குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில்

 

  

குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும்

அர்த்தங்களின் பேரெழில்

-தேவகாந்தன்

 


சங்க இலக்கியத்தின் மிகப்பெரும் சிறப்பும் பலமும் அதன் சுருங்கச் சொல்லும் திறனில் அடங்கியுள்ளதென்பது, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் தன் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (2019) நூலில் ஆழமாக வற்புறுத்தப்படும் அம்சமாகும்.

அவர் வார்த்தைகளை அடியளவுப்படி எடுத்தாலுமே 3-6 அடிகளையுடைய ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அடுத்ததாக நாலடிச் சீறெல்;லையையும் எட்டடி பேரெல்லையையும் கொண்டதாய் குறுகத் தறித்த குறளாக விளங்குகின்றன குறுந்தொகைத் தொகுப்பிலுள்ள பாண்பாட்டுக்கள்.

அத் தொகுப்பில் பெருந்தேவனாரின்; கடவுள் வாழ்த்து உட்பட  401 பாக்கள் உள்ளன.

இத் தொகை நூல் அரசன் பூரிக்கோ என்பான் காலத்தில் புலவர் பூரிக்கோவால் தொகுக்கப்பட்டது என்பர். இதன் 381  பாக்களுக்கு பேராசிரியர் உரையெழுதினாரென்றும், மீதி 20 பாக்களுக்கு நச்சிரினார்க்கினியர் உரை எழுதினாரென்றும் கூறப்படுகிறது. அவை இப்போது கிடைக்கப்பபெற்றில என்றும் அறிகிறோம்.

இதற்கான திணைக் குறிப்பு உரைக் குறிப்புக்கள் உட்பட்ட முதல் பதிப்பினை 1915இல் திருக்கண்ணபுரத் தலத்தான் திருமாளிகை சௌரிப்பெருமாள் அரங்கன் என்பார் மேற்கொண்டிருக்கிறார். உ.வெ.சா. பதிப்பு 1937இல் வெளிவந்திருக்கிறது.

புலமையாளர் வட்டத்திலிருந்து இதற்கான ஆய்வுகளும் ரசனைக் குறிப்புகளும் நிறையவே வெளிவந்திருக்கின்றன.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பாலைக் கலி குறித்து நானெழுதிய கட்டுரைத் தொடருக்குப் பின்னால், என் கவனக் குவிப்பு சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலுமே இருந்தது. கம்பராமாயணத்தைவிட இவற்றை நான் படன காவியங்களாய்த் தேர்ந்ததற்கு எவ்வாறு காரணமற்றிருந்ததோ, அதுபோலவே இப்பொழுது குறுந்தொகையை வந்து சேர்ந்ததற்கும் குறிப்பிடும்படியான காரணமெதுவுமில்லை.

கல்லூரி உயர்தரத்துக்கான பாடத் திட்டத்தில் திருக்குறளின் 40 அதிகாரங்கள் இடம்பெற்றிருந்தமையும் அவற்றில் நான் கொண்ட ரசனையும் என் படிப்பில் குறிப்பாகிய குறட்பாக்களுக்கு ரசனைக் குறிப்பு எழுத வைத்தன. அவையும் ‘நுண்பொருள்: அறம் பொருள் காமம்’ என்ற நூலாய் (2019) தொகுப்பாயின. அதுபோல மணிமேகலைக் காவியத்தின் ஏதோவோர் ஈர்ப்பு ‘மேகலை கதா’ நாவலை (2020) எழுதவைத்தது.

உரையாசிரியர்கள் குறிப்பாக புலியூர்க் கேசிகன் உதவியின்றி எனது பாடத்திட்டத்திற்கான நன்னூல் இலக்கணத்தின் படிப்பினால் மட்டும் பழம்பெரும் காப்பியங்களையும் தொகை நூல்களையும் அனுபவித்திருக்க முடியாதென்பதை திட்டமாய் இந்த இடத்தில் குறிப்பது அவசியம். அப்போதும் எனது பொருள்கோடலின் ஊடாகவே அந் நூல்களை எழுதினேன்.

இப்போதும் குறுந்தொகையில் என் ரசனையில் மேம்படத் தெரிந்த பாக்களுக்கு, இதற்கான ஒரு நடையைத் தேர்ந்து என் ரசனையை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்; பிழையெனின் சுட்டிக்காட்டுங்கள். சரியெனில் திருந்துவேன்; பிழையெனில் வாதிடுவேன்.

நன்றி.

-       தேவகாந்தன்

மார்கழி 29, 2023

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி