தேவகாந்தனின் 'கலாபன் கதை' சஞ்சயன் (முகநூல் பதிவிலிருந்து)


எங்கள் பால்யக்காலத்தில் கப்பலுக்கு வேலைக்குச் சென்று ஊர் திரும்பியவர்களை வாய்பிளந்து நின்று பார்த்திருக்கிறோம். நினைத்தாலே இனிக்கும் திரைப்பட கமல், ரஜனி போன்றிருப்பார்கள். தொப்பி, கூலிங்கிளாஸ், நாகரீக டெனிம் உடைகள், வாசனைத் திரவியங்கள் தொடக்கம் பாதணிவரை, வெளிநாட்டில் வாங்கியதாக இருக்கும். நிட்சயமாக உள்ளாடையும்.
அவர்கள் மோட்டார் சைக்கில் வைத்திருப்பார்கள். கலர் டீ.வி, வீடியோ டெக், டேப் ரெக்கார்டர் அவர்கள் வீட்டில் இருக்கும். பணம் தாராளமாகப் புரளும். அவர்கள் ஊரில் நிற்கும் காலமானது திருவிழாக்காலத்தில் கடவுக்குக் கிடைக்கும் விசேடமான உற்சவம் போன்றது. முடிந்த திருவிழாபோல் ஓரிரண்டு வாரத்தில் இவர்கள் மீண்டும் கடலுக்குள் புகுந்துவிடுவார்கள்.
இப்படியான கடலோகளைப்பற்றி சிறுகதைகள் வாசித்திருந்தாலும் நேற்றுவரை, ஒரு நாவல் வாசித்ததில்லை.
தேவகாந்தனின் ‘கலாபன் கதை’ ஒரு யாழ்ப்பாணத்துக் கடலோடியின் கதை. மிக அற்புதமான நாவல். மிகத் தேர்ந்த கதைசொல்லியின் மொழிலாவகத்தோடு சுவராசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
கடலனுபவம் அற்ற, திருமணமான, ஆனால் வருமானமில்லாத ஒருவர், திரைகடல் ஓடித் திரவியம் தேடப்புறப்பட்டு வாழ்வின் முக்கிய பகுதியை கடலில் கரைக்கிறார். நாவலின் முடிவு எமது போராட்ட வரலாற்றில் ஆரம்பகாலத்தில் நடந்த ஒரு சம்பவத்துடன் முடிகிறது.
சிக்கலான கதையைக்கொண்ட நாவல் அல்ல இது. நீண்ட நேரமாக ஒரு நேர்வீதியில் பயணித்து, திடீர் என்று ஒரு திருப்பத்தில் எதிர்பார விபத்தை சந்திப்பதுபோலிருக்கிறது, வாசிப்பு அனுபவம். நாவலும் அப்படித்தான் முடிகிறது.
நாவலின் மையக்கதையைவிட நாவலுக்குள் கோர்த்துவிடப்பட்டிருக்கும் கடலோடிகளின் வாழ்க்கையைத்தான் மிகவும் ரசித்தேன். கடல், கப்பற்கட்டுமானம், மாலுமிகளின், கடலோடிகளின் மூட நம்பிக்கைகள், உளவியல், துறைமுகங்கள், சமுத்திரங்களின் தன்மைகள், கடலாபத்துக்கள், விபத்துக்கள் என்று நாவல் முழுவதும் மிக மிக நுணுக்கமான விபரிப்புக்கள் ஊடாக உப்புக்காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.
கடலோடிகளின் காமம் உலகறிந்த விடயம். அதுபற்றி மிக அழகாகவும் ஆழமாகவும் கிளைக்கதைகளின் ஊடாகச் சொல்லப்படுகிறது. கப்பலுக்குச் செல்வதற்கு முதல் நாள் இரவு, காமத்தின் காரணமாக தூங்காமலே விடிகிறது கலாபனுக்கும் மனைவிக்கும். ஒரிரு வருடத்தின் பின், அதே வீட்டில், கப்பலுக்குச் செல்வதற்கு முன்னிரவு மனப்பிளவின் காரணமாக காமம் அவனுக்கு மறுக்கப்படுகிறது. இந்த இரண்டுக்கும் இடையில்தான் கத்தியில் நடப்பதுபோல அந்தக் குடும்பம் தனது வாழ்கையை பன்னிரெண்டு வருடங்களாக நடத்திக்கொண்டே போகிறது.
காமம் வெறும் தசையுணர்வுதான். ஆனால் அது கடலோடிகளுக்கு ஒவ்வொரு துறைமுகத்திலும் பல பல அனுபவங்களைக் கொடுக்கிறது.
கலாபனுக்குக் கிடைக்கும் பாலியல்தொழிலாளர்களுடனான அனுபவங்கள் சுவராசியமானவை. சிலர் ஓரிரு நிமிடங்களே வந்துபோகிறார்கள். சிலர் அவனை மீள மீளச் சந்திக்கிறார்கள். துறைமுகங்களில் கப்பல் தரித்து நிற்கும்போது அவனுடன் இணைந்து வாரக் கணக்கில் வாழ்கிறார்கள். பம்பாயில் ஒரே ஒரு நாள் சந்தித்த தமிழ்நாட்டுப் பாலில்யற்தொழிலாளி ஒருவரின் கண்ணீரைக் கண்டு, அவரை, பொலீசுக்குப் பெரும் பணம்கொடுத்து விடுவித்து, வீட்டுக்கு அனுப்புதல் தொடங்கி, மிக நெருக்கமாகப் பல ஆண்டுகள் பழகும் ஆங்கிலோ இந்தியப் பெண் பாலியற்தொழிலாளி, அவனை 1983ஆம் ஆண்டு சிங்களக் காடையர்களிடம் இருந்து காப்பாற்றும் சிங்களப் பாலியற்தொழிலாளி என்று பல கதைகள் உண்டு. அவற்றின் உளவியலும், வாழ்வின் வலியும், கலாபனின் மனத்தைப்பற்றியும், மாலுமிவாழ்க்கைபற்றியும் நாம் நாட்கணக்கில் பேசலாம்.
கொலம்பியாவில் அவன் சந்திக்கும் பாலியற்தொழிலாளி, அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு, அவளது குழந்தை தூங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மதுவுண்டபடி பேசிக்கொண்டிருக்கும்போது அவள் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்இன் நூல்கள்பற்றி உரையாடத்தொடங்குகிறாள். உடலுறவின்றி முடிந்துபோகிறது அந்த இரவு. பெண்ணின் அருகாமை காமத்தில்தான் முடியவேண்டுமென்பதில்லையல்லவா? பெண்ணின் வாசனை, அருகாமை, நெகிழ்ச்சி, அன்பு, அரவணைப்பு இவைதானே ஆண்களை காலாகாலமாக பெண்ணை நோக்கி நகர்த்திக்கொண்டே இருக்கின்றன. கலாபனும் அப்படித்தான்.
கடல், கப்பல்கள், கடலோடித்தொழில், துறைமுகங்கள், மாலுமி வாழ்க்கை, கப்பற் கட்டுமானம், துறைமுகங்கள், நகரங்கள் போன்ற துறைகளில் பெரும் அறிவு அல்லது அனுபவம் இன்றி இப்படியானதொரு நாவலை கேள்விஞானத்தினால் மட்டும் எழுதமுடியுமா என்ற கேள்வி எனக்கிருக்கிறது. நாவல் முழுவதும் துறைசார் நுணுக்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை ரசிக்கத்தக்க வகையில் கதையுடன் பிசைந்திருக்கிறார், தேவகாந்தன்.
இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது:
“எந்தவொரு பொருளுமே தன்னைத் தங்கவைக்க ஒரு புள்ளியில் நிலைகொள்ளும் ஆற்றல் கொண்டதாகவே இருக்கும். கப்பல் ஒரு மனிதனைப் போல. அதற்கும் முதுகுத் தண்டு உண்டு. விலா எலும்புகள் உள. மனிதனது நிலைப்பின் தளம் எது? எலும்புக்கூடு என்று சொல்லலாமா? ஆம். அதுவேதான். அதுபோலத்தான் கப்பலும். அது நீரில் பயணப்படக் கட்டப்பட்டது. சொல்லப்போனால் அது கடலின் தன்மை அறிந்து அதன் விசித்திரங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் திறன் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் வாழ்க்கையும் ஏறக்குறைய இதுபோலத்தான். எதுவும் சாய்ந்துவிடலாம். ஆனால் கவிழ்ந்துவிடாது. மனித மனத்தின் அழுகையை அவலத்தைத் தாங்கி நிலைபேறடைய உலகில் ஏதோ ஒன்று இருக்கவே செய்யும். அதற்கான தேடல்தான் அவசியம்”
வாழ்வின் வலிமிகுந்த தருணங்களின்போதெல்லாம், வழிகாட்டக்கூடிய வாசகங்கள் இவை. இதை வாசித்தபின் எனக்குள்ளும் ஒரு சிறு பொறி தட்டுப்பட்டதுபோன்றுணர்ந்தேன். ஒரு நாவல் எல்லா இடங்களிலும் மகத்தானதாக இருக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. இப்படி ஓரிரு வரிகள் வாசகனுக்கு வழிகாட்டிகளாக இருந்தாலே போதும் அவை மகத்தானவையாகிவிடுகின்றன.
நாவலின் இறுதி அத்தியாயம் என்னை 1984-1985 காலத்திற்கு அழைத்துப்போனது. எம்மவர்களால் மின்கம்பங்களில் துரோகிப் பதாதைகளுடன் நெற்றிப்பொட்டில் ஓட்டையுடன் சரிந்து கிடந்த உளநலமற்றவர்கள், கடத்தப்பட்ட தமது வானங்களினால் தனது வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், பணத்துக்காக வெருட்டப்பட்டவர்கள், கப்பம் செலுத்தியவர்கள், பெரும்பணம்செலுத்தி குடும்ப உறவுகளை மீட்டெடுத்தவர்கள், பணமில்லா காரணத்தால் உறவுகளை இயங்கங்களுக்குக் கொடுத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று அனைத்தையும் நினைவூட்டும் முடிவே கலாபனுக்கும் கிடைக்கிறது.
முன்னுரையில், நாவலின் கருவானது தனது நண்பர் ஒருவரது உண்மைக் கதை என்னும் தேவகாந்தன் பத்து நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள், பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பல விருதுகளும் பெற்றவர். இப்போது கனடா, டொராண்டோ நகரத்தில் வாழ்கிறார் என்று அறியக்கிடைத்தது. தேவகாந்தனின் கனவுச்சிறை, கலிங்கு ஆகிய நால்களும் கையில் இருக்கின்றன. முதலில் கலாபனின் கதையை நான் எனக்குள் ஊற விடவேண்டும்.

Comments

Popular posts from this blog

வாசிப்பின் சுகம்: 2

லவ் இன் த ரைம் ஒஃப் கொரோனா

மேகலை கதாபற்றி...