அஞ்சலிக்கான வெளி - தேவகாந்தன்

அண்மையில் கி.ரா.வின் மறைவின் உடனடிப் பின்னால், அவரது அந்திம கிரியைகளின் முன்னாலேயே, நண்பர் வண்ணநிலவன் வெளியிட்ட கி.ரா.மீதான அபிப்பிராயம் அதிர்ச்சியாகவிருந்தது. ஆனால் அதில் உண்மையும் இல்லாமலில்லை. வண்ணநிலவன் தெரிவித்த கருத்துக்களின் வரிக்கு வரியான அர்த்தத்திலன்றி, ஒரு பிரபலத்தின் மறைவின் முதல் தகவலிலேயே அந்தப் பிரபலமே தாங்கமுடியாத புகழாரங்களைக் குவித்துவிடுகிறதை பொது ஊடக வெளியில் நிறையவே காணக்கூடியதாகவிருப்பதைக் குறிப்பிடுகிறேன். அந்த ஒவ்வாமை சில அபிப்பிராயங்களை அசந்தர்ப்பமாய் வெளிப்படுத்திவிடுகின்றன என கொள்ளமுடியும். அண்மையில் பாடகர் எஸ்.பி.பி. காலமானபோதும், அதற்குச் சற்று முன்னர் கொரொனா காலத்திலேயே இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா மரணித்தபோதும் தமிழிசைக் கடல் வற்றிவிட்டது, இலங்கைப் புனைவெழுத்தின் உச்சம் சரிந்துவிட்டது என்பதுமாதிரியாக பொது ஊடக வெளியில் வெளியிடப்பட்ட அபிப்பிராயங்கள் கொஞ்சம் மனத்துக்கிசைவில்லாததாக இருந்ததை நான் உணர்ந்தேன். அவ்வாறேதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இறந்தவரை ஒரு கணம் எண்ணி பிரலாபப்படக்கூட ஒரு வெளியை பொது ஊடக வெளிகள் விட்டுவ...