எஸ்.போஸ் கவிதை

மன அலுப்பை நீக்க கவிதையேதாவது வாசிக்கலாமென எடுத்த நூல் ‘எஸ்.போஸ் படைப்புக’ளாக இருந்தது. அதிலுள்ள கவிதை இது. ஏதோவொரு இத் தருணப் பொருத்தம் கருதி அக் கவிதை இங்கே : புத்தகம் மீதான எனது வாழ்வு கொஞ்சம் புத்தகங்களோடு தொடங்கியது வாழ்க்கை புத்தகங்களின் சொற்களில் சோறு இல்லை என்பதே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க. யாரும் நம்பவில்லை தமது வாழ்க்கை புத்தகங்களோடுதான் தொடங்கியதென்பதை அவர்களே அப்படி நம்ப யாரையும் அனுமதிக்கவில்லை. புத்தகங்களில் சோறு இல்லை புத்தகங்களில் துணி இல்லை அணிவதற்கு தங்க ஆபரணங்கள் தானும் இல்லை புத்தகங்களே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க. நான் புத்தகங்களோடு வாழ்கிறேன் என்பதையும் புத்தகங்களில் தூங்குகிறேன் என்பதனையும் இதயம் சிதையும் துயரின் ஒலியை புத்தகங்கள் தின்னுகின்றன என்பதனையும் ஓ கடவுளே! யாரும் அதை நம்பவில்லை என்னையம் அனுமதிக்கவில்லை. புறாக்கள் வாழ்ந்த கூரைகளில் உதிர்ந்து கிடக்கின்றன வெண் சிறகுகள். -எஸ்.போஸ்