யாருடன் உரையாடி மனமாறல்கூடும்?

எப்படியெல்லாம் தொடர்ந்தேர்ச்சியாக இது நடக்கிறது? வாழ்வின் மீதான தன் அதிகாரத்தை காலதேவன் இப்படித்தான் நிலைநிறுத்துகின்றானா? நேற்றுப்போல் இருக்கிறது, கவிஞர் திருமாவளவனின் மறைவு. இப்போது… வெ.சா! தாங்குவது சிரமமாகவே இருக்கிறது. வாழ்க்கையை… கழியும் நாட்களை… அவற்றின் கழியும் விதங்களை எண்ண மனது அவாவி நிலைநிற்க மறுத்துச் சலிக்கிறது. 2003இல் நான் தமிழகத்தைவிட்டு இலங்கை புறப்படும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எனக்கும் வெ.சா.வுக்கும் நிறைந்த தொடர்பு இருந்தது. அப்போது அவரது வீட் டுக்கு அண்மையில் மடிப்பாக்கத்தில்தான் நானும் குடியிருந்தேன். கூட்டங்களுக்கு கூடிச் செல்வதிலிருந்து ஓய்வுநேரங்களில் சந்தித்து உரையாற்றுவதுவரை வாரம் தவறாமல் நாங்கள் ஒரு தொடர்பில் இருந்திருந்தோம். நான் இலங்கையிலிருந்து கனடா சென்ற பிறகும் எங்கள் தொடர்பு தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் இருந்துகொண்டேயிருந்தது. இறுதியாக முகநூலிலும். மடிப்பாக்கத்தில் இருந்த இறுதி நாட்களில் அவரது மனைவியின் பிரிவு அவரை வெகுவாக வாட்டியிருப்பினும், பெங்களூரு சென்றபிறகு அவர் திடமாகவே இருந்ததாகத்தான் தெரிந்தது. ...