குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில் 2

1 கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே. -இறையனார் ‘பூந்துகள் ஆய்ந்துண்ணும் தும்பியே, உண்மை கூறு; இவ்வரிவை கூந்தலிலும் மணமுள்ள மலரை நீ எங்கேனும் அறிந்ததுண்டோ?’ எனச் சுருக்கமாக இப்பாடலின் அர்த்தத்தை விளக்கலாம். புணர்ச்சியின் உவகை வகையானதும், குறிஞ்சித் திணைக்கானதுமான இக் குறுந்தொகையின் இப் பாடலுக்கு பின்னால் ஒரு கதையும் பிறந்தது பிழையாக. அதுபற்றியே இதில் முதன்மையாக நோக்கப்படவுள்ளது. குறுந்தொகை பாண்பாடற் தொகுப்பில் இரண்டாவதாய் இடம்பெற்றிருகக்கிற பாடலிது. இறையனார் பாடியதாகச் சொல்லப்பட்டுள்ளது. பாடலென்னவோ சிறந்த பாடலாகத்தான் தோன்றுகிறது. ஆயினும் இந்த சிறப்பு என்கிற அடைக்கு மேலான புகழை இது பெற்றிர...