கலித்தொகைப் பாடல்கள் 32
ரசனைக் காட்சிகள்: 32 ஒரு பெருங் கருங் கூத்து! ஏடி, நேற்றிரவு ஒரு பெரும் வேடிக்கை சம்பவித்தது. எங்களூரில் வழக்கமாக நடப்பதுதானென்றாலும், நேற்று நடந்ததோ ஒரு பெருங் கருங்கூத்து. மனிதரெல்லாரும் மடிந்துவிட்டதுபோல் இந்த உலகம் இருளிலும் அமைதியிலும் இருந்துகொண்டிருக்கிறது. அழகிய போர்வையொன்றால் என்னை மூடிக்கொண்டு என் காதலன் சொன்ன குறியிடத்தில் அவனுக்காக நான் நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது, முண்டிதமான தலையும், போர்த்த மேனியும், நோயில் அழுகி அழுகி குறைபட்ட அங்கங்களோடுமாய், ஊரில் இருக்கிறானே ஒரு முடமான பார்ப்பனக் கிழவன், அவனிடம் எச்சரிக்கையாயிருக்கும்படி நீகூடச் சொல்லியிருந்தாயே, அவன் வந்தெதிர்ப்பட்டான். என்னை அதில் கண்டு குழைந்தான்; பணிந்தான்; ‘நேரமற்ற இந்த நேரத்தில் யார் இவ்விடம் நிற்பது?’ என்றான். வைக்கோலைக் கண்ட மாடுபோல விலகிப்போகாமல் அதிலேயே நின்றுகொண்டு, ‘பெண்ணே, வெற்றிலை போடுகிறாயா, இந்தா’வென வெற்றிலைப் பையை எடுத்து என்புறம் நீட்டினான். நான் ஒன்றும் பேசாது நின்றுகொண்டிர...