குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில் 2

 

1

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின்

மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவு முளவோ நீயறியும் பூவே.

                                        -இறையனார்

 

‘பூந்துகள் ஆய்ந்துண்ணும் தும்பியே, உண்மை கூறு; இவ்வரிவை கூந்தலிலும்   மணமுள்ள மலரை நீ எங்கேனும் அறிந்ததுண்டோ?’ எனச் சுருக்கமாக இப்பாடலின் அர்த்தத்தை விளக்கலாம்.

புணர்ச்சியின் உவகை வகையானதும், குறிஞ்சித் திணைக்கானதுமான இக் குறுந்தொகையின் இப் பாடலுக்கு பின்னால் ஒரு கதையும் பிறந்தது பிழையாக.

அதுபற்றியே இதில் முதன்மையாக நோக்கப்படவுள்ளது.

குறுந்தொகை பாண்பாடற் தொகுப்பில் இரண்டாவதாய் இடம்பெற்றிருகக்கிற பாடலிது. இறையனார் பாடியதாகச் சொல்லப்பட்டுள்ளது.

பாடலென்னவோ சிறந்த பாடலாகத்தான் தோன்றுகிறது. ஆயினும் இந்த சிறப்பு என்கிற அடைக்கு மேலான புகழை இது பெற்றிருப்பது அதிசயம்.

இப் பாடலின் தோற்றத்தின் பின்னாலுள்ள கதை, இதை இதன் தகுதிக்கும் மேலான தளத்துக்கு உயர்த்தியிருக்கிறதென துணிந்து சொல்லமுடியும்.

அக் கதையினை விமர்சனரீதியாக அணுகும்போது தமிழார்வலர் சிலரின் நம்பிக்கையையேனும் அது தகர்க்குமென்பது எதிர்பார்க்கக்கூடியது.

அத்தனைக்கு பாண்டிய மன்னன், அவன் மனைவி, தருமி, இறைவன், புலவர் நக்கீரன் ஆகிய பாத்திரங்களூடாக திருவிளையாடல் சினிமா (1965) அக் கதையையும் ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடலையும் வெகு ஜனரஞ்சகப்படுத்தியுள்ளது.

நடிகர்களின் திறமை, வர்ணப் படமான தயாரிப்பு ஆகியன ஒருபக்கமாகவும், ஏ.பி.நாகராஜனின் வசனம் இன்னொரு பக்கமாகவும் இருந்ததில் இந்த வெகுஜனரீதியான பரம்பல் சாத்தியமாகியுள்ளது.

எந்தவொரு சங்கப் பாடலுக்கும் கிடைத்திராத பேறு இது.

திருவிளையாடல் சினிமா வெளியாவதற்கு முன்பாகவே நான் கொங்குதேர் வாழ்க்கை பாடலை, பேராசிரியர் மு.வரதராசனாரின் இப் பாடல் குறித்த சீரிய ஆய்வொன்று ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற தலைப்பில் தனி நூலாக வெளிவந்தபோது படித்திருக்கிறேன்.

அப்போதும் தருமியல்ல, புலவர் நக்கீரனின் அச்சமற்ற வாதமல்ல, இப் பிரதி கிளர்த்தியிருந்த வினாவே என்னுள் முனைப்பாய் நின்றிருந்தது.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

தான் அதுவரை முகர்ந்திராத வாசமொன்று காற்றில் மிதப்பதை உணரும் அரசனான சம்பகப் பாண்டியன், அது தன் மனைவியின் கூந்தலில் வருகிறதோ, அல்;லது சம்பக வனத்திலிருந்து வருகிறதோவென தடுமாறுகிறான்.

பின் தன் மனைவியின் கூந்தலிலிருந்தென தெளிந்தாலும், அது இயற்கையானதா செயற்கையானதாவென ஐயமெழப்பெறுகிறான்.

அதனால் தனதந்த ஐயத்தைத் தீர்க்கும் பாடலைப் புனைந்துவரும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக அளிக்கப்படுமென பிரசித்தம் பண்ணச் செய்கிறான்.

தருமிக்கு இறைவன்மூலம் அவ்வையம் தீர்க்கும் பாடல் கிடைக்க, பாடலுடன் சங்கப் பலவர் அவைக்கு அவன் வருகிறான்.

தருமிக்கு பரிசு கிடைக்கவிருக்கும் வேளையில், பாடலில் குற்றம் சொல்கிறார் புலவர் நக்கீரன்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் வாசமில்லையென்பது அவர் வாதம்.

அது குறித்து இறைவனுக்கும் நக்கீரனுக்கும் வாதம் நடைபெறுகிறது.

இறைவனின் வாதத்தை ஏற்கமறுக்கும் நக்கீரன்மேல் நெற்றிக் கண்ணைத் திறக்கிறார் இறைவன்.

பொற்றாமரைக் குளத்தில் போய்விழுந்து வெப்புநோயில் வருந்துகிறார் புலவர் நக்கீரன்.

பிறகு நக்கீரனை மன்னித்து அவரை பொற்றாமரைக் குளத்திலிருந்து இறைவன் மீட்பதாகக் கதை.

இதன் விரிவான கதை திருவிளையாடற் புராணத்திலுண்டு.

புராணத்தில் இக் கதை மூன்று கதைகளாக மூன்று படலங்களில் வரும்.

பரஞ்சோதி முனிவரின் இப் புராணக் கதையையும் மிகவுயர்ந்தவோர் இலக்கிய தளத்தில் வைத்து வசனநடையில் எழுதியிருப்பார் ஆறுமுக நாவலர்.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு சற்று மேலாகவுள்ள ஒரு காலப் பகுதியில் தமிழை இவ்வளவு சிறப்பான வசனநடையில் வெளிப்படுத்திய ‘வசனநடை கைவந்த வல்லாள’ராம் நாவலரை மரியாதையோடு வசன புராண படனத்தின் வேளை எண்ணிக்கொண்டேன்.

கதையை இங்கே நிறுத்திவிட்டு பேராசிரியர் மு.வ. கிளர்த்தும் பாடல்பற்றிய பிரச்னைக்கு வரலாம்.

பெண்களின் கூந்தலுக்கிருப்பது இயற்கை மணமா செயற்கை மணமாவென்ற சம்பக பாண்டியனின் ஐயத்துக்கு, தேர்ந்து தேனுண்ணும் தும்பியே, இம் மங்கையின் கூந்தலிலுள்ள வாசம்போல் எங்கேனும் நீ கண்டதுண்டோ?வென கேள்வியாய் முடிவுறும் பாடல் எவ்வாறு சரியான பதிலாக அமையமுடியும்?

பாண்டியனின் ஐயத்தைத் தீர்த்தானென தருமி பொற்கிழி பரிசாகப் பெற்றானெனில் பாடலின் அர்த்தம் கதையோடு மாறுகொள்வதை சங்கப் புலவரவையே கருதாதிருந்ததா?

பேராசிரியர் மு.வ.வின் கேள்வி இவைகளாகவே இருந்தன.

1965க்குப் பின்னால் மு.வ.வின் நூல் கிளர்த்திய கேள்விபோல் எப் புலமையாளரும் இம் முரண் குறித்து கேள்வி கிளர்த்தியிருக்கவில்லை என்றே தெரிகிறது.

முரண் மறதியில்போய் விழுந்துவிட, புராணக் கதையால் பாடல் அனைவர் மனத்திலும் நிறைந்ததாக ஆயிற்று.

ஆயிரம் பொற்காசுகள் பரிசுபெற்ற பாடலென்பதால் அப்படியாயற்றோ?

இருக்கலாம்தான்.

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி