எனக்குப் பிடித்த சிறுகதைகள் 7


 (தாமரைச்செல்வியின் எழுத்துக்கள் கடித நடையின் ஆகக்கூடிய சாத்தியங்களைக்கொண்ட புனைவிலக்கிய வகையைச் சார்ந்தவை.  முப்பத்தேழு கதைகளை உள்ளடக்கிய அவரது அண்மைக்காலத் தொகுப்பான 'வன்னியாச்சி' என்ற தொகுப்பில் இக்கதை உள்ளது.)


பாதை
தாமரைச்செல்வி

திட்டம் போட்டபடி எல்லா ஒழுங்கும் செய்தாகிவிட்டது.
      மணவறை தகரப்பந்தலுக்கு முற்பணம் கொடுத்துவிட்டாள். நூறு நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தாயிற்று. சமையலுக்கும் இரண்டு பேருக்குச் சொல்லிவைத்தாயிற்று. பொன்னுத்துரை கிழவனிடம் ஒரு வண்டில் விறகு ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஏதாவது மிச்சமாய் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள்.
      பலகாலத்துக்கும் சமையலுக்கும்தான் இனிச் சாமான்கள் வாங்கவேண்டும். அதற்கும் பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். ஏதாவது நாலுவகைப் பலகாரம் போதும். ஒரு நூறுபேர் வரைதான் கல்யாணத்திற்கு வருவார்கள். மற்றும்படி சொந்தக்காரர்கள் எல்லோரும் ஆளுக்ககொரு திசையில் சிதறிப்போய்விட்டார்கள். அவர்களை எல்லாம் தேடிப் போய்ச் சொல்ல அவகாசம் இல்லை.
      இந்த நெருக்கடியான நேரத்தில் ஆடம்பரமாகக் கல்யாணம் செய்வது அநியாயமாய்த் தோன்றியது.
      மேளம் தேவையில்லை. வீடியோ தேவையில்லை. புகைப்படம் எடுக்கக் கவிதன் வருவதாகச் சொல்லியிருக்கிறான். இனி மணவறைக்குக் கட்ட ஒரு காஞ்சிபுரம் சேலைதான் வாங்கவேண்டும். அதைக்கூடக் குறைந்த விலையில் எளிமையாய் வாங்கிக்கொள்ளலாம்.
      பவானி கையிலுள்ள பணத்தை எண்ணிப்பார்த்தாள். ஆரம்பச் செலவுகளுக்குப் போதும். மற்றப் பணம் ஒழுங்காகக் குறிப்பிட்ட நாளுக்குள் வந்துசேர வேண்டுமே என்று கவலையாக இருந்தது.
      இருபத்திநாலு வயதில் கல்யாணம் என்றால் மனதில் உற்சாகமோ துள்ளலோ இருக்கக்கூடும். முப்பத்திநாலு வயதில் கல்யாணத்தை எதிர்கொள்வதில் எந்த உற்சாகமும் கொள்ளமுடியவில்லை. எந்நேரமும் மனதில் யோசனையும் கவலையும்தான்… மாப்பிள்ளையின் முகத்தைக்கூட நினைவுக்குக் கொண்டுவரமுடியாத அளவுக்கு அலைச்சலும் வேலைகளின் சுமைகளும் அவளை அழுத்திக்கொண்டிருந்தன.
      எல்லாவற்றுக்கும் அவள்தான் அலையவேண்டியிருந்தது. மணவறைப்பந்தலுக்குக் கல்யாணப் பெண்ணே வந்து ஒப்பந்தம்செய்து போனதை அவன் முன்பு அறிந்திருக்கவேமாட்டான். அதுதான் அன்று அதிசயமாய்ப் பார்த்தானோ தெரியவில்லை.
      வீட்டுத் தேவைகளுக்கு மட்டமல்ல புறத் தேவைகளுக்கும் அவளே முகம்கொடுக்கவவ்ண்டி இருக்கிறது. அப்பாவானால் கையும் காலும் இழுத்துப்போய் படுக்கையில் படுத்திருக்கிறார். இந்த இடப்பெயர்வுக்கு முன்பு பரந்தனில் இருந்தவர்கள் சண்டையின்பொது அப்பாவைக் கூட்டிவரத்தான் சரியாய்  சிரமப்பட்டுவிட்டார்கள். அம்மாவும் அவளுமாய் அவரை இருபக்கமும் தாங்கிச் சுமந்துகொண்டுதான் கூட்டிவந்தார்கள். பூநகரிவீதியில் ஏறி ஒரு மாட்டுவண்டியை மறித்து அவரை ஏற்றி உருத்திரபுரம்வரை கொண்டுவந்து சேர்த்தார்கள். அங்கு தெரிந்தவர்கள் வீட்டில் அப்பாவையும் அம்மாவையும் விட்டுவிட்டு பக்கத்து வீட்டு ஆட்களுடன் மறுநாள் திரும்பவும் வீட்டுப்பக்கம் போனாள். அதிர்ந்த சத்தங்களுக்கிடையே அவசியமான பொருட்களைச் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்தாள். மறுபடி ஊருக்குள் போக முடியவில்லை.
      ஒரு வாரத்தின் பின் உருத்திரபுரத்திலும் இருக்க முடியாதநிலையில் ஸ்கந்தபுரம் வந்தார்கள். இங்கே தெரிந்த ஆட்களின் காணிக்குள் ஒரு சிறு வீடு போட்டு இருக்கிறார்கள். இந்த வீடுபோடத் தடிகளிலிருந்து கிடுகுவரை வாங்க அவள்தான் ஓடித்திரிய வேண்டியதாயிற்று. கடைசி மகளாய்ப் பிறந்தும் அவள் என்றைக்குமே சுகமாய் இருந்ததில்லை. கஷ்டத்திற்குள்ளும் ஒரு அதிர்ஷ்டம். அவளுக்கு ஒரு வேலை கிடைத்ததுதான்.
      இருபத்தொரு வயதில் கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். பதின்மூன்று வருடங்களாய் அதிலேயே வேலை செய்கிறாள். சங்கத்து வெலையில் சிரமம் அதிகம். ஞாயிறு மட்டுமே லீவு கிடைக்கும். அந்த ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் காத்திருக்கும். கடைக்குப் போவதிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து எடுப்பதுவரை எத்தனை அலுவல்கள்!
      அக்காவும் கிளிநொச்சியிலிருந்து இப்போது இடம்பெயர்ந்து போய்ப் புதுக்குடியிருப்பில் இருக்கிறாள். அத்தான் அவ்வளவு சுமுகமாக இல்லை. எப்போதாவது அக்கா கடைசிக் குழந்தையையும் தூக்கிக்கொண்டு இங்கே வருவாள் தனது கஷ்டம் சொல்லி ஒரு மூச்சு அழுவாள். அவள் அழுகையில் மனம் கரைந்துபோகும். அத்தான்மீது எழுகின்ற கொபத்தை அடக்கிக்கொண்டு அக்காவுக்கு ஆறுதல் சொல்லி, கையில் இருக்கும் காசைக் கொடுத்து அனுப்பிவைப்பாள்.
      அத்தனின் பொறுப்பற்ற குணத்தால் எல்லாத் துயரங்கைளயும் இவளே சுமந்துகொள்ள வெண்டியிருக்கிறது. அத்தனை சுமைகளிலிருந்தும்; அக்காவால் விடுபடவே முடியாது. பாவம், படிப்பு இல்லை. தன் காலில் நின்றுவாழ எந்தத் தொழிலையும் செய்ய அவளால் இயலாது. அதனால்தான் ஒருவரைச் சாரந்து வாழவேண்டிய நிலை . அதை அத்தான் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு அக்காவை அழவைத்துக்கொண்டு இருக்கிறார்.
      அண்ணா இன்னொரு விதம். அவன் எப்பேதும் சுயநலவாதியாகத்தான் இருந்திருக்கிறான். இவர்களைப்பற்றிய அக்கறை அவனுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இருபத்திநாலு வயதிலேயே தன் எண்ணப்படி கலயாணம் செய்து தனியாகப் பொய்விட்டான். இப்போதும் இரண்டு மைல் தூரத்தில் கோணாவிலில்தான் இருக்கிறான். அவள் சம்பளம் எடுக்கின்ற நாளாகப் பார்த்து எப்போதாவது வந்துநிற்பான். அம்மாவின் இரக்க குணத்தைப் பயன்படுத்திக் காசாகவோ பொருளாகவோ வாங்கிக்கொண்டு போய்விடுவான்.
      இவர்களுடைய குடும்ப அமைப்பைப் பார்த்ததிலேயே அவளுக்கு எல்லம் வெறுத்துப்போய்விட்டது. இயல்பாய் அமைய வேண்டிய வாழ்க்கையைத் தங்கள் நடவடிக்கைகளாலேயே இன்னும் சிக்கலாக்கிக்கொள்கிற இவர்களை திருத்த முடியுமென்றும் தோன்றவில்லை.
      இப்போது இந்தக் கலயாணப் பேச்சுக்கள் ஆரம்பமானதிலிருந்து அண்ணா இந்தப் பக்கமே வருவதில்லை. ஏதும் தரவேண்டீ வந்துவிடுமோ என்று அண்ணிக்குப் பயம். அண்ணா சரியாய் இருந்தால் அவளுக்கு இத்தனை அலைச்சல் இருக்காது. அவனுடைய பொறுப்புக்களையம் சேர்த்து அவளே சுமக்கவேண்டியதாயிற்று.
      அவளிடம் என்றைக்குமே மேலதிகமாய்க் காசு இருந்ததில்லை. சம்பளம் எடுத்தால் வரிசையாய்த் தேவைகள் காத்திருக்கும். தன் சம்பளத்தைச் சேமிக்கவேண்டும் என்றோ, தனக்கு ஏதும் நகை நட்டுச் செய்யவேண்டும் என்றோ அவள் ஒருபோதும் நினைத்ததில்லை.
      கல்யாணம்கூட அவளைப் பொறுத்தவரை ஒரு கனவாகவே இருந்தது. அத்தான்போல ஒருவன் வந்தால் அக்காமாதிரித் தன்னால் வாய் மூடி இருக்க முடியாது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி ஒரு சீரழிந்த வாழ்வு அமைவதைவிட இப்படியே இருந்துவிடலாமோ என்றும் அடிக்கடி நினத்துக்கொள்வாள். மனதிலிருந்து கல்யாண ஆசை கிட்டத்தட்ட அழிநதுபோய்விட்ட நிலையில்தான் நாகேந்திரம் மாமா இந்தக் கல்யாணத்தை ஒழுங்குசெய்தார்.
      மாப்பிள்ளை கொழும்பில் கடைகளுக்குக் கண்க்கு எழுதுகிறார் என்றதும் அவள் தயங்கினாள்.
      "அப்பா அம்மாவை விட்டிட்டு எ;னனால கொழும்புக்குப் போக ஏலாது, மாமா. இந்த இடம் சரிவராது. விடுங்கோ" என்று சொல்லிவிட்டாள்.
      "இல்லைப் பிள்ளை. பெடியனுக்கு இங்க வந்து இருக்கிற யோசனை இருக்கு. அவையளும் கிளிநொச்சி ஆட்கள்தான். தமக்கை இங்க அக்கராயனில இருக்கு. இங்க வந்து ஏதும் தொழில் செய்யலாம் எண்டு நினைக்கினம்."
      வேலையென்று எதுவும் இல்லாத மாப்பிள்ளை என்றதும் மனம் ஒரு தடவை சுருண்டுகொண்டது.
      "இந்தக் காலத்தில உன்ர வயதுக்குப் போருத்தமான மாப்பிள்ளை தேடுறது கஷ்டம், பிள்ளை. இந்தப் பேடியன் உங்கட வீட்டையே வந்திருந்து உன்ர தாய் தேப்பனையும் பார்த்துக்கொள்ளுவான். நீயும் எத்தினை நாளைக்குத் தனிய இருந்து இவையளோட அலையப் போறாய்?"
      இந்த வார்த்தைகள்தான் அவளைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்தன. இத்தனை பொறுப்புக்களையும் தன் பொறுப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆண் வருவதானால் சம்மதிக்கலாம் என்று தோன்றியது.
      இரண்டு வாரத்திற்கு முன்புதான் பெண்பார்க்க வந்திருந்தார்கள். வீட்டின் முன்புற நிளமான தாழ்வாரத்தில் பாய்விரித்து அமர்ந்தார்கள். மாப்பிள்ளைக்கு நாற்பத்தியொரு வயது.
      அன்றைக்கு ஒரு ஆள்மூலம் சொல்லி அனுப்பியும் அண்ணா வரவில்லை. அதனால் அவளே ஒவ்வொன்றையும் கதைக்க வேண்டியதாயிற்று. ஒரு லட்சம் காசாகத் தருமாறு கேட்டார்கள்.
      "இந்தக் காலத்தில இதுகூட இல்லாமல் ஆர் வருவினம், பிள்ளை. உங்கட சொந்தக்காரர் ஆரும் உதவி செய்யமாமமே…"
      நாகேந்திரம் மாமாவுக்கு எப்படியாவது இந்த .இடத்தை ஒழுங்கு செய்துவிடவேண்டுமென்ற தவிப்பு.
      அவளுக்குத் தெரியும் ஒரு லட்சம் என்பது குறைநந்த சீதனம்தான். ஆனால் இல்லாதவர்களுக்கு என்னமோ பெரிய தொகைதானே? காசாக ஒரு லட்சம்… நகைக்கும் கல்யாணச் செலவுக்குமாக இன்னொரு லட்சம்… ஆக இறுக்கிப் பிடித்தாலும் இரண்டு லட்சம் இப்போது தேவை.
      இந்தத் திகைப்பில் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலே அவளுக்கு எழவில்லை. மாமியின் பிள்ளைகள், பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்தான். அவர்கள் எவ்வளவு தூரம் உதவக்கூடும் என்று தெரியவில்லை. ஆனால் அப்பா கைகால் இழந்து படுத்த படுக்கையாகிவிட்ட நேரத்தில்…
      பவானிக்குக் கல்யாணம் சரிவந்தால் நாங்கள் ஏதும் உதவி செய்கிறோம் என்று கடிதம் போட்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து உதவி கிடைத்தால் ஒப்பேற்றிவிடலாம். அந்த நம்பிக்கையில் அவர்கள் கேட்ட ஒரு லட்சத்துக்கு சம்மதித்தாள்.
      நான்கு நாளில் பக்கத்து வீட்டுக்காரரிடம் அம்மா அப்பாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வவுனியாவுக்குப் போனாள். காசு விடயத்தில் அண்ணாவை நம்பமுடியாது. அவர்கள் அனுப்புகிற காசில் பாதியை எடுத்துவிட்டு மீதியைத்தான் கொண்டுவந்து தருவான். இவ்வளவுதான் அனுப்பினார்கள் என்று பொய்வேறு சொல்வான். அதனால்தான் அவளே போகவேண்டியதாயிற்று.
      இந்தப் பிரயாணம் இத்தனை கடினமானதாய் இருக்கும் என்று அதுவரை அவள் ஊகித்தும் பார்த்ததில்லை. அத்தனை அலைச்சலையும் தாண்டி வவுனியா போய் எல்லோருடனும் கதைத்தாள். கல்யாணத்திற்கென்று காசு கேட்க வெட்கமாயும் வேதனையாயும் இருந்தது.
       முப்பத்திநாலு வயதுவரைக்கும் இருக்கிறாளேயென்று அனுதாபப்பட்டு காசு அனுப்புவதாகச் சொன்னார்கள். முதலில் வந்த நாற்பதினாயிரம் காசைக் கையில் எடுத்துக்கொண்டு மிகுதிக் காசை ஒரு கடைக்கு அனுப்ப ஒழுங்கு செய்தாள். அவர்கள் மூலம் அந்தக் காசை ஸ்கந்தபுரத்தில் ஒரு கடையில் வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டு ஒரு வாரத்துக்குள் திரும்பிவந்தாள். வவுனியாவிலும் கெடுபிடிகள் அதிகம். தேவையில்லாமல் ஒருநாள் நிற்பதைக்கூடத் தவிர்த்துக்கொண்டாள்.
       அவள் வந்ததும் நாள் வைக்கப்பட்டது. அன்றிலிருந்து கல்யாண வீட்டு அலுவல்களை ஒவ்வொன்றாக அவள்தான் கவனித்துக்கொண்டு வருகிறாள். மணவறை தகரப்பந்தலுக்கு ஒழுங்குசெய்ய மணியங்குளம் ஓடவேண்டியிருந்தது. சமையல்காரருக்குச் சொல்ல அக்கராயன் சந்திக்ப் போகவேண்டியிருந்தது. நாலு நாளுக்க முன்பிருந்தே லீவு எடுத்துக்கொண்டு இதே வேலைகளாய் அலைந்தாள்.
      இன்றைக்கும் அதிகாலையிலேயே புறப்பட்டவள் வீட்டுக்கு வந்துசேர பன்னிரண்டு மணிக்கு மேலாகவிட்டது. சைக்கிளை வீட்டுத் தாழ்வாரத்தில் நிறுத்திவிட்டு வெய்யிலுக்குள்ளிருந்து வந்த களைப்புக்கு விறாந்தையின் மரக்கப்புடன் சாய்ந்து அமர்ந்தாள். அம்மா தேசிக்காய் கரைத்துக் கொண்டுவந்து கொடுத்தாள்.
      மடமடவென்று குடிக்க வயிற்றுக்குள் குளிர்மையாய் இறங்கியது.
      "பிள்ளை, இன்னும் சீலை எடுக்கேலை…
      "ஓமம்மா, பின்னேரம் போய் எடுப்பம்…"
      அம்மா சிறிது தயங்கியபடியே சொன்னாள்: "புதுக்குடியிருப்புக்குப் போற ஆட்களிட்ட அக்காவுக்கு விசயம் சொல்லிவிட்டனான். இன்னும் அவையளைக் காணேலை."
      "ஏதோ வாறநேரம் வருவினம்தானே. நீங்கள் ஏன் யோசிக்கிறீங்கள்?"
      "அதில்லை பிள்ளை, ஊரிலையெண்டா கையுதவிக்கு எத்தனை பேர் வருவினம்? இங்க என்ன செய்யிறது? அவள் வந்தால் உதவியாயிருக்குமெல்லே…?"
      அக்காவின் வருகையால் உதவியைவிட உபத்திரவமே அதிகம் என்பதை அம்மாவுக்குச் சொல்லி புரியவைக்க முடியாது. "இங்க அயலில உள்ள சனம் வந்து உதவிசெய்வினம் அம்மா, நீங்கள் கவலைப்படாதேங்கோ."
      அவளுக்கும் யோசனையாகத்தான் இருந்தது. எல்லாம் எப்படி ஒப்பேறப்போகிறதோ என்று எந்நேரமும் மனதுக்குள் குடைந்துகொண்டே இருந்தது.
      இன்றைக்குப் புதன்… வருகிற புதன் கல்யாணம். இந்த எட்டு நாட்களுக்குள்ளும் மூச்சுவிட நேரமிருக்காது.
      மூன்று மணிக்கு மேல் சைக்கிளை எடுத்துக்கொண்டு பிரதான வீதிக்கு வந்தாள். சுள்ளென்று வெயில் முதுகை எரித்தது. ஸ்கந்தபுரத்தின் அத்தனை புடவைக் கடைகளையும் அலசிக் கடைசியில் சேரன் புடவையகத்தில் இரண்டாயிரத்தி ஐந்நூறு ரூபாய்க்கு ஒரு காஞ்சிபுரம் சேலை வாங்கிக்கொண்டாள். மஞ்சள் நிறத்தில் சிவப்புச் சரிகைக்கரை போடப்பட்ட எளிமையான சேலை. திரும்பி வரும்போது காசு அனுப்ப ஒழுங்கு செய்திருந்த கடைக்குப் பொய்க் காசு வந்துவிட்டதா என்று விசாரித்தாள். இரண்டு நாளில் வந்துவிடும் என்றார்கள்.
      கடைசி நேரத்தில் வந்து சேராவிட்டால் என்ன செய்வது என்ற திகைப்பு மனமெல்லாம் பரவியது. பயமாக இருந்தது.
      வெய்யிலுக்குள் வேர்த்து விறுவிறுக்க கவலையோடு நிற்பவளைப் பார்க்க அவர்களுக்கு இரக்கமாக இருந்திருக்கவேண்டும். "யோசிக்காதேங்கோ தங்கச்சி. எப்பிடியும் இரண்டு மூன்று நாளில காசு வந்திடும். அப்பிடி வராட்டிலும் முன்தேவைக்கு நாங்கள் கொஞ்சம் மாறித் தாறம், நல்ல காரியம் அல்லே."
      அவர்களின் வார்த்தைகளில் மனம் சிறிது தெளிந்தது. அலுப்போடு வீடு திரும்பினாள். வெய்யில் மறைந்துவிட்ட நேரம். தெரு நீளம் சனங்களின் நெருக்கம். இந்தச் சனக்கூட்டத்தின் நடுவே எங்காவது அந்த மாப்பிளையும் நிற்கக்கூடும். இத்தனை முகங்களிலும் அவனின் முகத்தை தன்னால் அடையாளம் காண்முடியாது என்றே தோன்றியது. நினைத்துப் பார்த்தும் ஞாபகத்துக்கு வரவில்லை. சில விநாடிகள் மட்டுமே பார்த்த முகம்…
      இப்பொது தன்னுடைய முகம் எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்த்தாள். ஏற்கனவே கறுப்பு முகம்தான். வெய்யிலுக்குள் அலைவதனால் இன்னும் கறுத்துப் போயிருக்கக்கூடும். வயதுக்கு மீறிய முதிர்வு… இன்னும் இரண்டு வயதை அதிகமாக்கிக் காட்டக்கூடும். ஏதோ இந்த ஒரு கல்யாணத்துக்காக என்ன பாடெல்லாம் படவேண்டியிருக்கிறது என்று நினைக்கையில் சிரப்பாகவும் இருந்தது.
      வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி இறங்கினாள். முற்றத்தில் நாகேந்திரம் மாமா அம்மாவுடன் நின்று கதைத்துக்கொண்டிருந்தார். அவள் சேலையை உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்தாள். அப்போதுதான் கவனித்தாள் அம்மா சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டிருந்ததை. மாமாவின் முகமும் அவ்வளவு நன்றாய் இல்லை.
      அவளை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தார்.
      "இங்க வா, பிள்ளை…"
      முற்றத்தில் போய் நின்றாள். நெஞ்சுக்குள் எதுவோ நெருடியது. "என்ன மாமா… ஏதும் பிரச்சினையா…"
      "ஓம், பிள்ளை. இந்தக் கல்யாணம் சரிவராது. மாப்பிள்ளைக்கு இதில அவ்வளவு விருப்பமில்லை. மத்தியானம் வந்து என்னோட கதைச்சவர்…"
      நெஞ்சு பகீரென்றது…
      "திடீரென்று என்னவாம்…"
      மாமா கொஞ்சநேரம் தவிப்போடும் சங்கடத்தோடும் நின்றார்.
      "என்ன விஷயம் மாமா, சொல்லுங்கோவன்…"
      "மாப்பிள்ளைக்குத் தெரிஞ்ச எங்கட ஊர் ஆட்கள் உன்னைப்பற்றி ஏதோ சொல்லிப்போட்டினம்."
      "என்னைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு…" அவள் வியப்புடன் கேட்டாள்.
      மாமா மீண்டும் தயங்கிக்கொண்டே கவலையோடு சொன்னார்: " நீ ஆம்பிள்ளை மாதிரி திரியிறனியாம். வீட்டில இருக்கிறேலையாம். இப்பிடித் திரியிற பொம்பிளை தனக்கு ஒத்துவராதெண்டு பெடியன் சொல்லிப்போட்டுது. இந்த இடம் போகட்டும், வேற இடம் பாப்பம். நீ கவலைப்படாத பிள்ளை…"
      கைகளால் வாய்பொத்தி ஒரு வினாடி திகைத்துப்போய் நின்றாள்.
      கடவுளே… கல்யாணம் என்று சொல்லிக் காசு வாங்கியாகிவிட்டதே… இனி அவர்களுக்கு என்ன பதிலைச் சொவது… எல்லாவற்றுக்கும் மேலாக… அவள் பதறியடித்துக்கொண்டு ஓடிப்போய் சைக்கிளை எடுத்தாள்.
      மணியங்குளத்திற்கு போய் மணவறை பந்தல்காரரிடம் ஒப்பந்தம செய்ததை ரத்து செய்யவேணும், சமையல்காரரை மறிக்கவேணும். குடுத்த முற்பணக்காசுகளை திரும்பி வாங்கவேணும். கவிதனிட்ட போட்டோ எடுக்க வரத்தேவையில்லை என்று சொல்லவேணும். சரி, எல்லாம்தான் செய்யலாம். அட… எடுத்த சேலையை என்ன செய்வது? திரும்ப எடுத்துக்கொள்வார்களா என்று கடையில் கேட்கவும் வேணும்.
      எல்லாவற்றிற்கும் அவள்தான் ஓடவேணும்.


(தாமரைச்செல்வியின் 'வன்னியாச்சி' தொகுப்பிலிருந்து. காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2017)  

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி