தன் நிழலைத் தான் விமர்சித்தல்

 




தன் நிழலைத் தான் விமர்சித்தல்

மேகலை கதா’ குறித்த சில கருத்துக்கள்

-தேவகாந்தன்-

 

இன்றளவும் ஐந்தாம் ஆறாம் அலைகளென சர்வதேச அளவில் விரிந்துகொண்டிருக்கும் பெருந்தொற்றான கொவிட்- 19 காலத்துள் மூடுண்டு போனது 2020 மார்ச்சில் வெளிவந்த ‘மேகலை கதா’.

அதுபற்றி அதன் படைப்பாளியாய் எனக்கு நிறைந்த அக்கறைகள் உண்டு. ஒரு இருபதாண்டுக் காலத்துக்கும் மேலான கருச் சுமையின் எழுத்து வடிவமது. மேலும் எழுதும் காலத்திலும் நிறையச் சிந்திக்கவும் எழுதியதைத் திருத்தியும் மாற்றியும் எழுதியென நிறைந்த உழைப்பை நான் அதற்காய் செலவிட்டிருக்கிறேன். ஆயினும் சில நண்பர்களின் மேலெழுந்தவாரியான சில தொலைபேசி உரையாடலில் செய்யப்பட்ட அபிப்பிராயப் பகிர்வுகள் தவிர, மதிப்புரை விமர்சனமென வேறு வடிவங்களில் கருத்துக்கள் அபிப்பிராயங்களேதும் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை.

சூழ்நிலையை நான் புரிந்துகொள்கிறேன். எனினும் அதுபற்றிய மதிப்பீட்டினை அறிய என்னுள் அளப்பரிய ஆதங்கமுண்டு. அந்நூல் குறித்த மதிப்பீட்டினை எவ்வண்ணம், யாரிடமிருந்து நான் அறிதல் கூடும்? இப்போதைக்கு எத்தரப்பிலிருந்தும் சாத்தியமில்லையென்றே படுகிறது. சாதாரண வாசகர்களையல்ல, பிரதி காவியமாய் எழுந்துநிற்கிற அதன் பலமான கதவுகளைத் திறக்கும் சாதுர்யவான்களைத் தேடுவதிலும் அதேயளவு சிரமமுண்டு.

அதனால் அம் மதிப்பீட்டினை அறிவதற்கு என் பிரதியின் முதல் வாசகனாய்  நானே இருந்ததுபோல் ஒரு மதிப்பீட்டாளனாகவும் நான் ஆகிவிடவேண்டியதுதான் என்ற தீர்மானத்திற்கு இயல்பாகவே என்னால் வர முடிந்தது. ஆனாலும் அது மிகுந்த அவதானத்தில் செய்யப்படவேண்டிய முயற்சியென்பதை நான் அறிந்திருக்கிறேன்.   அதேநேரம் அதுவே பிரதியின் மூடியிருக்கும் காப்பியக் கபாடங்களைத் திறந்து உட்செல்லும் முனைப்பைப் பிறரிடத்தில் ஏற்படுத்தச் செய்யுமென்பதும் என் நம்பிக்கை.  வாசிப்பின் சில வழிகளையும் உபாயங்களையும் இவ்வுரைக்கட்டு முன்வைக்க முயலும். இத்தகு சமயங்களில் இது சரியானதாகவும், வித்தியாசமானதாக இருந்தலின் விசேஷத்தையும் இது கொண்டுவிடுகிறது.

1.

விழாவறை காதை, மலர்வனம்புக்க காதை, பாத்திரம்பெற்ற காதை, பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை, உதயகுமாரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதை, ஆபுத்திரனாடடைந்த காதை, ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை, வஞ்சி மாநகர்புக்க காதை, கச்சி மாநகர்புக்க காதை, ஆதிரை பிச்சையிட்ட காதை ஆகியவற்றிலிருந்து புத்த தத்துவ உபதேசங்களுக்கு நிகராக இடம்பெறும் காப்பியத்தின் முக்கிய கதைப் போக்கின் உயிரினை விரிக்கும் வரிகள் 1ஆம் 6ஆம் 9ஆம் 12ஆம் 16ஆம் 17ஆம் 22ஆம் 24ஆம் 25ஆம் 26ஆம் 27ஆம் அதிகாரங்களின் முன்பாக நாவலில் இடம்பெற்றிருப்பதால், சங்க சங்க மருவிய காலப் பாடல்களில் பரிச்சயமற்ற வாசகனை சிறிதாகவோ பெரிதாகவோ மலைக்கவைக்கும் வாய்ப்பை பனுவல் கொண்டுள்ளது. என்பதை மறுப்பதற்கில்லை. காப்பியத்தோடு பரிச்சயமுள்ள வாசகனை அது பிடிப்போடு தொடர்ந்து செல்ல உந்துகிற வேளையில், அதுவற்ற வாசகனை பின்வாங்கச்செய்யவே நேரும்.

2.

தேர்ந்தெடுத்த இவ்வரிகளின் வழியாக காப்பியத்தின் மூலக் கதை நகர்த்தப்பட்டிருப்பினும், காப்பியத்திலில்லாத பாத்திரங்களின் வழி, உதாரணமாக அஞ்சுகன், கோடன், மாதங்கி, சங்கமின்னாள்போன்ற பாத்திரங்களின் வழி, இலக்கியம் சமூகம் வரலாறு ஆகிய துறைகளில் நிகழ்ந்த ஆய்வுகளின் புதிய கண்டடைவுகளை பிரதி தயக்கமின்றி முன்வைத்துச் செல்வதை உள்நுழைந்தல்லாமல் தூரப் பார்வையில் கண்டுவிட முடியாது. தயங்கிநிற்றலின் பின்விளைவுகள் எவ்வகையிலும் பிரதியின் கருத்தாக்கங்களின் புரிதலைப் பாதிக்கவே செய்யும்.

3

காப்பியத்தின் முக்கியமான பாத்திரங்களான மணிமேகலை, மாதவி, சித்திராபதி, சுதமதி, அரசன் கிள்ளிவளவன், அவன் மனைவி சீர்த்தி மாதேவி, உதயகுமாரன்போன்றோரின் கதை நகர்ச்சிக்கு நிகராக சமூக, வரலாறுரீதியிலான காலத்துக்கியைந்தபுதுமைக் கருத்துக்களுடன் தனியான ஒரு கதை அதே களத்தில் புனைவுப் பாத்திரங்கள் வழியாகச் சொல்லப்பட்டுள்ளமையை இப் பிரதியின் விசேஷமாக நான் காண்கிறேன். அவ்வாறிருக்க காப்பிய மாந்தர் உயிரோட்டமாக இல்லையென்று வாயிலில் நின்று முடிவுசெய்து பிரதிக்கு நியாயம் செய்யாது போய்விடக்கூடாது. ‘மேகலை கதா’ சந்தித்திருக்கக்கூடிய விபத்துக்களில் ஒன்றாக இதையும் கருதமுடியும்.

மேலும் காப்பியப் பாத்திரங்கள் தம் முற்பிறப்பின் ஊழ்வழி இயங்கியபோது, புனைவுப் பாத்திரங்களே ஊழைக் கேள்வியாக்கும் வல்லபம்கொண்டு தம் கதையை இப் பிரதியில் தனியாக நகர்த்திச் சென்றுள்ளன.

4

‘மேகலை கதா’ என்ற தலைப்புக்கூட மணிபல்லவத்துத் தெய்வமான மணிமேகலையையே குறிப்பிடுகிறதென்பது பிரதியின் முதல் அத்தியாயத்திலேயே தெரிந்துவிடுகிறது.  காப்பியத்தில் இல்லாத அஞ்சுகனென்ற பாத்திரத்துடன் நாவல்ஆரம்பிப்பதுபோன்ற தோற்றம் இவ்வாறான முடிவை வாசகனொருவன் கொள்வதற்கு இலகுவான பாதையாகிவிடுகிறது. கதைசொல்லல் முறைகூட இக்  குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

 

5

இந்திர விழாக் காலத்தில் பல்சமய அறிஞர்களும் வாதுபுரியம் சபையில் நாகசேனன் பிரசன்னமாவது, வடநாட்டிலிருந்த தர்க்க தத்துவ மேன்மையின் ஊடாட்டம் அக் காலத்திலேயே தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டதென்பதை மறைமுகமாய்க் கூறுவதற்காகத்தான். ‘சிலப்பதிகாரம்’ தோன்றிய காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டளவென்று பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறியபோது சினந்தெழுந்த தமிழார்வம் இக் காரணத்தினாலேயே  இங்கே தொழிற்படவில்லையென யார் உறுதிசொல்ல முடியும்?

பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டு ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையிலமைந்ததுதான் மதுரையைக் கடல் கொள்வதும், காஞ்சி தனிப்பெரும் நகராய் விரிவுகொள்வதுமான செய்தி. அதை காப்பியமே குறிப்பாயன்றி எடுத்துரைக்கவே செய்கின்றதுதான். கடலோடிகளின் நடமாட்டமும், அவர்களுக்கு பரத்தையருடன் உண்டாகும் நேசமும் புத்தாய்வுகளின் அடிப்படையில் துணிந்து பனுவலில் முன்வைக்கப்பட்டவை.

இவை எண்ணப்படாமல் ‘மேகலை கதா’வை பௌத்த அறம் கூறவந்த காப்பியத்தின் வழிநின்றதாக பிழைபட எண்ணி பிரதியின் உள்ளடக்கத்தைக் கருதாமல் மறுவாசிப்பு உருவாக்கமென முடிவுகட்டிவிடக் கூடாதென்பதில் எனக்கு மிகுந்த அக்கறை உள்ளது.

பிரதியின் கதவுகள் மூடப்பட்டிருப்பின் அவற்றை வாசகன் தட்டித் திறக்கவேண்டும். அப்போதும் திறக்காவிடின் பலங்கொண்டு தள்ளவேண்டும். அப்போது அப் பலப் பிரயோகம் மந்திரக் கதவுகளை திருமறைக்காட்டு கோயிற் கதவங்களை தேவாரமூர்த்தியின் பாடல்போல் திறக்கவே செய்யும்.

 

6

மணிமேகலா தெய்வத்தையே அணங்காக்கி அதன் தெய்வீகத் தன்மைக்கு கலையியல் வழியிலும் அறிவியல்வழியிலும் அழகியல் மேவ காரணம் கண்டது ‘மேகலை கதா’. மட்டுமன்றி அமுதசுரபி மூழ்கியிருந்த கோமுகிப் பொய்கையைப் பார்த்து ‘உணவு உள்ளே இருக்கிறது; பசி வெளியே இருக்கிறது’ எனக் கூறவைக்க, புனைவுப் பாத்திரமான அஞ்சுகனை ஏவிவிடப்பட்டபோதும்,  காப்பியக் கதையை ‘மேகலை கதா’ உருச்சிதைக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

பிரதியில் கலை வெளிப்பாடு மிக்க அவதானமாகச் செய்யப்ப்ட்டது. காப்பியத்திற்கு அநியாயம் செய்யாமல் புதுமையை அதில் இழையோடவிட்டமை அதன் சாதனையென்றே கருதத்தக்கது. தத்துவ விசாரம் செய்யப்படுவதும், அறிவார்த்;த விசாரணைகள் செய்யப்படுவதுமான பல இடங்கள் மொழியின் செறிவான வீச்சுடன் கையாளப்பட்டுள்ளதை பிரதியின் பத்தாம் வாசிப்பிலும் சுவைக்கமுடியும்.

தன் வழிக் கதையை உரைக்க அது தேர்ந்துகொண்ட நடையும் முக்கியமானது. அது என்னால் எந்த படைப்பிலும் கையாளப்படாத ஒரு காவிய மொழி. பௌத்த தத்துவ விளக்கங்களும் தர்க்க வாதமும்கூட தேர்ந்த ஒரு மொழியிலேயே பிரதியில் நடத்தப்பெற்றனவென்பது, பளிக்கறையைச் சுற்றிவந்த உதயகுமாரனது பார்வையால் கண்டுகொள்ளவே முடியாது. அதற்கு பிரதியினுள் வாசகன் நுழைய வேண்டும். துர்ப்பாக்கியமாக காப்பிய கதைகளின் தந்திரங்களிலும் மாயங்களிலும் ஆழ மனம்செலுத்தும் வாசகர்களுக்கு இலக்கியவுலகிலுள்ள உணர்வுத் தட்டுப்பாடு பெரும்பாலும் இடம்பெற்றிருப்பதை இந்தவிடத்தில் யோசித்து அமைதியடையலாம்.

 

7

மணிமேகலை காப்பியத்தைப் படிக்கும்போது கதையோட்டத்தின் தொடர்ச்சி அறுபடாதிருப்பதாக அதன் எழில் நலன்கள் தோன்றச் செய்துவிடுகின்றன. உண்மையில் காப்பியத்தின் சில இடங்களில் விடுபடுதல்களும், தெளிவற்ற விவரணைகளும் இருப்பதை அதை உரைநடையில் எழுத முனையும் படைப்பாளி எதிர்கொள்ள நேர்கிறது என்ற உண்மையை இங்கே பகிர்வது நல்லது. உதாரணமாக பீலிவளை கதை கால மயக்கத்தை ஏற்படுத்துகிறது. முற்பிறவியின் கர்ம பலன்கள் இப் பிறப்பில் வந்தடைகின்றனவென்ற தத்துவத்தை ஊன்றிச் சொல்லும் கருத்திருந்த சாத்தனாருக்கு இந்த கால மயக்கமான கதைக் கோர்ப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. அவ்வாறில்லையேல் அதன் பதிப்பாசிரியர்மீது, அவரால் அதைத் தவிர்த்திருக்க முடியாத நிலை இருந்திருந்தாலும், அவரின் பதிப்பு முயற்சி தமிழின் மகத்தான காப்பியமொன்றை இற்றைத்; தலைமுறைக்கு மீட்டுத்தந்த அருஞ்செயலை மனங்கொண்டாலும், குறையாகச் சுமத்தப்படுவது தவிர வேறுவழி இல்லையென்பதை தயக்கமாயெனினும் இங்கே நான் சொல்லவேவேண்டும்.

‘சிலப்பதிகாரத்துக்கு மூத்ததாகக் கூறப்பட்டபோதிலும் ஆழ்ந்து படித்தால் சிலப்பதிகாரத்தை அறிந்திராத வாசகர்களுக்கு இக்காப்பியம் எவ்வித பொருளையும் தரமுடியாது’ எனவும் ‘ (தமிழிலக்கிய வரலாறு, பேரா. தெ.பொ.மீ., பக்: 146), ‘துரதிர்ஷ்டவசமாக காப்பியத்தின் முடிவுப் பகுதி காணப்படவில்லை’ (மேற்படி நூல், பக்: 148) எனவும் கூறப்படும் கருத்துக்களும் இவ் விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.

‘மணிமேகலை வெண்பா’ வாசித்த காலத்திலிருந்து தேடித் தொடர்ந்த மணிமேகலைபற்றிய வாசிப்பும், கடந்த சில ஆண்டுகளாக மணிமேகலை காப்பியத்தினுள்ளேயே மூழ்கியிருந்ததும் எனக்கு உ.வே.சா.வின் பதிப்பை எடைபோடும் தகதியைத் தந்தனவெனச் சொல்ல முடியாவிட்டாலும், என் எழுத்தின் வழியில் இவ் விடுபடுதல்களைப் புரிய முடிவதால் குறைந்தபட்சம் அச்சுப் பதிப்பிலுள்ள குறையாக பதிப்பகத்திலாவது இக் குறையை நான் சேர்ந்கவே செய்வேன்.

ஆக, ‘மேகலை கதா’வின் என் மதிப்பீட்டில் முக்கியமான அம்சம் இவ்விடுபடுதலை பிரதி தன் புனைவினால் நிரவியிருக்கிறது என்பதாகும்.

***

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி