போரின் உபவிளைவுகள்

போரின் உபவிளைவுகள் சிலவேளைகளில்
சரித்திரத்தில் உதிர்க்கப்பட முடியாதன.
-தேவகாந்தன்


2015 மாசி இருபத்தெட்டாம் நாள் இலங்கையிலிருந்து கனடா வந்து சேர்ந்தபொழுது, என் நீண்டகாலக் கனவான ‘கனவுச் சிறை’யின் வெளியீடு தமிழ்நாட்டில் தை 3ம் திகதியே நடந்திருந்ததில் அதுவரை, சுமார் மூன்று ஆண்டுகளாகவிருந்த மனவிறுக்கம் தளர்ந்து மனமீட்டம் பெற்றிருந்தேன். கடந்த மூன்றாண்டுகளாக என் மனம் முழுக்க நிறைந்து உணர்வுகளாய்க் குவித்திருந்த அடுத்த நாவலுக்கான வரிகள் மனத்தில் தளும்பிக்கொண்டிருந்தன. இலங்கையில் நண்பன் கேதாரியுடன் நான் தங்கியிருந்த இடமும் கரவெட்டியாக இருந்தவகையில், நாவலின் இயக்கம் துல்லியமாய்த் தளவமைவுகொள்ள அது வெகு ஆதாரமாயும் அமைந்திருந்தது, என் படைப்பின் தீவிரம்; படியாகாமல் அடங்க மறுத்திருந்த சமயம் அது.

கொழும்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என என் பயண வழிகள்  நாட்டின் அழிவைச் சொல்லிக்கொண்டிருந்தன. கண்ட முகங்கள் துயரத்தின் வலிகளைச் சொல்லிக்கொண்டிருந்தன. பேசிய மனங்கள் துக்கத்தின் எல்லைகளைக் காட்டிக்கொண்டிருந்தன. எனினும் அதுபற்றிய பதிவு முன்னேவந்து எழுதத் தம்மை நிறுத்தாமல் விட்டிருந்தன.
ஏதோ ஒருவகையில் என் நாவலின் ஒரு பகுதி சமகால இலங்கையைத் தளமாகக் கொண்டிருந்த வகையில், என் மனப்பதிவுகள் நாவலில் இடம்பெற்றமை ஒரு ஆறுதலாக அமைந்தது. ஆனால் என் நாவல் ‘கந்தில் பாவை’ இப்போது பூரணம்பெற்றுவிட்டது. அதன் இறுதியான என் பங்குச் செம்மையாக்கத்தையும் முடித்தாகிவிட்டது. அதுவரை என் மனத்துள் உறங்கிக் கிடந்த துயரத்தின் விம்மல் இப்போதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

இலங்கைத் தமிழர்மேல் விழுந்திருக்கும் சோகம் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே விதிக்கப்பட்டிருந்தது என்றே தெரிகிறது. போராட்ட ஆரம்ப காலத்தில் என் தாயாருடன் கதைத்துக்கொண்டிருந்த அயல் வீட்டு ஆசிரியை இதுபற்றிய பேச்சில் ஒருபோது சொல்லியிருந்தாள், ‘கரணம் தப்பினால் மரணம்தானக்கா’ என்று.

போராட்டம் எப்போதும் ஒரு கரணமாகவே இருக்கிறது. கரணம் தப்புகிறபோது கரணமடிப்பவருக்கு மட்டுமில்லை, பார்த்துக்கொண்டு கீழே நிற்பவர்களுக்கும்கூட அடிவிழுகிறது. ஒரு வெளிநாட்டுடனான யுத்தம் அதிதீவிரமான அழிவைக்கொண்டும் இருந்துவிடலாம். அதிலிருந்து நாடு மிகக் குறுகிய காலத்துள் தன்னை மீள அமைத்துக்கொள்ள முடியும். அதன் ஒட்டுமொத்த இனமும் அந்த மீளமைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துவது அங்கே சாத்தியமாகவிருக்கும்.

ஆனால் இலங்கையில் நடந்தது ஒரு உள்நாட்டு யுத்தம். அதில் பங்குபற்றிய பங்குபற்றாத சகல இனங்களுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. சகல இனங்களுமே இழப்புகளின் சோகம் இன்றளவும் நீங்காமலே இருக்கின்றன. அழிவுகளின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத பன்னூற்றுக் கணக்கானவரின் அழுகை ஒவ்வொரு இனத்துள்ளும் வெடித்தெழுந்துகொண்டிருக்கிறது.
அழிந்த கட்டிடங்கள் கட்டியெழுப்பப்பட்டாயின. சுவடிழந்த பாதைகள் புத்தம்புது நெடுஞ்சாலைகளாய் நீட்டப்பட்டாயின. பசியும் நோயும் தீர முழுத் தீவிரம் காட்டப்படலும் சாத்தியமாயிற்று. ஆனால் மருந்தால், பொருளால், மற்றுமெதனாலும்கூட தீர்க்கமுடியாதபடி இனங்களுக்களுக்கிடையிலான நல்லுறவு  இங்கே சிதைந்து கிடக்கிறது.

இது நாட்டின் ஆன்மாவில் விழுந்த கீறு. அதை காலம்மட்டுமே தீர்க்க விதிக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் நண்பரொருவருடனான நேர்ப்பேச்சில் இலங்கை நிலவரம் குறித்துப் பேசுகையில் சொல்லியிருந்தேன், ‘இலங்கையின் ஆன்மாவின் வலி தணிய தேவைப்படும் காலம் குறைந்தபட்சம் கால்நூற்றாண்டு’ என. இது ஓரளவு உணர்ச்சிவேகத்தில் சொல்லப்பட்டதாயிருந்தாலும் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இச் சோகத்தின் தழும்பு மறைந்துவிடவே மாட்டாது.

யுத்தம் முடிந்து ஆறாண்டுகளானாலென்ன, புதிய ஆட்சி அமைந்து ஆறு மாதங்களானாலென்ன, இந்த ஆன்ம சேதம் அகலும்வரை ஒரு சோகம் தீராமல் இலங்கையில் தங்கியிடவே நேரும். அது மேலும் தொடரும் வன்முறைகளாக, பாலியல் பலாத்காரங்களாக, ஆட்கடத்தல்களாக, கொன்றழிப்புகளாக நீள்வது இதயத்தை நொருக்கும் வேதனையே. ஆனால் இந்த வன்கொடுமையில் யுத்தத்தின் உபவிளைவான சட்டவிரோத, தேசவிரோத கும்பலின் பங்கை தவிர்த்து எதையும் கணக்கெடுத்துவிட இயலாது. காலத்தில் மட்டுமே நம்பிக்கைவைக்கும் தருணமாகவே இது நிமிர்ந்து நிற்கிறதென்பதைப் புரிவது அவசியம்.

கொழும்பு எனக்கு என் சொந்த புறங்கைபோல் பழக்கமான நகரம். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் ஒருநாள் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாலுள்ள பாதசாரிகள் கடக்கும் பாலத்தில் அதிகாலை இரண்டு மணியளவில் நிறைபோதையில் நின்றிருந்தபோது நான் எதற்காக அங்கே நிற்கிறேனென விசாரித்த காவல்துறை இன்ஸ்பெக்டருக்கு, ‘உலகில் ஐம்பது நாடுகளுக்கு மேல் சென்றிருக்கிறேன். எங்கேயும் என்னை ஏன் நிற்கிறாய், நீ இங்கே இந்த நெரத்தில் நிற்கக்கூடாதென்று கேட்டதுமில்லை, சொன்னதுமில்லை. இது என்னுடைய நாடு. நான் எந்த நேரத்தில் எங்கே நின்றால் யாருக்கென்ன?’ என கேள்விகேட்டவன் நான்.

2015இல் கொழும்பில் நின்றிருந்தபோது கவனித்தேன், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னான கொழும்புபோல் அது இருக்கவேயில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு அவசரம் பிடிக்கத் தொடங்குகிறது அனைவரிலும். வேலை செய்பவர், வேலைசெய்யாதவர், கடைத் தெருவுக்கு சாமான் வாங்க வந்தவர் என எந்த வித்தியாசமும் இல்லை. அனைத்து இலங்கையரும் அவசரப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எட்டு மணிக்கு மேல் இந்த அவசரம் இரட்டிப்பாகிவிடுகிறது.  தமிழர், சிங்களர், முஸ்லிம் எனவாயன்றி, மக்களாய் அனைவரிலும் அந்த அவசரம். பத்து மணியானால் பறக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ராக்ஸியா, ஓட்டோவா, அகப்பட்ட பஸ்ஸிலேயாவென எது வாகனத்திலும் அந்தப் பறப்பு அவர்கள் வீடுவரை தொடருகிறது. ஏன் இந்த அவதி? ஏன் இந்த அந்தரம்?

ஏறக்குறைய இந்தளவு அவதியே யாழ்ப்பாணத்திலும் இருந்தது. குண்டுவெடித்ததான அல்லது சண்டை தொடங்கப் போகிறதான நிலைமை எதுவுமில்லை. ஆனாலும் மக்கள் அவசரமாயே இருக்கிறார்கள். பயணத்தில், நின்று பேசுவதில், கடையில் சாமான் வாங்குவதிலென்று ஒரே அவசரம்தான். ஒரு அவசரம் நிலைமைக்குத் தக அடங்கியிருக்காமல் இன்னுமே தொடர்ந்துகொண்டிருக்கிறதெனில், அது அவர்களிடையே நீண்ட ஒரு முப்பது வரு~த்தில் பழக்கமாகிப்போயிருக்கிறது. அந்தப் பழக்கம் இயல்புநிலையடைய அதில் பாதிக்காலமாவது வேண்டாமா?

உள்நாட்டு யுத்தமொன்று இவையெல்லாம் செய்யும்.

அறுவடை முடியாதிருந்த காலமது. கம்பிவேலி வயலெங்கும் விளைச்சல் விவசாயிகளை ஏமாற்றியிருக்கவில்லை. ஆனால் தெருக்கானெங்கும் பசுமை கொழித்துக் கிடந்ததே, எப்படி? அவற்றை உண்டு பாலும் பயனும் தந்த பட்டி மாடுகளெங்கே போயின? வெளியெங்கும் புதராயிருந்தது. உண்ணாச்செடிகள் பெரும்பாலும் குறைந்திருந்த புதர்கள் அவை. அவற்றை மொட்டையடித்து உண்டு வளர்ந்து பயன் தந்த ஆடுகளுக்கும், மாடுகளுக்கும், எருமைகளுக்கும் என்னவாயிற்று?

எல்லாம் போயே போயிற்று.

வனங்கள் பசுந்தளிர்கள் குலுங்க விரிந்திருந்தன. பார்க்க கண்ணிரண்டும் போதாவே என்றிருந்தது. பிறகொரு சிந்தனையெழுந்து மனத்தை சுற்றிச் சுழற்றி தரையில் அடித்தது. ஆம், அவையெல்லாம் புதிய வனங்கள். முதுமரங்கள் பலவும் கீழே விழுந்து காய்ந்து கிடந்தன. பலமரங்களின் அடிக்கட்டைகள் மரங்களின் இருப்பழிந்த விதம்சொல்லி அழுதுகொண்டிருந்தன.  அதுவே புதிய வனம் பிறந்த கதையும் ஆயிற்று.
யுத்தம்… யுத்தமேதான் எல்லாவற்றினதும் காரணமாயிற்று.
யாழ்ப்பாணத்தில், சாவகச்சேரியில், கொடிகாமத்தில், பருத்தித்துறையில் இடிபாடுகள் மறைந்து புதியநிர்மாணங்கள் நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தன. முதல் பார்வையில் அது இலேசுவில் கண்ணுக்குப் புலப்பட்டுவிட சாத்தியமில்லை. ஆனால் கவனித்துப் பார்த்தால் தெரிகிறது நகரங்கள் அழுதுகொண்டிருந்த கோலம்.

சாவகச்சேரியில் தபால்நிலையவீதியில் நான்கைந்து வீடுகள் கூரைகள் சிதறி, சுவர்கள் சரிந்து n~ல் துளைத்த துளைகளோடு இருக்கின்றன. குடும்பங்கள் மேலைநாடுகளுக்கு ஓடித் தப்பியிருக்கலாம், ஓடியும் பத்து வரு~ங்கள் ஆகலாம். ஆயினும் இன்னும் அவை புனர்நிர்மாணம் பெறவேயில்லை. காணி உறுதி இருக்கிறது, நிலத்தை யார் கொண்டுபோகப் போகிறார்களென்ற நம்பிக்கையோ, அல்லது கொண்டுபோனால்தான கொண்டுபோகட்டுமேன், உயிர் தப்பியதே போதும் என்ற எண்ணமா, எதுவெனத் தெரியவில்லை, இடிந்த வீடுகள் இன்னும் வடியாச் சோகத்துடன் நின்றுகொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில், மத்திய கல்லூரிக்குப் பின்புறத்துக் குறுக்கு வீதிகளில் ஐந்தாறு வீடுகளும் அதே தோற்றத்தில். அதே யுத்தம் எழுதிய அதே விதி.
கரணம் தப்பினால் மரணம்!

நினைத்துப் பார்க்கிறேன், அந்த ஆசிரியை இப்போது உயிரோடு இருப்பாளாவென. தெரியவில்லை. ஆனால் தன்னை எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும்படி என்னை ஆக்கிவிட்டாளே?
00000


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி