எனக்குப் பிடித்த சிறுகதைகள்: 10 (நந்தினி சேவியரின் 'மேய்ப்பன்')
எனக்குப் பிடித்த சிறுகதைகள்.... 1970 இல் வெளிவந்த சிறுகதை இது. அறுபது எழுபதுகளில் இதுதான் எழுத்தின் முறைமையாக ஆகிக்கொண்டிருந்தது. இயற்பண்பு வாத்திலிருந்து யதார்த்த வாத நடை உருப்பெற்ற அக்காலத்தில் பல முற்போக்கு எழுத்தாளர்களும் இவ்வண்ணமே முயன்றார்கள். நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' மற்றும் 'அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' கூட எனக்குப் பிடிக்கும். அண்மையில் 'நந்தினி சேவியர்: படைப்புகள்' வாசித்தபோது இந்தக் கதையும் ஏதோவொரு விதத்தில் பிடித்திருந்தது. மேய்ப்பன் - நந்தினி சேவியர் “டாண்… டாண்! டாண்!” புனித தோமையார் ஆலய திருந்தாதி மணி இடையிடையே ஒலிக்;கிறது. இன்று ஞாயிற்றுக் கிழமைதான். ஆனால் இந்தக் கோவிலில் பூசை நடக்காது. பூசை நடைபெற்று இரு வருடங்களாகிவிட்டன. கோவிலில் பூசைமட்டும் நடைபெறுவதில்லையே தவிர, காலந்தப்பாது திருந்தாதிமணி மட்டும் ஒலிக்கும். இந்த ஒழுங்கின் காரணகர்த்தா சங்கிலித்தாம் அவர்கள். அவர் இல்லாவிட்டால்…? அவ்வூரின் கேந்திரப் பகுதியாக உள்ள கடற்கரைப் பிராந்தியத்தில் விரிந்து இருக்கும் கடற்கரையின் எதிர...