன் கடவுளைக் கூப்பிடு.’

‘கடவுள் வரமாட்டார். கடவுள் வரமாட்டார்.’

பாதருக்கு மனம் வலித்தது. தேவனைப்பற்றியும், தேவகுமாரனின் வருகையைப் பற்றியும் இவர்கள் அறியமாட்டார்களா? தேவனே!
ரெலிபோன் மணி ஒலித்தது. ‘க்ர்ர்ங்… க்ர்;ர்ங்…’
பாதர் ரெலிபோனை எடுத்தார்.

என்னவோ விளங்காத மொழி ரெலிபோனில் கேட்டது.

‘தவறான ரெலிபோன் இலக்கம்’ என்று சொல்லி பாதர் ரெலிபோனை வைத்தார்.

‘நான் செமினாரியில் போய் என்ன செய்வது?’

தனது அறையில் போய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்துக் கண்களை மூடிக்கொண்டார். நினைவுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக மனதில் எழுந்தன.

கடற்கரை மணல் சூழ்ந்து அணைத்துக்கொள்ள, பனந்தோப்பின் சரசரப்பின் நடுவே மேரி மாதாவின் ஆலயம். ஆலயத்தில் பீடத்தின் வலப்பக்கத்தில் இரண்டாவஷத வரிசை, ஐந்தாவது இடத்தில் முழங்காலிட்டு இருந்தால், ஏசுபிரான் பார்ப்பது தெரியும். ‘என்னை உங்களுக்காகவே அர்;ப்பணித்திருக்கிறேன். என்னிடம் வரமாட்டீர்களா?’ என்கிற பார்வை.
அம்மாவிடம், ‘தேவாலயத்துக்குப் போய் வருகிறேன்’ என்று சொன்னது ஞாபகமிருக்கிறது. என் தாய் அவள். அவளுக்கு ஏதோ பட்டிருக்கவேண்டும். அவள் என்னைத் தன் கண்ணாடியின் இடுக்கு வழியால் பார்த்து, “போய் வா” என்றாள். அந்தக் காலத்து மண்ணெண்ணெய் விளக்கில் அவள் கண்கள் வியப்பையும் அனுமதியேயில்லாத அனுமதியையும் காட்டின.

அந்தப் பிரதேசத்துக்கே உரிய ஆடிக் காற்று. அரைகுறை இரவின் அரைகுறைச் சந்திரன். சந்திரனைச் சுற்றி மேகங்கள் விலக்கிக் காட்டிய தொலைதூர நட்சத்திரங்கள்.

ஆலயத்தின் உள்ளே போய் முட்கிரீடம் அணிந்து தன்னைசச் சிலுவையில் சுமந்துகொண்டிருந்த பிரானைப் பார்க்கவேண்டும் போலவும் இருந்தது. துணிவுமில்லாமல் இருந்தது.

வெளியே மணலில் சரிந்து வானத்தை ஒரு கணம் பார்த்து கண்களை மூடிக்கொள்ள…

ஏசுபிரான் தன் சீடர்களுடன் கித்ரோன் ஆற்றங்கரையருகில் அமைந்திருந்து அந்த ஒலிவ் மரத் தோப்பினுள் நுழைகிறார். அவரைக் காட்டிக்கொடுத்த ஜுதாஸ் தானே ஒரு பரிவாரம் ஆயுதம், தீவட்டிகளடங்கிய காவலர்களுடன் அந்தத் தோப்பினுள்ளே போகிறான்.

ஏசுபிரானுக்கு இது தெரியாதா? “யாரைத் தேடுகிறீர்கள்?” தேவகுமாரன் முன்னே வருகிறார்.

“நாசரேத்து ஏசுவை.”

ஏசு முன் வருகிறார். எல்லோரும் பின்னே நிலத்தில் விழுகின்றார்கள்.
திரும்பவும் ஏசு கேட்கிறார். “யாரைத் தேடுகிறீர்கள்?”

“நாசரேத்து ஏசுவை.” பதில் இன்னும் பலமாகவே வருகிறது. என்ன நாசகார நோக்கத்துடன் அவரைத் தேடுகிறார்கள்?

“அது நான்தான் என்று சொன்னேன்.” ஏசு தானே தன்னைக் காட்டிக்கொடுக்கிறார். “நீங்கள் தேடுவது என்னை. இவர்களை விட்டுவிடுங்கள்.” அவர் கை சீடர்கள் பக்கம் சுட்டுகிறது.

சீடர் பீட்டரானவர் தன் வாளால் அங்கெ நின்றிருந்த பிரதம குருவின் வேலைக்காரர்களின் காதை அறுக்க, ஏசுவின் குரலில் ஆழம் தெரிகிறது.

“உம்முடைய கத்தியைத் தூர எறியும். என் பிதா எனக்குத் தந்த கோப்பையில் அல்லவோ நான் பருகவேண்டும்.”

ஏசுவைப் பிரதம குருவிடம் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். சீடர் பீட்டர் பிரதம குருவின் மாளிகைக்கு வெளியே இரும்புக் கதவைப் பற்றிக்கொண்டு நிற்க, ஒரு சிறு பெண் கதவைத் திறந்து அவரை உள்ளே விடுகிறாள். “ நீர் ஏசுவின் சீடர்களில் ஒருவர் இல்லையா?”

“இல்லை.” பீட்டரின் முகத்தில் சலனமில்லை. இது என்னது?
சைமன் பீட்டர் ஏசுவின் அன்புக்குகந்த சீடர் அல்லவா? அவரா இப்படிச் சொல்கிறார்? கித்ரோன் ஆற்றங்கரைக்குப் புறப்படுமுன்னர் தேவகுமாரன் இதைப்பற்றிச் சொல்லவில்லையா?

புpரதம குரு விசாரணையைத் தொடங்குகிறார்.

“உம்முடைய சீடர்கள் யார்? அவர்களுக்கு என்ன உபதேசம் செய்கிறீர்?”
“நான் என்ன கற்பிக்கிறேன் என்பது பரவலாகத் தெரிந்தே இருக்கிறது.

மக்கள் மத்தியில் ஒன்று, தனியே இன்னொன்று என்று சொன்னது கிடையாது. இந்தக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என் பேச்சைக் கேட்டவர்கள் இங்கே சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன சொன்னேன் என்பது தெரியும்.” ஏசு எல்லோரையும் பார்க்கிறார்.

திடீரென்று ஒரு படைவீரன் ஏசுவைத் தாக்குகிறான். “இப்படித்தானா பிரதம குருவுக்குப் பதில் சொல்வது?”

“நான் சொல்வது பொய்யானால் அதை நிரூபித்துக் காட்டுங்கள்.” ஏசு தொடர்கிறார்.

“உண்மையைச் சொல்கிறான் என்பதற்காக ஒருவனைத் தாக்கவேண்டுமா?”
விசாரணை தொடர்ந்துகொண்டிருந்தபோது யாரோ சீடர் சைமன் பீட்டரைக் கேட்கிறார்கள்…

“நீர் அவருடைய சீடர்களுள் ஒருவரில்லையா?”

“இல்லை.” சைமன் பீட்டர் சைமன் பீட்டர் கண் இமைக்காமல் பதில் சொல்கிறார்.

இது என்னது? பீட்டரா இப்படிச் சொல்கிறார்?

பீட்டரால் காதறுக்கப்பட்ட பிரதம குருவின் வேலைக்காரன் அந்தக் கூட்டத்தினுள்ளே நிற்கிறான்.

“நான் உம்மை ஏசுவுடன் ஒலிவ் தோப்புக்குள் காணவில்லையா?”

“இல்லை.” சைமன் குரலில் ஒரு நிச்சயம் தொனித்தது.

‘கொக்கரக்கோ’ என்று எங்கிருந்தோ ஒரு சேவல் ஏசுவின் தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்த கூவுகிறது. இது என்ன? சீடன் குருவைத் தனக்குத் தெரியாதென்று மும்முறை மறுக்கிறான். ரோமிய ஆளுநரிடம் ஏசுவைக் குற்றஞ்சாட்டுபவர்கள் போகிறார்கள்.

“அவர் செய்த குற்றம் என்ன?” ஆளுநர் விசாரிக்கிறார்.

“அவன் குற்றவாளி இல்லையென்றால் அவனைக் கைது செய்திருக்க மாட்டோம்” என்ற ஒருமித்து வன்மையாகப் பதிலுரைக்கிறார்கள்.

“அப்படியானால் நீங்களே கொண்டுபோய் உங்கள் விதிகளின்படி அவரை விசாரியுங்கள்.”

“இல்லை, அவரைச் சிலுவையில் அறையவேண்டும். அதற்குத் தங்களின் அனுமதி வேண்டும்.”

ஒரு நரிக்கூட்டத்தைப்போல ஊளையிடுகிறார்கள்.

ஆளுநர் ஏசுவைத் தன்னிடம் கூட்டிவரும்படி கட்டளையிட ஏசுவைத் தள்ளிக்கொண்டு வருகிறார்கள். ஆளுநர் நிதானமாக ஏசுவைப் பார்க்கிறார். ‘இவரென்ன குற்றம் செய்திருக்கக்கூடும்? இல்லை’ என்று மனத்தில் படுகிறது. ஏதோ ஒரு பெரிய நாடகத்தில் தான் ஓர் அங்கமாகப்போவது போன்ற உணர்வு அவர் மனதில் எழுகிறது.

“நீர்தானா யூதர்களின் அரசன்?”

“அரசன் என்றால்…? நீங்கள் கருதுவதுபோலவா? அல்லது யூதர்கள் சொல்வதுபோலவா?”

தேவகுமாரன் கேட்கிறார்.

ஆளுநருக்கு இது எதுவிதத்திலும் உகந்தது அல்ல. “நான் ஒரு யூதனா? உம்முடைய மக்களும் அவர்களுடைய குருமாரும்தான் இங்கே உம்மைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். ஏன்? நீர் என்ன செய்தீர்?” ஆளுநர் விளக்க முயல்கிறார்.

“நான் அரசனல்லன். அவ்வாறிருந்தால் என்னைக் கைதுசெய்தபோது எனது சீடர்கள் யூதத் தலைவர்களுடன் சண்டை பிடித்திருப்பார்கள். எனது அரசு இங்கே இல்லை.”

“அப்படியானால் நீர் ஓர் அரசனா?” திரும்பவும் ஆளுநர் கேட்கிறார்.

“ஆமாம்.” ஏசுபிரான் தொடர்கிறார். “நான் அதற்காகவே பிறந்தேன். உண்மையை உலகத்திற்குக் கொண்டுவருவதற்காகவே நான் வந்திருக்கிறேன். உண்மையை விரும்புகிறவர்கள் எல்லோரும் என் வழி நடப்பவர்களே.”

“உண்மை என்றால் என்ன?” என்று ஆளுநர் கேட்டுவிட்டு, யூதத் தலைவர்களிடம் போய், “ அவர் குற்றம் செய்தவரல்லர். உங்கள் வழக்கப்படி ஆண்டுதோறும் கொண்டாடும் இன்றைய விழாநாளில் நீங்கள் கேட்கும் ஒரு கைதியை என்னால் விடுதலைசெய்ய முடியும். உங்கள் ‘அரச’னை விடுதலை செய்கிறேன்.”

“இல்லை… வேண்டாம்.” நரிகள் ஊளை அதிகரிக்கிறது.

ஆளுநரின் மன உளைச்சல் அதிகரிக்கிறது. யூதத் தலைவர்கள் ஒருபக்கம், ஏசு மறுபக்கம்.

“அவரைச் சிலுவையில் அறையுங்கள்… அறையுங்கள்.” நரிகள் ஊளை வானை எட்டுகிறது.

“அவர் குற்றம் செய்தவரல்லர்.” அவரை நீங்கள் சிலுவையில் அறையுங்கள். ஆளுநர் தன் கையைக் கழுவிவிட, நரிக்கூட்டம் ஏசுவை முட்கிரீடம் அணிவித்து, சிலுவையைச் சுமக்கவைத்து கோல்கோதா மலைக்கு இழுத்துக்கொண்டு போகிறது.

அந்தக் கூட்டத்தினுள்ளே ஏசுவைச் சுமந்த மேரி மாதா இருக்கிறார். ஏசுவைச் சிலுவையில் அறைகிறார்கள். மேரி மாதா துடிக்கிறார். உதிரம் சொட்டச் சொட்ட சிலுவையை நிறுத்தி நடுகிறார்கள்.

ஏசுவின் தலை தொய்கிறது.

கீழே நான் இருக்கிறேன். அவர் கண்கள் என்னைப் பார்க்கின்றன.
திடீரென்று விழித்துக்கொண்டு அம்மாவிடம் ஓடுகிறேன். அவளுக்கு என்னில் ஒரு மாற்றம் தெரிகிறது.

“அம்மா எனக்கு ஏசுவைத் தெரிகிறது.” வார்த்தைகள் அத்துடன் நின்றுவிடுகின்றன.

அடுத்த நாள் காலை பாதர் பெஞ்சமினிடம் அப்பா அம்மாவுடன் போய் நிற்க, அப்பா சொல்கிறார்: “திருச்சபைக்கு எனது மகனைக் கொடுக்க வந்திருக்கிறேன்.” அப்பாவின் குரலில் நடுக்கம் தெரிகிறது. அம்மா கண் கலங்குகிறாள். என் பிதா எனக்குத் தந்த கோப்பையில் அல்லவோ நான் பருகவேண்டும்?”

“பாதர்… பாதர்… பாதர்…”

இது எசக்கி, பாதர் தன் கனவிலிருந்து விழித்தார். அந்தோனி எசக்கியை விரட்ட முயல்வதும் கேட்டது.

பாதர் எழுந்து மெல்ல வெளியே வந்தார்.

“பாதர்… விஜிதவை கத்தியால் குத்திப்புட்டாங்க பாதர்.” எசக்கி விழுந்து அழுதான். பாதருக்குத் திக்கென்றது.

“என் பிதா எனக்குத் தந்த கோப்பையில் அல்லவோ நான் பருகவேண்டும்?”
பாதர், “ஏசுவே!” என்று குறியிட்டுக்கொண்டார்.

பாதர் எசக்கியையும் அழைத்துக்கொண்டு வைத்தியசாலையை அடைந்தபோது, விஜிதவுக்காக ஒரு பெரிய கூட்டமே இருந்தது. பொலிஸ் கொன்ஸ்ரபிள் இரண்டு பேர், ஓர் இன்ஸ்பெக்டர் உட்பட.

“என் மகனே! என் மகனே!” அலிசின் ஒப்பாரி நெடுந்தூரம் கேட்டது. செவுத்தி ஒரு சுவரின் மூலையில் குந்தியிருந்தான். எசக்கி குடும்பம், விஜிதவின் தமையன் ரத்னே எல்லோரும் அழுகையுடன் நின்றுகொண்டிருந்தார்கள்…
புhதரைக் கண்டதும் அலிசின் அழுகை இன்னும் வெடித்தது.

“பாதர்! ஏன் மகனைக் கொன்றுவிட்டார்கள்.”

கரீம், ரத்னேயிடம் தனியே பேசிக் காசு வாங்கிக்கொண்டு ஒரு சவப்பெட்டி வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்தான்.

“சவப்பெட்டி வாங்கவேண்டும்” என்று பெரிய குரலில் சொல்லிவிட்டு, கரீம் வெளியே போவதை பாதர் கண்டார்.

செவுத்தி சலனமில்லாமல் மூலையில் குந்தியிருந்தான்… பாதர் குறியிட்டுக்கொண்டார்.

இன்ஸ்பெக்டர் முன்னே வந்தார்.

“இவனை உங்களுக்குத் தெரியுமா, பாதர்?” இன்ஸ்;பெக்டர் ஆச்சரியமடைந்திருக்கவேண்டும்.

பாதருக்கு மனம் வருந்தியது. இதுபோன்ற கேள்வி முன்னர் கேட்கப்படவில்லையா? புhதர் இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கனத்த இடைவெளிக்குப் பின்னர், “ஆமாம்” என்று, திரும்பவும் குறியிட்டுக்கொண்டார்.

“என் மகனே!” என்று அலிசின் ஒப்பாரி நெடுந்தூரம் கேட்டது.

சட்ட விதிகளின் தொல்லைகள் முடிந்து, கரீம் கொண்டுவந்திருந்த சவப்பெட்டியில் விஜிதவைக் கொண்டுபோவதைப் பார்த்தார் பாதர்.
அவர் மனம் கனத்திருந்தது. தேவாலயத்துக்குப் போய் முழங்காலிட்டு, “பரமண்டலத்திலிருக்கும் பிதாவே! உமது அரசு இப்போது இங்கே வரட்டும். உமது விருப்பங்கள் எவ்வாறு சொர்க்கத்தில் நிறைவேற்றப்படுகின்றனவோ அதுபோல இவ்வுலகிலும் நிறைவேற்றப்படட்டும். பிதாவே! இன்றைய எமது அப்பத்தைத் தாரும். எவ்வாறு எமக்குப் பாவம் செய்தவர்களை மன்னித்திருக்கிறோமோ, அதுபோல் எங்கள் பாவங்களை மன்னியுங்கள். எங்களைத் தூண்டும் துன்மார்க்கப் பாதையிலிருந்து அகற்றி விடுதலை தாரும். ஆமென்” என்று பிரார்த்தித்துக்கொண்டார்.

தனது இருப்பிடத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். வெம்மையான ஒருநாள் தன் வெம்மையை இரவுக்குப் பறிகொடுக்க ஆரம்பித்திருந்தது. அந்தத் தெருவுக்கே உரிய இயக்கம் அங்கே! சொர்க்கத்தின் கதவுகள் மூடப்பட்டுக்கொண்டிருந்தன. ஈசல் பூச்சிகளின் இயக்கத்தைப் போன்றதொரு இயக்கத்திலும் சத்தத்திலும் அவருக்கு எசக்கியின் புலம்பல் நன்றாகக் கேட்டது. ‘திக்’கென்றது பாதருக்கு.

சொர்க்கத்தில் செவுத்தியும் எசக்கியும் கரீமும் அருகருகே இருந்து அமுதம் பருகிக்கொண்டிருந்தார்கள். பாதர் உடனே நின்றார்.

“இது என்னது?” மனம் விறைத்தது பாதருக்கு. விறைப்பு நீங்க வெகுநேரம் எடுத்தது.

“என் பிதா எனக்குத் தந்த கோப்பையில் அல்லவோ நான் பருகவேண்டும்.”
பாதர் எதிர்வழியே நடக்க ஆரம்பித்தார்.

000

Comments

Popular posts from this blog

வாசிப்பின் சுகம்: 2

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

மேகலை கதாபற்றி...