
கறாரான முடிவுக்கு வராத கலகத்தின் ஆதரவாளரா தேவகாந்தன் ? தேவகாந்தனின் ' எதிர்க்குரல்கள்' உரைக்கட்டுத் தொகுப்புப் பற்றிய ஒரு ' கலக்கப் பார்வை' ! இ . இராஜேஸ்கண்ணன் -------------------------------------------------------------------------------------------------------------------------- கார்ல் மார்க்ஸ் தனது இயங்கியல் சிந்தனைக்கான அடிப்படை மெய்யியல் தளத்தை ஹெகல் , ஃபுவர்பாக் என்பவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார் . இயங்கியல் தத்துவத்தின் அடிப்படைக் கருத்து ( Thesis ), எதிர்க்கருத்து (Anti-Thesis), புதுக்கருத்து (Synthesis) என்பவற்றின் தொடருறுதன்மையை விளக்குகின்றது . வரலாற்றின் வளர்ச்சியில் இந்த இயங்கியலை கண்டுகொள்ளலாம் . கருத்துநிலை உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும்கூட இந்த இயங்கியல் உள்ளுறைந்திருக்கும் . கருத்து ஒன்றுக்கு எதிர்க்கருத்து உருவாகும் அது இருந்துவந்த கருத்துநிலையை புதிய தளத்துக்கு இட்டுச்செல்லும் என்ற சாதாரண இயங்கியலை மறுத்துரைப்பவ...