நமது முகங்களை நோக்கி... (கனவுச் சிறையின் மதிப்புரை) எஸ்.எல்.எம்.ஹனிபா
Slm Hanifa 10 டிசம்பர், 2014 · சென்ற மாதம் நமது ஆளுமை மிக்க படைப்பாளிகளில் ஒருவரான அன்பன் தேவகாந்தனின் கனவுச் சிறை என்ற மகாநாவலை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாவலுக்கான ஒப்புநோக்கும் பணியை என்னிடம் காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன் கையளித்த போது, பெரும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும், உள்ளே ஒரு தயக்கம் கண் சிமிட்டியது. காரணம், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நமது நாவல் இலக்கிய வரலாறும் அதனால் பெற்றுக் கொண்ட ஆக்கினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அனுபவங்களின் ஆக்கினைகளுடன்தான் நானும் எனக்கு உதவியாக என் அருமை அன்பன் இரா சிவலிங்கம் (ஆசிரியர், கண்டி திருத்துவ கல்லூரி) அவர்களையும் இணைத்துக் கொண்டு இருவருமாக மாறி மாறி வாசிக்கத் தொடங்கினோம். தேவகாந்தனின் அழகிய மொழியும், கதையை அவர் நகர்த்திச் செல்லும் பாங்கும் ஒரு தீர்க்கதரிசியின் எதிர்வுகூறலும் ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு புத்தம் புதிய சாளரத்தைத் திறந்து காட்டிற்று. கனவுச் சிறை 982 பக்கங்களில் 5 பாகங்களாக ஒரு மகா நாவலாக விரிகிறது. 1981-83 ஆகிய கால கட்டங்களின் கதையை "திருப்படையாட்சி" எனும் மகுடத்தில் முதலாம் பாக...