யதார்த்தங்களின் சிறை - எஸ்.வாசன்

(கனவுச் சிறை நாவல் பற்றி, 10 அக்டோபர் 2015 லண்டனில் நடைபெற்ற விம்பத்தின் 3 நாவல்கள் அறிமுக உரையாடல் அமர்வில் திரு எஸ்.வாசன் வாசித்த கட்டுரை.)

ஈழ புகலிட புனைகதை இலக்கியமானது இன்று சிக்கல்களும் சவால்களும் நிறைந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பலத்த வீச்சுடனும் செறிவுடனும் நடைபயின்ற இப் புனைகதை மரபானது இன்று தன் அடையாளத்தையும் தனித்துவத்தையும் இழந்து தடுமாற்றத்துடன் பயணிக்கும் அதேவேளை, மக்கள் விரோத அரசியலிலிருந்து உருவாகிய மலிவான கழிசடை இலக்கியங்கள் அதிக அங்கீகாரங்களை பெறுவதும் அதிகரித்து வருகின்றது. இதற்கும் அப்பால் போரும் அது தந்த நெருக்கடிகளும் அதிகரித்திருந்த வேளையில், மரணங்கள் மலிந்திருந்த ஒரு பூமியிலிருந்து மரணத்துள் வாழ்வோம் என முழக்கமிட்ட படைப்பாளிகள் நிறைந்த சமூகத்திலிருந்து ஒரு சிறிய முப்பது வருட இடைவெளியின் பின் படைப்புக்கள் யாவும் ‘துன்பங்களை பாடுதல்’ என்ற வரையறைக்குள் சட்டகப்படுத்தப்பட்டு வெளிவருவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. காலமும் சூழலும் எமக்கு உவப்பில்லாத இந்த யதார்த்தமான சூழ்நிலையில் தேவகாந்தனின் ‘கனவுச் சிறை’ என்னும் ஒரு நாவல் எமக்கு அறிமுகமாகின்றது.

கனவுச் சிறை - இது ஒரு மகாநாவல். பல நெடுங்கதைகளையும் குறுங்கதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பல கதைகளின் தொகுப்புகளாக தொள்ளாயிரத்திற்கும் அதிகமான பக்கங்களில் ஐந்து பாகங்களாக இது வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத்தீவில் இன முரண்பாடுகளிடையே உக்கிரங்கொண்டெழுந்த முப்பது வருட காலப் போரின் ஒரு காலப் பகுதியாகிய 1981இற்கும் 2001இற்கும் இடையில் நிகழ்ந்த இருபரு வருட கால சம்பவங்களின் பின்னணியாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது.

‘இது கனவுகளின் சிறைக்குள்ளிருந்தவர்களின் போரினால் அழிவையும் அவலங்களையும் கண்ட கனவே இல்லாத சாமான்ய மனிதர்களின் கதை.’ இது தேவகாந்தன் தனதுரையில் இந்நூல்பற்றி கூறும் விளக்கம்.
உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாக மட்டுமே தெரிவது இலங்கைத் தீவு. இச்சிறிய தீவுடன் இணைந்துள்ளன சப்த தீவுகள் என்று அழைக்கப்படும் ஏழு சின்னஞ்சிறிய தீவுகள். அதில் ஒன்றுதான் நயினாதீவு. மணிமேகலைக் காப்பியத்தில் மணிபல்லவம் என்றும், வரலாற்று ஏடுகளில் நாகதீபம் என்றும் குறிப்பிடப்படும் சுமார் மூன்று சதுர மைல் பரப்பளவையும் ஐயாயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகையையும் கொண்ட ஒரு சிறிய தீவு. இத் தீவின்மீது கவிழ்ந்த போரும், அப்போரில் சிக்கி அதிலிருந்து தப்பியோடும் முகமாக இப் பூமிப் பந்தெங்கும் சிதறிப்போன மக்களின் வாழ்வும் இந்நாவலின் மையக் கரு.

கதையின் நாயகி பதினெட்டு வயது நிரம்பிய ராஜி என்கிற ராஜலட்சுமி. கொழும்பிலிருந்து வந்த நேர்முகப் பரீட்சைக்கான கடிதம் கையில் கிடைக்கப்பெற்றதும், அவள் காலிமுகத்திடல் கடற்கரையில் கால் நனைக்கும் நவீன வாழ்வின் கனவுகளில் மிதப்பதுடன் இந்நாவல் ஆரம்பமாகின்றது. இது அன்றைய எண்பதுகளின் ஆரம்பத்தில் இன முரண்பாடு உக்கிரம் கொள்வதற்கு முந்திய காலப்பகுதியில் வாழ்ந்த அனைத்து இன சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் பெருநகரங்கள் மீதான அவர்களது ஏக்கங்களையும் நவீன வாழ்வின் மீது மையல்கொண்ட மனநிலையையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே எரிக்கப்பட்டு சாம்பல் மேடாய் காட்சி தரும் யாழ் நூல்நிலையமும், அதன் தீ, கரும்புகையாய் யாழ்நகர்மீது படிந்து இருப்பதுமான பின்னணி ஏற்கனவே உருவாகி விட்டிருந்த பகைமைகளின் உருவகமாய் மிகவும் தத்ரூபமாக ஆசிரியரினால் வெளிக்காட்டப்படுகின்றது. அதன் பின் ராஜி எதிர்கொள்ளுகின்ற ஏமாற்றங்களும் தோல்விகளும் சவால்களும் அதை எதிர்த்து அவள் மேற்கொள்ளும் போராட்டங்களும் அலைவுகளுமே இந்நாவலின் பல கதைகளில் ஒரு பெருங்கதை.

ராஜி மிகவும் வசீகரமானவள். படித்தவள். பிடிவாதக்காரி. வாழ்க்கை முழுவதும் அவள் அதிகம் அலைக்கழிக்கப்படுகின்றாள். அவள் நாவல் முழுவதும் முடிவற்றதும் தொடர்பற்றதுமான பயணங்களை மேற்கொண்டவண்ணம் இருக்கின்றாள். சூழல் அவளைக் கொடுமைப்படுத்துகின்றது. காலந்தோறும் அவள் மிகப் பெரிய தீர்மானங்களை எடுக்க நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றாள். அவள் தீர்மானங்கள் சிலவேளகளில் தீர்க்கமானவையாக இருக்கின்றன. பலவேளைகளில் அபத்தமானவையாகத் தெரிகின்றன. ஏற்கனவே அறிமுகமான ஒரு நண்பனுடன் அவள் ஒரு நேர்முகத் தேர்விற்காக கொழும்பு சென்று, ஒரே ஒருநாள் ஒரு அறையில் தங்கியிருந்தமைக்காக சமூகம் அவளைப் பழித்தபோது, அவள் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தன்னைத்தானே வீட்டிற்குள் முடக்கிக் கொள்கிறாள். அதன் பின் அதே காரணமாக அவள் திருமணம் தடைப்பட்டபோது வெகுண்டெழுந்து, அந்தப் பழிச் சொல்லிற்குக் காரணமாக இருந்தவனையே கைப்பிடிக்க தீர்மானிக்கிறாள்.

ஆயுதப் பயிற்சிக்காக தமிழகம் செல்லும் அவன் அழைத்ததும் உடனேயே தமிழகம் விரையும் அவள், அவன் இப்போது போராளி அல்ல என்று அறிந்ததும் அவனைக் கைவிட்டு விலகிப் போகிறாள். அவன் ஜெர்மனி சென்று அங்கு வரும்படி பலதடவை வற்புறுத்திக் கேட்டும், அந்த வசதியானதும் வளமானதுமான வாழ்க்கையை நிராகரிக்கின்றாள். காம உணர்வுகள் அவள் மனதில் உருவாகிறபோதெல்லாம், தான் பதிவுத் திருமணம்  செய்தவுடனுடன்கூட தனித்திருந்த பல சந்தர்ப்பங்களிலும் தன்நிலை தவறாதவள். சற்றே அறிமுகமான ஒரு ஆடவனுடன் அவனை நிர்ப்பந்தப்படுத்தி அவனுடன் உடலுறவு கொள்கிறாள். பின் அவனை போராளியாக மாற தூண்டுகிறாள். அவன் மரணமடைந்ததும் அவன் மரணத்திற்கு தானே காரணம் என்று மனம் வெதும்புகிறாள். கனடாவில் அவள் தாயும் சகோதரியும், ஜெர்மனியில் அவள் முன்னாள் காதலன். இவர்கள் அனைவரது அழைப்பையும் நிராகரித்த அவள் முகாம்களில் உள்ள அகதிகளுக்கு மருத்துவ சேவை செய்வதில் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறாள். இது இந்நாவலின் அதிக பக்கங்களில் இடம்பிடித்துள்ள ராஜி என்கிற ராஜலட்சுமியின் போராட்ட வரலாறு.

போர்க் கால இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்மையவாத பண்புகளைக் கொண்டிருப்பது இயல்பானது. இதற்கு நேர்மாறாக ஒரு பெண்ணை மையமாக வைத்து தேவகாந்தன் இந்நாவலை பின்னியிருப்பது உண்மையில் ஒரு சவாலான விடயம். இங்கு ராஜலட்சுமி மட்டுமல்ல, அவள் தாய் மகேஸ்வரி, மச்சாள் தமிழரசி, மாமி வாலாம்பிகை, தோழி ஜெஸ்மின், சிங்கள இனத்தவளான சுவர்ணா என்று பெண்மையவாதப் பாத்திரங்களே அதிகமுள்ள நாவல், பல்வேறு அத்தியாயங்களில் அவர்களையே பிரதான பாத்திரங்களாககொண்டு நகர்கிறது.

அடுத்து தேவகாந்தன் தன் மொழி ஆளுமையின் உச்சத்தை தொடும் இடம், சங்கரானந்த தேரரை பிரதான பாத்திரமாகக்கொண்டு விரியும் இன்னொரு கிளைக்கதையில், நாகவிகாரையின் புத்த சுவாமியாகிய சங்கரானந்த தேரர், இந்த அர்த்தமற்ற போரின் அழிவுகள் கண்டு மனம் வெதும்புபவர். இதை நிறுத்துவதற்காக இவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் உண்மையைக் கண்டடைவதற்காக மேற்கொள்ளும் பயணங்களும் அதற்காக அவர் சந்திக்கும் மனிதர்களுமாக இக்கதை விரிவடைகின்றது.

இது குறித்து எழுத்தாளர் ஞானி அவர்கள் தனது பின்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘தேவகாந்தன் படைத்துள்ள அற்புதமான பாத்திரங்களில் ஒருவர் சங்கரானந்த தேரர். தமிழ் நாவல்கள் முழுவதும் தேடினாலும் இவருக்கு நிகரான ஒரு துறவியை நம்மால் சொல்ல முடியாது.’

இங்கு இன்னுமொரு துறவி வருகின்றார். அவர் குணானந்த தேரர். சங்கரானந்த தேரர் ஒரு நீதியின், அறத்தின் வடிவமென்றால் குணானந்த தேரர் ஒரு தீமையின், கொடூரத்தின் உச்ச வடிவம். பல தசாப்த காலங்களாக தொடரும் இன முரண்பாடுகளின், பகைமைகளின் ஊற்று இவர். ஞானி அவர்களின் வார்த்தையில் சொல்வோமானால் குணானந்த தேரர் போன்ற ஒரு கொடுமையான துறவியை தமிழ் நாவல் எவற்றிலும் நாம் காணமுடியாது. முக்கியமாக சுவர்ணா என்ற பெண் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தபோது, அவளது இறந்த உடலுடன் புணர்வதுபோன்ற காட்சி கொடுமையின் உச்சகட்டம். அது இனவெறி கொண்டலையும் பௌத்த அடிப்படைவாதமானது தனது சிந்தனையின் விரிவாக்கத்திற்கு தடையாக உள்ள எவற்றையும் எப்படியும் எதிர்கொள்ளும் என்பதையும், எந்த எல்லைகளையும் தாண்டும் என்பதையும் உறுதியாக உணர்த்தி நிற்கின்றது.
இக்கதையில் மேலும் இவர்களுடன் சிங்கள இடதுசாரிகளான நிமால் பெரேரா, அனில் என்பவர்களும் திரவியம் என்ற தமிழ் இடதுசாரியும் இணைந்து கொள்கின்றனர். ‘ஜே.வி.பி. ஒரு தனிமரமல்ல, அது ஒரு தோப்பு. அதை லேசில் அழித்துவிட முடியாது. ஈரப்பலா மரங்களை தென்னிலங்கையிலிருந்து அழித்துவிட முடியுமென்று நினைக்கிறாயா?’ என்ற நிமல் பெரேராவின் வார்த்தைகள் இன்னமும் தென்னிலங்கையில் கனன்று கொண்டிருக்கும் இடதுசாரி சிந்தனையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேலும் கிழக்கு மாகாணத்தின் ஒரு மூலைக் கிராமம் ஒன்றில் ஒரு நள்ளிரவில் யாசின் என்ற ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு அவளது துர்நடத்தைக்கான தண்டனை என்று கூறி ஜிகாத் அமைப்பினர் வழங்கும் ஒரு கோர தண்டனையான ஒரு சம்பவத்துடன் மட்டும் கூடிய கதையொன்று மிகச் சிறிய குறுங்கதையாக வந்துபோகின்றது.

அடுத்து இவரது படைப்பு மொழி குறித்து பார்ப்போமானால் அதிலும் தேவகாந்தன் தனது மொழியாளுமையை ஒரு உன்னதமான தளத்தில் பிரயோகிப்பதை அவதானிக்க முடியும். பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம், மாயா யதார்த்தவாதம் என்ற பூச்சாண்டிகள் எதனையும் காட்டி கரடுமுரடான எழுத்து வடிவில் வாசகனைப் பயமுறுத்தாமல் தனக்கேயான ஒரு எழுத்து முறைமையினை உருவாக்கி, மண்வாசனையுடன் கூடிய யாழ்ப்பாண வட்டார மொழி வழக்கை மிக லாவகமாகக் கையாளுகிறார். யாழ் மண்ணின் காட்சிப் புலத்தை தனது வலிமை மிகுந்த எழுத்துக்களால் மாற்றி அதனை வாசகனின் கற்பனைப் புலத்துடன் பொருத்துவதில் தேவகாந்தன் மிகப் பெரிய வெற்றியை ஈட்டுகிறார். பல்வேறு பிராந்தியங்களிலும் பிரதேசங்களிலும் இக்கதை பயணிக்கும்போது அம் மாறுபட்ட மண்ணின் காட்சிப் புலங்களையும் தன் வியக்கவைக்கும் மொழியில் கையாளும் தேவகாந்தன், தமிழகத்தில் கதை பயணிக்கும்போது கொஞ்சம் தடுமாறுவது தெரிகின்றது. முக்கியமாக சென்னை எனும் பெருநகரத்தின் காட்சிச் சித்திரம் கதையை வாசிக்கும்போது எம் கற்பனைப் புலன்களுக்கு தெளிவாகப் புலப்படவில்லை. இதேவேளை ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை ஒரு சிறிய மறைமுகமான தகவல் மூலம் ஒரு திகதியை மட்டும் குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே எமக்கு தெரியப்படுத்துவது, ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளரால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய ஒரு எழுத்து வடிவம்.

ஒரு தடவை தி.ஜானகிராமன் குறித்து விமர்சனம் ஒன்றை வைக்கும் சுந்தரராமசாமி அவர்கள், ‘யதார்தங்களின்மீது கனவின் பனிப் படலத்தை விரித்த மிக அற்புதமான கலைஞன் தி.ஜானகிராமன்’ என்று குறிப்பிடுகின்றார். இது அனைத்து கலைஞர்களும் எதிர்கொள்ளும் விமர்சனம். அனைத்து கலைஞர்களும் எதிர்கொள்ளப்படவேண்டிய விமர்சனம். இதை தேவகாந்தனும் எதிர்கொள்கிறார். அழகியலும் யதார்ததமும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் முக்கியமான புள்ளிகளில் இதுவுமொன்று.

தேவிபாரதி தனது முன்னரையில், ‘இந்நாவல் திட்டவட்டமாக ஈழப்போரைப் பிரதிநிதித்துவப் படுத்திய சிங்கள ராணுவத்திடமிருந்தும், போராளிகளிடமிருந்தும் விலகி நிற்கிறது. கலவரங்கள், வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள், போராளிகளின் மயிர்க் கூச்செறியும் தாக்குதல்கள் என வசீகரத்தைத் தரும் எதனையும் காட்சிப்படுத்தவில்லை. அந்த இருபதாண்டுகளில் ஈழத் தமிழ் சமூகம் சந்தித்த பேரழிவின் அவலங்கம் கூட காட்சிப்படுத்தப்படவில்லை. போர் அதன் இயல்பிலேயே மனித மனங்களை கிளர்ச்சியுறச்செய்வது. அந்த கிளர்ச்சியிலிருந்து தப்பிச் செல்வது எழுத்தாளன் முன்னுள்ள சவால். அந்த சவாலை எதிர்கொள்வதில் தேவகாந்தன் வெற்றி பெற்றுள்ளார்’ என்கிறார்.

போரும் மரணமும் படுகொலைகளும் மலிந்த ஒரு பூமியிலிருந்து அவையனைத்திலும் இருந்து விலகி ஒரு வெற்றிகரமான படைப்பை உருவாக்குவது சாததியமா? இப்படி ஒரு கேள்வி பல்ர் மனதிலும் எழுவது இயல்பு. இதை தேவகாந்தன் சாத்தியமாக்குகின்றார்.

எப்படி?

தனது நுட்பமான மென்மையான தெரிவுகளின் மூலமும், மிகவும் சாதுர்யமான சாமர்த்தியமான கதை நகர்த்தலின் மூலமும் அவர் இதை மேற்கொள்கிறார். முதலாவதாக அவர் மிகவும் புத்திசாலித்தனமாக தனது களத்தினை தெரிவு செய்கின்றார். இந்த இருபது வருடப் போரில்  எத்தனையோ பேரழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்த பிரதேசங்கள் இருந்தபோதும், அவர் வட பகுதியிலேயே அதிகம் பாதிக்கப்படாத அல்லது மிக குறைந்தளவே பாதிக்கப்பட்ட ஒரு களத்தினை, நயினாதீவினை தனது கதையின் மையமாக தெரிந்துகொள்கிறார். அது மட்டுமன்றி கிளர்ச்சிகளில் இருந்து விலகுமுகமாக போரும் அது ஏற்படுத்திய நெருக்கடிகளினதும் அவலங்களினதும் யதார்த்தங்கள் ஒரு திசை வழியே உறைந்து கிடக்க, அவர் தனது கதை மாந்தர்களை இன்மொரு கனவு வழிப்பதையில் அழைத்துச் செல்கிறார். இதனால்தானோ என்னவோ குறிகட்டுவான் படகுத்துறை இந்நாவலில் ஒரு முக்கிய களமாக வந்து போயுள்ளபோதிலும் ‘குமுதினிப் படகு’ படுகொலைபற்றி இந்நாவலில் குறிப்பேதும் இல்லை.

பல அத்தியாயங்கள் புகை மூட்டம் நிறைந்த காட்சிப் படிவங்களாக எமக்குத் தெரிகின்றன. இவர் தான் வாழ்ந்து அனுபவித்த காலங்களின் ஊடும், பிரதேசங்களின் ஊடாகவும் தனது கதை மாந்தர்களை நகர்த்திச் செல்வதாலோ என்னவோ மறைக்கப்பட முடியாத பல சம்பவங்கள் இங்கு மறைக்கடிக்கப்படுகின்றன. அல்லது மழுங்கடிக்கப்படுகின்றன. இங்கு யதார்தங்கள் சிறை வைக்கப்படுகின்றன. இது வீரதீர சாகசக் கதை அல்ல, சாமான்ய மனிதர்களின் துன்பங்களையும் துயரங்களையும் பேசும் கதை என்று சொல்லப்படுகின்றது. ஆனால் சாமான்ய மனிதர்களின் மரணங்களுக்கு காரணமான இந்த இருபது வருட கால வரலாற்றில் விரவிக் கிடக்கும் எண்ணிறைந்த கொலைக் களங்கள் பற்றி (செம்மணி தவிர்த்து) இந்நாவல் அலட்டிக்கொள்ளவே இல்லை. அது மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் வேரோடும் வேரடி மண்ணோடும் ஊறிப்போயுள்ள சாதீயமும் அங்குள்ள தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்படுபவர்களின் குரல்களும் இந்நாவலில் தீண்டப்படாமல் சாதுரியமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன.

‘நாட்டிலிருந்தோரைப்பற்றியோ போராளிகளைப்பற்றியதோவான கதைகளினூடாகவன்றி அகதியாய் இந்தியாவையும் மேற்குலக நாடுகளையும் தஞ்சமடைந்தோரின் இந்த பதிய வரலாற்றின் இருப்பை எழுத்து வடிவமாக்க முயன்றேன்.’ இது தேவகாந்தன் இந்நூலின் என்னுரையில் குறிப்பிடுவது. ஆனால் இந்தியாவிற்கு வந்த உண்மை அகதிகளின் கதையின் நிஜ வாழ்வு ஒரு புறமிருக்க கனவுச்சிறையில் உள்ள சாமான்ய மனிதர்களின் கதைகளோ வேறுவிதமாக அமைகின்றது. இங்குள்ள அகதி முகாம்கள் பற்றியும் ஈழ ஏதிலியர் புனர்வாழ்வுக் கழகம் பற்றியும் இடையிடையே குறிப்பிடுகின்றது. ஆனால் இங்கு ஈழ அகதிகள் மீது பொலிசாரினாலும் அதிகாரிகளினாலும் பிரயோகிக்கப்பட்ட அவமானகரமான அதிகார துஷ்பிரயோகங்கள், கியூ பிரிவு பொலிசார், அவர்களது விசாரணைகள் , மிரட்டல்கள், சித்திரவதைகள், சித்திரவதைக் கூடங்களான சிறப்பு முகாம்கள்பற்றிய தகவல்கள் அனைத்துமே இந்நாவலின் வடிவமைதியோ அல்லது ஒழுங்கமைதியோ கருதி மிகவும் சாதுரியமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இந்நாவல் தமிழகத்தில் பயணிக்கும் இடங்களும் சம்பவங்களும் ஒரு தமிழக மெகா சீரியலை அல்லது நாம் சிறுவயதில் படித்த வாஸந்தி, இந்துமதி போன்றோரின் நாவல்களை எமக்கு ஞாபகப்படுத்துகின்றன.

மேலும் சில முக்கியமான அரசியல் சம்பந்தமான உரையாடல்களும் ஆசிரியர் உரைகளும் ஒரு தணிக்கைக் குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு பின் வெளிவருவதுபோன்று மிகமிக அவதானமாகவும் சாமர்த்தியமாகவும் எழுதப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்களான செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாச போன்றவர்களின் பெயர்களும், அரசியல் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ், யூ.என்.பி. என்பனவும் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் எந்த ஒரு போராளி இயக்கத்தினது பெயர்களோ அல்லது இயக்கத்தலைவர்கள் போராளிகளது பெயர்களோ குறிப்பிடப்படாமல் (இறுதிப் பாகங்கள் தவிர) நாவலின் ஒழுங்கமைதி மிக நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பல அரசியல் சமூக வரலாற்று நாவல்கள் எழுதிய தேவகாந்தன்போன்ற அனுபவம் வாய்ந்த ஒரு சிலரால் மட்டுமே கையாளப்படக் கூடிய அற்புதமான படைப்பு மொழி.

இறுதியாக நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சுந்தரராமசாமியின் சொற்களை இரவல் வாங்கி ஒரு கடைசி வார்த்தை: ‘யதார்த்தங்களின் மீது கனவின் பனிப்படலத்தை விரித்த மிக அற்புதமான கலைஞன் தேவகாந்தன்.’
00000

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி