துக்கத்தின் வடிவம்
துக்கத்தின் வடிவம்
எனினும்
இருந்துகொண்டுதான் இருக்கிறது
இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்வு குறித்து.
கொஞ்சம் அமைதிக்கும்
கொஞ்சம் நிம்மதிக்கும்
கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும்
ஆசைகளின் பெருந்தவிப்பு.
ஆனாலும்
மீறி எழுகிறது
மனவெளியில் பய நிழல்களின்
கருமூட்டம்.
முந்திய காலங்களில்
மரணம் புதைந்திருந்த குழிகள்
எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது.
ஆனால் இப்போது...?
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.
எங்கே வெடித்துச் சிதறும்
எங்கே அவலம் குலைந்தெழும் என்று
தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது.
மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல்
மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது.
இப்போதெல்லாம்
தூக்கம் அறுந்த இரவுகளும்
ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே
காலத்தின் நகர்கிறது.
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.
0
தேவகாந்தன்
(2000 -2004 இடைப்பட்ட காலத்தில் என்றோ ஒருநாள் எழுதியது. மனத்திலிருந்து நழுவிப்போயிருந்தது. பதிவுகள்.கொம்மில் 'தேவகாந்தன் பக்கத்'தை புரட்டிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது.)
Comments